தி. சதாசிவ ஐயர் (நீதிபதி)
இந்திய நீதிபதி (1861-1927) From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் தியாகராஜ சதாசிவ ஐயர் (Sir Thyagaraja Sadasiva Iyer) (23 ஜூன் 1861-1 டிசம்பர் 1927) ஓர் இந்திய நீதிபதியும் மற்றும் பிரம்மஞான சபையைச் சேர்ந்தவரும் ஆவார். இவர் 1905 முதல் 1910 வரை திருவிதாங்கூரின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். சென்னை மாகாணத்தின் இந்து சமய அறநிலையத் துறையின் முதல் தலைவராகவும் இருந்தார்.
Remove ads
இளமை வாழ்க்கை
சதாசிவன் 1861 ஜூன் 23 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் நோபல் பரிசு பெற்ற ச. வெ. இராமனின் தந்தைவழி உறவினரான மாங்குடி தியாகராஜா அய்யருக்கு பிறந்தார்.[1][2] கும்பகோணம் மற்றும் சென்னையில் கல்வி பயின்ற இவர் இந்து சட்டத்தில் தேர்ச்சி பெற்றார். நீதிபதி தி. பரமசிவ ஐயர் இவரது தம்பி ஆவார். கன்னட நாடக ஆசிரியர் த. ப. கைலாசம் இவரது பேரனாவார்.[3]
நீதித்துறை வாழ்க்கை
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேருவதற்கு முன்பு திருவிதாங்கூர் திவானாக பணியாற்றிய த. இராமராவிடம் பயிற்சியாளராக தனது நீதித்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். 1887இல் மதுரை மாவட்ட நீதிபதியாகவும், திருநெல்வேலி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய சதாசிவ ஐயர் 1905இல் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1905 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 1910 வரை பணியாற்றினார். பின்னர் பிரித்தனியச் சேவைக்கு திரும்பினார். மேலும் ஒடிசாவின் கஞ்சாம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2] 1912 ஆம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக சதாசிவ ஐயர் நியமிக்கப்பட்டார். 1912 முதல் 1921 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.[4][5] 1915இல் சென்னை தேசிய இந்திய சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
1921 ஆம் ஆண்டில், பனகல் அரசர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நீதிக் கட்சி அரசாங்கத்தால் புதிதாக நிறுவப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6] 1921 ஆம் ஆண்டின் பிரித்தானிய அரசரின் பிறந்தநாள் மரியாதைகள் பட்டியலில் இவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
Remove ads
பிரம்மஞான சபை
சதாசிவ ஐயர் பிரம்மஞான சபையின் செயலில் உறுப்பினராக இருந்தார். சபையின் பல கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி, அதன் இந்தியப் பிரிவின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.[7][8] 1918 ஆம் ஆண்டில், அன்னி பெசண்ட் மற்றும் சுயாட்சி இயக்கத்தின் தலைவர்கள் மதனப்பள்ளியில் வூட்ஸ் கல்லூரியை முதல் தேசிய பல்கலைக்கழகமாக நிறுவினர். இரவீந்திரநாத் தாகூர் அதன் வேந்தராகவும், சதாசிவ ஐயர் அதன் துணைவேந்தராகவும், நியமிக்கப்பட்டனர்.[9]
இறப்பு
சதாசிவ ஐயர் தனது 66வது வயதில் 1927 டிசம்பர் 1 அன்று சென்னையில் காலமானார்.[சான்று தேவை]
குடும்பம்
சதாசிவ ஐயர் தனது தாய்வழி உறவினரான மங்களம்மாளை மணந்தார். இந்த தம்பதிக்கு விசுவநாதன், கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன், சுவாமிநாதன் மற்றும் இராமச்சந்திரன் ஆகிய ஐந்து மகன்களும், பாலம்மாள், சியாமளா மற்றும் பார்வதி ஆகிய மூன்று மகள்களும் இருந்தனர். திவான் பகதூர் ஆர். வி. சீனிவாச ஐயர் இவரது மைத்துனர் ஆவார்.[10]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads