நவகண்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவகண்டம் என்பது, தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வதாகும். தமிழகத்தில் 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் இந்தப் பலி கொடுத்துக் கொள்ளும் முறை இருந்துள்ளது. பொதுவாகக் கொற்றவை எனும் பெண் தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட்டுக் கொண்டுள்ளனர். இந்த நவகண்டப் பலியைப் பற்றி கோயில்களின் கல்வெட்டுகள், சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப் பரணி போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.[1]

சித்தர்கள் சிலர் 'நவகண்ட யோகம்' எனும் சித்தினைக் கடைப் பிடித்துள்ளனர். 'நவகண்ட யோகம்' என்பது தன்னுடைய உடல் பாகங்களை ஒன்பது துண்டுகளாக்கிக் கொண்டு சிவனை நினைத்து யோகம் செய்வதாகும்.[2]
இந்தச் சித்து முறையைச் செய்யும் போது அதனைக் கண்டவர்கள் பதறியுள்ளார்கள். அதன் பின்பு சித்தர்கள் முழு உருவோடு திரும்பி வந்த பிறகு அவரைச் சித்தர்களாக ஏற்று வழிபட்டார்கள் என்பதைப் பல்வேறு சித்தர்களின் வரலாறு தெரிவிக்கிறது.[3]
Remove ads
நவகண்டம் - சொல்லிலக்கணம்
உடலின் ஒன்பது பாகங்களைத் தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவது தான் நவகண்டம்.
நவகண்டம் கொடுப்பதற்கான காரணங்கள்
இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு:
- வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.
- சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் உடல் நலம் திரும்ப அவன்மீது பாசமிக்கவர்களால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.
- நோயினால் சாவை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
- குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவது.
- ஒருவன் போர்க் காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தறுவாயில் இருக்கையில், அவன் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் இருக்குமாயின், தனது இறப்பைத் தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
- ஒருவன் மிகப் பெரிய அவமானத்தைப் பெற நேர்ந்த காலை, அதன் பின் வாழ விரும்பாமல் சாகத் தீர்மானித்து, கோழை போல் சாக விரும்பாமல், வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.
இப்பொழுது முக்கியமானவர்களுக்குப் பூனைப்படை பாதுகாப்பு இருப்பதைப் போல, அக்காலத்தில் சோழர்களுக்கு "வேளக்கார படைகள்" எனும் அமைப்பும் பாண்டியர்களுக்கு "தென்னவன் ஆபத்துதவிகள்" என்ற படைகளும் இருந்தன. இவர்கள், தங்கள் கவனக் குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசனின் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.
ஆனால் பிற்காலங்களில் கோயில் கட்டுவதற்கும், தடைப்பட்ட தேரோட்டத்தை தொடர்ந்து நடத்தவும், பிற காரணங்களுக்காகவும் மேற்சாதிக்காரர்களால் கீழ்ச் சாதிக்காரர்கள் நவகண்டம் கொடுக்க கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.[சான்று தேவை] இதில் கீழ்ச் சாதிப் பெண்களும், குழந்தைகளும் கூட ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.[சான்று தேவை]
Remove ads
தமிழகத்தில் நவகண்டம் கொடுக்கும் வழக்கம்
வேண்டுதல் காரணமாக தன்னைத் தானே பலி கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது.[1] இதைப் பற்றிக் கல்வெட்டுகளும், சிற்பங்களும் இங்கு, பரவலாகக் காணப்படுகின்றன. இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாகத் தன் வேண்டுதலை நிறைவேற்றத் தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துப்பரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்துப் பலிகொடுத்த வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. பிடிபட்ட திருடனைக் குடும்பத்துடன் ஒரு நாள் மகிழ்வுடன் வாழவிட்டு, மறுநாள் கோவிலில் துர்க்கையின் முன் நவகண்டம் கொடுக்கச் செய்யும் வழக்கமும் உண்டு.[சான்று தேவை] மேலும் இது போன்றே தன் குடும்ப நன்மைக்காகவோ அல்லது முற்றிய நோயிலிருந்து மீள முடியாத பொழுதோ, நவகண்டம் கொடுப்பது உண்டு. [சான்று தேவை] இது ஜப்பானில் சாமுராய் வீரர்கள் தோல்வியைத் தாங்க முடியாமல் தம் கழுத்தை அறுத்துக் கொள்ளும் ஹராகிரி என்ற சடங்கிற்கு ஒப்பானதாகும்.[4]
தமிழகத்தில் நவகண்டச் சிற்பங்களின் இருப்பிடம்
தமிழகத்தில் காணப்படும் நவகண்டச் சிற்பங்கள் குறித்தான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலின் பிரகாரத்தில் கன்னிமார் சிலைகளுக்கு அருகே நவகண்டச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அதி ராஜ மாங்கல்ய புரம்( திருவதிகை) அருகில் கெடில நதி தென்கரையில் இருளக்குப்பம் சாத்திப்பட்டு அருகில் நங்கை அம்மன் கோவில் கொற்றவை அம்மனுக்கு முண்டன் மகன் என்பவன் நவகண்டம் கொடுத்துக் கொண்டதற்கு சான்றாக நவகண்ட சிலையும் அதைச் சுற்றி கல்வெட்டுக் குறிப்புகளும் உள்ளது இது பதினோராம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட சிலையாகும் இதை பண்ருட்டி தமிழரசன் மற்றும் தமிழ் ஆர்வலர் ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் கண்டுபிடித்து ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டனர்.
- திருமுக்கூடலூர் அனலாடீசுவரர் கோயில் முன்பு நவகண்டச் சிற்பம் அமைந்துள்ளது. ஆனால் அதன் தலை வெட்டப்பட்டுள்ளது.
- கிருட்டிணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயில் முன்பு பல நவகண்டச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
- மதுரையிலிருந்து இராமேசுவரம் செல்லும் வழியில் மதுரையிலிருந்து 18கி.மீ. தூரத்தில், வைகை ஆற்றின் வடகரையில் மடப்புரம் காளிகோயில் உள்ளது. தென்கரையில் திருப்பூவணம் (திருப்புவனம்) உள்ளது. இந்த ஊரில் "புதூர்" என்ற பகுதியில், நவகண்டம் கொடுக்கும் இளைஞனின் சிற்பம் ஒன்று உள்ளது.
- பழநி பெரிய நாயகியம்மன் கோயில் அருகே உள்ள விநாயகர் கோயிலில் நவகண்டச் சிலை உள்ளது.[1]
Remove ads
பரவலர் ஊடகங்களில் நவகண்டத்தின் சான்றுகள்
- ஆயிரத்தில் ஒருவன் (2010) என்ற தமிழ்த் திரைப்படத்தில் சோழனின் தஞ்சை நோக்கிய பயணம் இனிதே நிறைவேற முதியவர் ஒருவர் நவகண்டம் தருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
- காவல் கோட்டம் புதினத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அரவான் என்ற தமிழ்த்திரைப்படத்தில் கதைமுடிவில் நாயகன் தன்னைத் தானே கொடுவாளால் வெட்டிக் கொண்டு நவகண்டம் தரும் காட்சி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads