நந்திதா தாஸ்
இந்திய நடிகை, இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்திதா தாஸ் (பிறப்பு 7 நவம்பர் 1969) ஓர் இந்திய நடிகையும் இயக்குநரும் ஆவார். ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி, ஒரியா மற்றும் கன்னடம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுள் ஃபயர் (1996), எர்த் (1998), பாவன்டர் (2000), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), அழகி (2002) , காம்லி (2006), மற்றும் பிஃபோர் தி ரெயின்ஸ் (2007) ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கிய ஃபிராக் (2008), டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் 50 க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பயணம் செய்து 20 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது. இவர் இயக்கிய இரண்டாவது படம் மன்டோ (2018). 20 ஆம் நூற்றாண்டின் இந்தோ-பாகிஸ்தானி சிறுகதை எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது [1] இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் " அன் செர்டெய்ன் ரிகார்ட் " பிரிவில் திரையிடப்பட்டது. செப்டம்பர் 2019 இல், தாஸ் 'இந்தியாஸ் காட் கலர்' என்ற இரண்டு நிமிட பொது சேவை அறிவிப்பு இசைக் காணொளி ஒன்றைத் தயாரித்தார். இந்த இசைக்காணொளி நிறப் பிரச்சினையைப் பற்றியது. .மேலும் இது. இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட மனிதர்களின் தோல் நிறத்தைக் கொண்டாட பார்வையாளர்களை வலியுறுத்துகிறது. இவர் எழுதிய முதல் புத்தகம் 'மான்டோ & ஐ' திரைப்படத்தை உருவாக்கும் அவரது 6 வருட நீண்ட பயணத்தை விவரிக்கிறது. லாக்டவுன் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறை மற்றும் வேலைச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும், லிஸ்டன் டு ஹெர் என்ற குறும்படத்தை இவர் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்தார்..[2]
கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் நந்திதா இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார். 2005 இல், முக்கிய போட்டி நடுவர் குழுவில் பணியாற்றினார். 2013 இல், குறும்படங்களுக்கான நடுவர் மன்றத்தில் பணியாற்றினார். சினி பவுண்டேசன் எனும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கான முகவான்மை நிறுவனத்திலும் பனியாற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டில், அவர் நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பிரெஞ்சு அரசாங்கத்தால் கலை மற்றும் எழுத்துக்கான செவாலியர் தெ எல் ( Chevalier de l' Ordre des Arts et des Lettres சிறப்பினைப் பெற்றார்.[3] "சினிமாத் துறையில் இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக" அவர் பாராட்டப்பட்டார்."[4] 2009 ஆம் ஆண்டில், கலைஞர் டிடூவான் லாமசோவின் "உலகப் பெண்கள்" என்ற திட்டத்தில் நந்திதா தாஸ் இடம்பெறும் முத்திரையை பிரான்ஸ் வெளியிட்டது.[5][6]
வாஷிங்டன், டிசியில் சர்வதேச புகழ்மண்டபத்தில் உள்ள சர்வதேச மகளிர் மன்றத்தில் இடம்பெற்ற முதல் இந்தியர் நந்திதா ஆவார். அவர் 2011 இல் கலை மற்றும் உலகிற்கு அவர் அளித்த தொடர்ச்சியான பங்களிப்புகளுக்காக" "நமது காலத்தின் கவரக்கூடிய சினிமா கலைத் தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்."[7][8][9][10] அன்னா ஃபெண்டி, ஹெய்டி க்ளம் மற்றும் மேடம் சென் ஜிலி ஆகியோர் அவரோடு இதில் அறிமுகமானவர்கள்.[11]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
நந்திதாவின் தந்தை கலைஞர் ஜதின்தாஸ் ஆவார். அவரது தாயார் வர்ஷா தாஸ் ஒரு எழுத்தாளர். நந்திதா மும்பையில் பிறந்தார்[12] எனினும் பெரும்பாலும் டெல்லியில் ஒரு ஒடிசா குடும்பத்தில் வளர்ந்தார்.[13] அங்கு அவர் சர்தார் படேல் வித்யாலயா பள்ளியில் கல்வி பயின்றார்.[14] அவர் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் புவியியலில் இளங்கலைப் பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த தில்லி சமூகப்பணிப் பள்ளியில் சமூகப்பணியில் முதுகலை பட்டமும் பெற்றார்.[15] நந்திதா தாஸ் 2014 இல் யேலின் சிறந்த உலக மாணவராக இருந்தார்.[16] ஏறக்குறைய 4000 விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வளர்ந்து வரும் உலகளாவிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
Remove ads
தொழில் வாழ்க்கை
நடிப்பு
மிருணாள் சென், அடூர் கோபாலகிருஷ்ணன், சியாம் பெனகல், தீபா மேத்தா மற்றும் மணிரத்னம் போன்ற இயக்குநர்களுடன் நந்திதா தாஸ் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் தனது நடிப்பு வாழ்க்கையை தெரு நாடகக் குழுவான ஜன நாட்டிய மஞ்ச் மூலம் தொடங்கினார். இவர், டைரக்டர் தீபா மேத்தாவின் படங்களான ஃபயர் (1996) மற்றும் எர்த் (1998; அமீர் கானுடன் இணைந்து), பாவந்தர் (ஜக்மோகன் முந்த்ரா இயக்கம்), மற்றும் 'நாலு பெண்ணுங்கள்' (அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கம்) ஆகிய படங்களில் நடித்ததால் மிகவும் பிரபல்யமாக அறியப்படுகிறார். இவர் சந்தோஷ் சிவன் இயக்கிய பிஃபோர் தி ரெயின்ஸ் என்ற இந்திய-பிரித்தானிய கால நாடகத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் இன்றுவரை ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி, ஒடியா மற்றும் கன்னடம் ஆகிய பத்து வெவ்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்: இவர் நடித்த தமிழ்த் திரைப்படமான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவருக்குக் குரல் வழங்கியவர் தமிழ் நடிகை சுகன்யா ஆவார். பிட்வீன் தி லைன்ஸ் (2014) என்ற நாடகத்தில் இணைந்து எழுதி, இயக்கி, நடித்த இவர்[17] விஜய் தெண்டுல்கர் எழுதிய சினிபிளே நிறுவனத் தயாரிப்புகளான காமோஷ் அதாலத் ஜாரி ஹை (2017) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.[18] இவர் தி ஒன்டர் பெட்ஸ் என்ற குழந்தைகளுக்கான தொடரில் வங்காளப் புலியாக தன்னுடைய குரலை வழங்கியிருக்கிறார்.
இயக்கம்
2008ஆம் ஆண்டில், இவர் தான் இயக்குநராக அறிமுகமான ஃபிராக்கின் படப்பிடிப்பை நிறைவு செய்தார்.[19] ஃபிராக் ஆயிரக்கணக்கான உண்மைக் கதைகளின் அடிப்படையில் அமைந்த புனைவுப் படைப்பு என்பதுடன் 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்திற்குப் பின்னர் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 24 மணிநேர காலகட்டத்தில் நடக்கின்ற, சமூகத்தின் வெவ்வேறு நிலைகளைச் சார்ந்த கதாபாத்திரங்களோடு வன்முறையின் நீடித்த விளைவுகளோடு நெருங்கிச் செல்கின்ற பல்வேறு கதைகளை உள்ளிணைத்து பின்னியதாக ஒரு பொதுத்தோற்றத்தைத் தரும் திரைப்படம் இது. இந்தத் திரைப்படம் சாமான்ய மக்களின் உணர்ச்சிப் பயணத்தைத் தேடிச்செல்வதாக இருக்கிறது - இவர்களில் சிலர் அதற்கு பலியானவர்கள், சிலர் வன்முறையாளர்கள் மற்றும் சிலரோ அதை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள். இந்தத் திரைப்படத்தில் நசிருதீன் ஷா, ரகுபிர் யாதவ், பரேஷ் ராவல், தீப்தி நாவல், சஞ்சய் சூரி, திஸ்கா சோப்ரா, ச்கானா கோஸ்வாமி மற்றும் நவாஸ் ஆகிய சிறந்த நடிகர்கள் தோன்றினர்.
இந்தத் திரைப்படம் 2008 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் திரைப்படங்கள் ஆசியத் திருவிழாவில் முதல் நிலை கௌரவத்தைப் பெற்றது, அதில் பின்வருவனவற்றிற்கான விருதுகளை வென்றது, "சிறந்த திரைப்படம்", "திரைக்கதை", மற்றும் "வெளிநாட்டு தொடர்பு கூட்டமைப்பு. சிறந்த திரைப்படத்திற்கான பர்பிள் ஆர்ச் விருது".[20][21] இந்தத் திரைப்படம் பின்வருபவை உள்ளிட்ட பிற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்றது. கிரீஸில் நடைபெற்ற சர்வதேச தெஸாலோநிகி திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு விருது, கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது, துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது.[22] இது மார்ச் 20 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.[23] இந்தத் திரைப்படம் காரா திரைப்பட விழாவிலும் விருது பெற்றது.
"தொராண்டோ, இலண்டன், புசான், கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பாகங்களிலும் பார்வையாளர்களால் இந்தத் திரைப்படம் பாராட்டப்படுவது குறித்து "ஃபிராக் திரைப்படத்திற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேல் மனித உணர்ச்சிகள் உலகளாவியது என்பதையும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெற்ற இதுபோன்ற பின்னூட்டத்தால் நான் அதை இன்னும் அதிகமாகப் புரிந்துகொண்டேன். பார்வையாளர்களால் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடிகிற கதாபாத்திரத்தோடு ஒன்று கலக்க முடிந்திருக்கிறது. இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ள, இதனோடு தங்களை அதிகம் அடையாளம் காண்கின்ற இந்தியாவிலும் அப்படித்தான். இன்னும் அமைதியாகவே இருக்கும் விஷயங்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு குரலை அளித்திருப்பதாக சொல்லப்படுவதோடு இது குறைந்தது ஒருமுறையேனும் பார்க்கப்பட வேண்டும். நாங்கள் இந்தத் திரைப்படத்தோடு நுழைந்த ஒவ்வொரு போட்டி விழாவிலும் விருதுகளை வெல்வது நல்ல விஷயமாக இருந்தாலும் பார்வையாளர்களின் எதிர்வினைகளே முக்கியமானதாக இருக்கிறது" என்று நந்திதா தாஸ் ரேடியோ சர்கத்திடம் கூறினார்.[24][25] 2018 இல் நந்திதா மாண்டோ திரைப்படத்தை இயக்கினார்.[26]
Remove ads
சொந்த வாழ்க்கை
2002 ஆம் ஆண்டில் தன்னுடைய நீண்டகாலக் காதலரான சௌம்யா சென் என்பவரை மணந்தார்.[27] சமூக உணர்வுள்ள விளம்பரப் படங்களை எடுக்கும் நோக்கமுள்ள விளம்பர நிறுவனமான லீப்ஃபிராக்கை இந்தத் தம்பதியினர் தொடங்கினர்.[28] இவர்கள் 2009 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.[29] மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்த இந்தத் திருமணம் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவகாரத்தில் முடிந்தது. மும்பையின் புறப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான சுப்தோஷ் மஸ்காராவுடனான சில மாதங்கள் நீடித்த காதலுக்குப் பின்னர் அவரை ஜனவரி 2, 2010 இல் மும்பையில் திருமணம் செய்துகொண்டார் [30][31].ஜனவரி 2017 இல், இந்த ஜோடியும் பிரிந்துவிட்டதாக அறிவித்தது.[32] நந்திதா தாஸ் ஒரு நாத்திகர்[33] . தனக்கு எந்த மத சார்பும் இல்லை என்று குறிப்பிடுவதுடன் "நான் எதனுடனாவது இணைந்திருந்தால் அது பௌத்தமாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்ர்.[34]
சமூகப்பணி
தாஸ் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் குழந்தைகள் உரிமைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றுக்காகப் பேசியுள்ளார்.[35] 2009 இல், தாஸ் இந்தியாவின் குழந்தைகள் திரைப்பட சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[36][37] 2012 இல், மும்பையில் நடைபெற்ற தன்னார்வ விருதுகள் விழாவில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். தருண் தேஜ்பால் நிறுவிய தெஹல்கா என்ற புலனாய்வு இதழியல் இதழின் தொடக்க விழாவிற்கும் இவர் நன்கொடை அளித்தார்.[38]
Remove ads
இருண்டது அழகானது - பிரச்சாரம்
2013 இல், தாஸ் "இருண்டது அழகானது" பிரச்சாரத்தின் முகமாக ஆனார். இதற்கு முன்பே 2009 ஆம் ஆண்டு வுமன் ஆஃப் வொர்த் என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது, இந்த பிரச்சாரம் இந்தியாவில் தோல் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டின் விளைவுகளுக்கு கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "நியாயமாக இருங்கள், அழகாக இருங்கள்" போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி, அனைத்து தோல் நிறங்களின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாட பெண்களையும் ஆண்களையும் பிரச்சாரம் வலியுறுத்துகிறது."[39] 2014 இல் இந்தியத் திரைப்பட துறையில் ஒரு ஒப்பனையாளரோ அல்லது ஒளிப்பதிவாளரோ வந்து, 'உங்கள் சருமத்தை கொஞ்சம் ஒளிரச் செய்ய முடியுமா' குறிப்பாக நீங்கள் நடுத்தர வர்க்கத்தில் படித்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது' என்று நந்திதாவைக் கேட்டதாகக் கூறுகிறார்.[40]. 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நிறம் என்ற பிரச்சாரம் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது. மகேஷ் மத்தாயுடன் இணைந்து, நந்திதா தாஸ் பிரச்சாரத்திற்காக இரண்டு நிமிட பொதுமக்களுக்கான உரை ஒன்றினை தயாரித்து அதனை இயக்கியுள்ளார். இதன் இசைக்காணொளியில் இந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல புகழ்பெற்ற கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.[41][42].
Remove ads
உரைகள்
இவர் தன்னுடைய படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், இந்தியாவில் சக்திவாய்ந்த தேசிய இயக்கத்தின் தேவை குறித்தும் உலகம் முழுவதிலும் பேசி வருகிறார். ஃபயர் திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் எம்ஐடியில் பேசினார். எய்ட்ஸ் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை குறித்தும் பேசிவருகிறார்.[43][44] 2016 இல், " நம் காலத்தின் மிகப்பெரிய பாசாங்குத்தனம்: வறுமைக்கான நமது அணுகுமுறை " என்ற தலைப்பில் டெட் மாநாட்டில் உரையை வழங்கினார்."[45] 2011 இல், "கல்வியில் மாற்றம் " என்ற தலைப்பில் பேசினார்.[46] அவர் 2009 ஆம் ஆண்டில் இந்திய குழந்தைகள் திரைப்பட சமூகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Remove ads
விருதுகளும் கௌரவங்களும்
ஆகஸ்ட் 2018 இல், பவர் பிராண்ட்ஸ் நந்திதா தாஸுக்கு பாரதிய மானவாத விகாஸ் புரஸ்கார் விருதை வழங்கியது, மத நல்லிணக்கம், அமைதி மற்றும் சமூக நீதி, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக" பல்வேறு தளங்களில் அவரது வெளிப்பாடுகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.[47][48] திரைத்துறையின் மீதான துணிவு, இரக்கம், சிறந்த உலகத்திற்கான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சினிமாவின் சக்தியில் அவரது உறுதியான நம்பிக்கை. ஆகியவற்றுக்காக இவர் பல்வேறு சிறப்புகளைப் பெற்றார்.
Remove ads
திரைப்பட விழா
- 2001 சாண்டா மோனிகா திரைப்பட விழா
- வென்றது - சிறந்த நடிகை - பவந்தர்
- 2002 கெய்ரோ திரைப்பட விழா
- வென்றது - சிறந்த நடிகை - அமார் புவன்
- 2002 தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள்
- வென்றது - சிறப்புப் பரிசு - கன்னத்தில் முத்தமிட்டால்
- 2005 கேன்ஸ் திரைப்பட விழா
- மே 2005 - தாஸ் கேன்ஸ் 2005 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி உறுப்பினராக செயல்பட்டார்
- 2006 நந்தி விருதுகள்
- வென்றது - சிறந்த நடிகை - கம்லி
- 2008 முதல் திரைப்படங்களின் ஆசிய விழா
- வென்றது - சிறந்த திரைப்படம் - ஃபிராக்
- வென்றது - சிறந்த திரைக்கதை - ஃபிராக்
- வென்றது - வெளிநாட்டு தொடர்பு கூட்டமைப்பு சிறந்த திரைப்படத்திற்கான பர்பிள் ஆர்ச் விருது - ஃபிராக்
- 2009 கேரள சர்வதேச திரைப்பட விழா
- வென்றது - சிறப்பு ஜூரி விருது - ஃபிராக்
- 2009 சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழா
- வென்றது - சிறப்புப் பரிசு (எவரிடே லைஃப்: டிரான்சன்டன்ஸ் அல்லது ரிகன்ஸிலேஷன் விருது) - ஃபிராக்
- பரிந்துரைக்கப்பட்டது - கோல்டன் அலெக்ஸாண்டர் - ஃபிராக்
Remove ads
திரைப்பட விவரங்கள்
நடிகர்
இயக்குநர்
ஆண்டு | தலைப்பு | மொழி | மற்றவை |
2008 | ஃபிராக் | இந்தி உருது & குஜராத்தி |
வென்றது , ஆசிய முதல் திரைப்படங்கள் விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை. வென்றது , ஆசிய முதல் திரைப்படங்கள் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பர்பிள் ஆர்ச்சிட் விருது. வென்றது , கேரள சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது. வென்றது , சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு. பரிந்துரைக்கப்பட்டது , சர்வதேச தெஸாலோனிகி திரைப்பட விழாவில் கோல்டன் அலெக்ஸாண்டர். |
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads