திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
Remove ads

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் (Nallur Kalyanasundaresar Temple) தமிழ்நாட்டில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ள, சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற, காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 20-ஆவது சிவத்தலமாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருநல்லூர் கோயில், பெயர் ...
Remove ads

மூலவர் சிறப்புகள்

இங்கு சுயம்புவாகத் தோன்றிய மூலவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறிமாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என அழைப்பார்கள். இங்குதான் இறைவன், திருநாவுக்கரசருக்கு திருவடி சூட்டியதாக கருதப்படுகிறது. ஆதலால் பெருமாள் கோயிலைப் போல சடாரி வழக்கம் இங்கு உள்ளது. அமர்நீதி நாயனாரை சிவன் இத்தலத்தில் ஆட்கொண்டார். குந்திதேவி தன் தோசம் நீங்க இத்தலத்தில் நீராடினாள். அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சியைக் காட்டியருளினார். அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூலவரின் பின்புறத்தில் காணலாம்.[1]

Remove ads

தல சிறப்புகள்

ஆதிசேசனுக்கும் வாயுபகவானுக்கும் நடந்த சண்டையின்போது கயிலை மலையிலிருந்து வாயுவால் தூக்கி எறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத்தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். திருவாருரில் தற்போது வீற்றிருக்கும் தியாகராஜ பெருமானை, முசுகுந்தன் இந்திரனிடம் இருந்து பெற்று இறைவனின் அருளின்படி இத்தலத்தில் மூன்று நாட்கள் வைத்து பூசை செய்து திருவாரூரில் பிரதிஷ்டை செய்தார்.[2] பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை மட்டும் வலம் வந்த திருத்தலம். எனவே லிங்கத்தின் மீது சில துளைகள் உள்ளன[3] திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில் தல வரலாற்றில் இவ்வரலாறு கூறப்படுகிறது.[4]

Remove ads

கோயில் அமைப்பு

கோட்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.[2] கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து, பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து ஒரு கோபுரம் உள்ளது. வெளிச்சுற்றில் நந்தவனம், மடப்பள்ளி, அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னதி, விநாயகர், நடராசர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் 63 நாயன்மார்கள், கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ண லிங்கம், சுமதி லிங்கம், வருண லிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து நடராஜர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், மகாலிங்கம், பானலிங்கம், ஜுரஹரேஸ்வரர், ஜுரஹரேஸ்வரியைக் காணலாம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உச்சிஷ்ட கணபதி, கைலாய கணபதி, ஞான தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்று மண்டத்தில் உமாமகேசுவரர், சங்கர நாராயணர், லிங்கோத்பவர், சுஹாசனர், நடராஜர், ரிஷபாரூடர் உள்ளிட்ட சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூலவர் கல்யாணசுந்தரரேஸ்வரர் கட்டுமலை மீது, கிழக்கு நோக்கிய சன்னதியில் உள்ளார். அவருக்கு எதிரே பலிபீடமும், நந்தியும் உள்ளன. அருகே கணபதி உள்ளார். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். மூலவர் சன்னதிக்குச் செல்லும் வாயிலின் பக்கத்தில் அம்மன் சன்னதி, தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. அடுத்து முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் பள்ளியறை உள்ளது.

சப்தஸ்தானம்

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[5]

அமர்நீதி நாயனார் மடம்

அமர்நீதி நாயனார் தமது தலமாகிய பழையாறையிலிருந்து இங்கு குடிபுகுந்து திருமடம் உருவாக்கி, அடியார்களுக்கு அமுதூட்டியும், திருவிழாச் சேவித்தும் வாழ்ந்தனர். அவரது திருமடம் கோவிலுக்கு வெளியே குளத்தின் தென்மேலைக்கரையில் சிதிலமடைந்த நிலையில் இப்போதும் உள்ளது. இதனைச் செப்பனிட்டுக் காத்துப் போற்றல் சைவர்களின் முக்கியக் கடமையாகும்.[6]

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.
பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே..

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே..

Remove ads

இவற்றையும் பார்க்க

சான்றுகள்

வெளி இணைப்புகள்

புகைப்படங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads