திருவள்ளுவர் ஆண்டு
தமிழகத்தில் பயன்படுத்தப்படும் நாட்காட்டி முறை From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.ஊ. 2025 ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி. 2056 ஆம் ஆண்டு ஆகும்.

Remove ads
வரலாறு
திருவள்ளுவர் திருநாள்
மதம் சாராத திருவள்ளுவரை, தமிழின் மிகச்சிறந்த வரலாற்று ஆளுமையாக முன்வைப்பதில் தமிழறிஞர்கள் ஒருமித்த முடிவெடுத்தனர். இதன் பயனாக அவரை முன்னிறுத்தி "திருவள்ளுவர் திருநாள்" என்னும் பண்டிகையை தமிழர் யாவரும் கொண்டாடவேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 1935 சனவரி 17ஆம் தேதி, இதற்கான கால்கோள் இட்டவர்கள், காழி சிவகண்ணுசாமிப்பிள்ளையும், பத்மஸ்ரீ திரு.வ.சுப்பையாவும்.[1] அவர்களின் முயற்சியில் "திருவள்ளுவர் திருநாட் கழகம்" எனும் கழகமொன்று அமைக்கப்பட்டு, தமிழகம், அயல் மாநிலங்கள், அயல் நாடுகளில் அதைக் கொண்டாடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. திருவள்ளுவர் பிறந்த தினமான வைகாசி அனுடத்தை மையமாக வைத்து, 1935 மே 17,18 ஆகிய தேதிகளில், சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மறைமலையடிகள், தெ.பொ.மீ, திரு.வி.க முதலான ஏராளமான தமிழறிஞர் முன்னிலையில் திருவள்ளுவர் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.[2]
திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போகத் துவங்கிய நிலையில், ஈழத்தமிழ் அறிஞர் கா. பொ. இரத்தினம் 1954இல் எடுத்த முயற்சிகளின் பயனாக, தமிழகத்திலும் இலங்கை, மியன்மார் உள்ளிட்ட அயல் நாடுகளிலும், திருவள்ளுவர் திருநாள் மீண்டும் கொண்டாடப்பட ஆரம்பித்தது. வைகாசி அனுடமான 22 மே 1959இலும் இது இடம்பெற்றதை அறியமுடிகின்றது.[3]
தையில் திருவள்ளுவர் திருநாள்
தைப்பொங்கலை நீண்ட நாளாகவே 'தமிழர் திருநாள்' என்று போற்றும் வழக்கம், தமிழர் மத்தியில் உண்டு. தமிழர் திருநாள் தைப்பொங்கல் என்பதால், அன்றே திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படவேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் சொன்னவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம். இதை முன்மொழிந்து 1954இல், அவர் திருச்சி வானொலி நிலையத்துக்கும் கா.பொ.இரத்தினத்துக்கும் எழுதிய கடிதத்துக்கு, கா.பொ.இரத்தினம் கடும் கண்டனம் தெரிவித்தார்.[1][2] வைகாசி அனுடம் ஆண்டுக்காண்டு மாறுபடலாம் என்பதால் 1966இல், சூன் இரண்டாம் தேதியை, ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடுவதற்கான அரச விடுமுறை அளிக்கப்பட்டது.[4] எவ்வாறெனினும் இது 1971இல் தை முதலாம் தேதிக்கு மாற்றப்பட்டது.[5]
திருவள்ளுவர் ஆண்டு
![]() |
![]() | |
திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியோரில் முதன்மையான இருவர். சோமசுந்தர பாரதியார் (இடம்), கி. ஆ. பெ. விசுவநாதம் (வலம்) |
தமிழில் ஆண்டுகளைக் குறிக்க பல ஆண்டுத்தொடர்கள் பயன்பட்டுள்ளன. சக ஆண்டு, விக்கிரம ஆண்டு, கலி ஆண்டு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் பண்டு தொட்டே கொல்லம் நாட்காட்டி பயன்பட்டு வந்தது. ஆனால், இவை எதுவுமே தமிழர்க்குத் தனித்துவமானவை அல்ல. இந்நிலையிலேயே தமிழருக்கென சிறப்பான நாட்காட்டி ஒன்றை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டது.
மறைமலையடிகள் ஏற்கனவே திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பொ.ஊ.மு. 31 என்று கணித்திருந்தார்.[6] சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ, கலைஞர் கருணாநிதி, வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடி வந்த கா.பொ.இரத்தினம் உட்பட பெரும்பாலான தமிழறிஞர்கள் சித்திரைப்புத்தாண்டு ஆரியர் திணித்தது என்ற கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.[7] இந்தப்பின்னணியில் கருணாநிதியின் தி.மு.க அரசு, தைத்திருநாளிலேயே ஆரம்பமான திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அந்நாளில் "திருவள்ளுவர் ஆண்டு" எனும் ஆண்டுத்தொடரை அறிமுகப்படுத்தியது.[5] 1971இல் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாட்டு அரசிதழில் வெளியாகி, 1972இல் நடைமுறைக்கும் வந்தது. 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், அதை சகல அரச ஆவணங்களிலும் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார்.
Remove ads
தைப்புத்தாண்டு
தையே தமிழர் புத்தாண்டு என்ற குரல் 2000களில் மிக வலுவாக எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்கள், தை புத்தாண்டு என்று பச்சையப்பன் கல்லூரியில் 1921இல் மறைமலையடிகள் முதலான நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் முன்மொழிந்தார்கள் என்று ஆதாரம் சொன்னார்கள்.[8][9] பச்சையப்பன் கல்லூரி, மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் ஆகிய விவரங்கள் உண்மையே எனினும், 1921 என்ற ஆண்டோ, அந்த ஒன்றுகூடல் தைப்புத்தாண்டுக்கானது என்பதோ முழுக்கத் தவறான ஒன்று.[1][2][5] தமிழறிஞர்கள் ஒன்றுகூடிப் பரவலான ஆதரவு தெரிவித்தது, 1935இலும் 1954இலும் இருதடவை இடம்பெற்றிருக்கிறது. இரண்டும் வைகாசியில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதற்காகவே என்பதைக் காணலாம்.[5]
தமிழக அரசின் அரசாணையுடன் 2008இல் தைப்புத்தாண்டு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டு, 2012 ஆட்சிமாற்றத்தில், மீண்டும் சித்திரைக்கே தமிழ்ப்புத்தாண்டு மாற்றப்பட்டது. எனினும் சமகாலத்தில், தைப்புத்தாண்டு எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ் சார்ந்த தேவைகளின் போது, திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தி வருகிறார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றிய திருத்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலும், இலக்கிய அரசியல் சார்ந்த தன்னிச்சையான முடிவுகளாலும், அது முன்மொழியப்படுவதன் படி, தை ஒன்றே இன்றும் திருவள்ளுவர் ஆண்டின் முதல்நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது.[4][10]
Remove ads
உசாத்துணை
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads