கடற்காஞ்சொறி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடற்காஞ்சொறி (Cnidaria) என்பது பவளங்கள், கடற்சாமந்தி மற்றும் சொறி மீன்கள் உட்பட 10000இற்கும் மேற்பட்ட நீர்வாழ் விலங்குகளை உள்ளடக்கிய தொகுதி ஆகும். இவற்றின் தனித்துவமான வேறுபிரித்தறிய உதவும் இயல்பு காஞ்சொறி உயிரணுக்களைக் கொண்டிருப்பதாகும். காஞ்சொறி உயிரணுக்களைக் கொண்டு இவை இரையை பிடித்து உண்ணுகின்றன. இவற்றின் உடல் பிரதானமாக இடைப்பசை என்னும் உயிரற்ற இழுது போன்ற பொருளால் ஆக்கப்பட்டுள்ளது. இவை அக மற்றும் புற முதலுருப் படைகளை மாத்திரம் கொண்டுள்ள Diploblastica விலங்குகளாகும். இவ்விரு படைகளும் ஒற்றைக் கலத் தடிப்பானவையாகும். இவ்விரு படைகளுக்கிடையே இடைப்பசை காணப்படுகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் நிடேரியாக்கள் மிகவும் எளிய உடற்கட்டமைப்பைக் கொண்டுள்ள விலங்குகளாகும். எனினும் இவற்றில் பஞ்சுயிரிகளைப் போலல்லாது மெய்யான இழைய வியத்தம் காணப்படுகின்றது. இவை ஒரு கலத்தடிப்புடையதால் இவற்றில் சுவாசத்துக்கென விசேடமான உறுப்புகள் விருத்தியடைவதில்லை. நீரில் கரைந்துள்ள ஒக்சிசன் எளிய பரவல் மூலம் உடலுக்குள் உள்ளெடுக்கப்படுகின்றது. இவற்றில் மெய்யான உணவுக்கால்வாய் காணப்படுவதில்லை. இவற்றின் வாயே குதமாகவும் தொழிற்படுகின்றது. இவற்றில் உள்ள எளிய நரம்புத்தொகுதி உடல் முழுவதும் கணத்தாக்கங்களைக் கடத்தி உடலைக் கட்டுப்படுத்துகின்றது. நரம்புத் தொகுதியில் மையக்கட்டுப்பாடு/ மைய நரம்புத்தொகுதி காணப்படுவதில்லை. இவை ஆரைச் சமச்சீரான விலங்குகளாகும்.
பழைமையான வகைப்பாட்டில் டெனோபோர்களுடன் (கணம்-Ctenophore) சேர்த்து சீலந்தரேட்டா/ குழியுடலிகள் என வகைப்படுத்தப்பட்டன. எனினும் இரண்டுக்குமிடையே பல வேறுபாடுகள் காணப்படுவதால் இவை இரண்டும் தற்போது வெவ்வேறு கணங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. நிடேரியாக்கள் நான்கு பிரதான வகுப்புக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அந்தோசோவா (Anthozoa), ஸ்கைபோஸோவா, கியூபோசோவா, ஐதரோசோவா என்பவையே அவையாகும்.
Remove ads
வேறுபடுத்தும் இயல்புகள்
ஏனைய விலங்குக் கணங்களைப் போலல்லாது நிடேரியாவை இலகுவாக வேறுபடுத்தலாம். தனிச்சிறப்பியல்புகள்:
- நைடோசைட்டுகள் (அழன்மொட்டுச் சிறைப்பை)
- ஆரைச்சமச்சீரான உடல்
- இரு படைகளுள்ள (Diploblastica) விலங்குகள்
- தட்டையக் குடம்பி (planula larva)
- அகமுதலுருப்படை, புற முதலுருப்படை இடையே இடைப்பசை காணப்படல்
- தசை மேலணிக் கலங்கள் காணப்படல்.
- எளிய கான்களற்ற சனனிகள் உள்ளமை
- உதரக் கலன்குழி
Remove ads
உடற்கூற்றியல்
நிடேரியன்கள் இரு வகைகளில் உள்ளன: முழு வளர்ச்சியடைந்த பின் மெடூஸா வடிவமுடையவை, மற்றையன பொலிப் வடிவமுடையன. மெடூஸா வடிவ நிடேரியன்களால் நன்றாக அசைய முடியும். ஆனால் பொலிப் வடிவ நிடேரியன்களால் பெரிதாக அசைய முடியாது. இவற்றில் தலை என்றொரு பகுதி காணப்படுவதில்லை. இவை ஆரைச்சமச்சீரான உடலைக் கொண்டுள்ளன. இவற்றின் உடலின் ஓரப்பகுதியில் பல பரிசக்கொம்புகள் காணப்படும். இப்பரிசக் கொம்புகளிலுள்ள பல நைடோசைட்டுக்களால் இரையை அல்லது எதிரியைத் தாக்குகின்றன. மெடூஸாக்களில் இடைப்பசை தடிப்பானதாகவும், பொலிப்புகளில் மெல்லியதாகவும் உள்ளது.
வன்கூடு
அனேகமான நிடேரியாக்களில் எவ்வித மெய்யான வன்கூடும் காணப்படுவதில்லை. மெடூஸாக்களில் இடைப்பசை மாத்திரமே வன்கூடாகத் தொழிற்படுகின்றது. கடல் அனிமனி, ஐதரா போன்ற பொலிப்புகள் உணவுண்ணாத போது தமது வாயை மூடி குழிக்குடலுக்குள் நீரைச் சேமிக்கின்றன. இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள நீர் நீர்நிலையியல் வன்கூடாகத் தொழிற்படுகின்றது. நிடேரியாக்களில் பவளங்கள் மாத்திரமே மெய்யான வன்கூட்டைக் கொண்டுள்ளன. பவளங்கள் உறுதியான கல்சியம் காபனேற்றாலான புறவன்கூட்டைத் தொகுக்கின்றன.
பிரதான கலப்படைகள்
நிடேரியாக்களில் இரு பிரதான கலப்படைகள் உள்ளன. அவை அகமுதலுருப் படையும், புற முதலுருப் படையுமாகும். இவற்றில் இடை முதலுருப் படை காணப்படுவதில்லை. எனவே இவை Diploblastic விலங்குகளாகும். இவ்விரு படைகளும் மேற்றோல் கலங்கள் போலத் தொழிற்படுகின்றன. இவ்வகைக் கலங்கள் தவிர தசைக் கலங்களும், நரம்புக் கலங்களும், நைடோசைட்டுக்களும் காணப்படுகின்றன. அக-முதலுருப் படையில் சமிபாட்டு நொதியங்களைச் சுரக்கும் கலங்களும் உள்ளன. நரம்புக் கலங்கள் மையப்படுத்தல் இன்றி உடல் முழுவதும் பரந்துபட்டுப் பரவியுள்ளன. இடைப்பசையிலும் சொற்பளவான கலங்கள் உள்ளன.
நிடோசைட்டுக்கள்

இவை பாதுகாப்பு அல்லது இரை கௌவல் தொடர்பான கலங்களாகும். இவை அதிகமாக பரிசக் கொம்புகளிலும் (tentacles) புற முதலுருப் படையிலும் காணப்படுகின்றன. இவை நிடேரியாக்களில் மட்டும் காணப்படும் தனித்துவமான கல வகையாகும். மூன்று வகையான நிடோசைட்டுக்கள் அறியப்பட்டுள்ளன.
- அழன்மொட்டுச் சிறைப்பைகள்- விஷம் ஏற்றக்கூடிய முட்களுள்ள கலங்கள். இவை இரையினுள் அல்லது எதிரியினுள் விஷத்தை ஏற்றுகின்றன.
- ஸ்பைரோசிஸ்டுக்கள்
- டைக்கோசிஸ்டுக்கள்
Remove ads
இனப்பெருக்கம்
நிடேரியாக்கள் துண்டுபடல் மூலம் இலிங்கமில் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
இலிங்க முறை இனப்பெருக்கம்
நிடேரியாக்களின் இலிங்க முறை இனப்பெருக்கத்தில் இலிங்க நிலையான மெடூஸா நிலையும், பொலிப்பு நிலையும் காணப்படுகின்றன. இது நேரடியற்ற விருத்தியாகும். சில இனங்களில் பொலிப் நிலை காணப்படுவதில்லை. ஐதரா போன்ற சில இனங்களில் மெடூஸா நிலை காணப்படுவதில்லை. பொலிப்புகள் வளர்ச்சியடைந்து மெடூஸாக்களை உருவாக்குகின்றன. மெடூஸாக்களிலிருந்து முட்டைக்கலங்களும், விந்துக் கலங்களும் புறத்தேயுள்ள நீருக்குள் விடுவிக்கப்படுகின்றன. இவை புறக்கருக்கட்டலடைந்து சிறிய குடம்பிகள் உருவாகின்றன. இவை வளர்வதற்கென ஒரு மேற்பரப்பைத் தேர்ந்தெடுத்து பொலிப்பு நிலையை அடைகின்றன. பொலிப்பு மற்றும் மெடூஸா நிலைகளில் ஆட்சியுடைய/ வாழ்நாளில் அதிக காலத்தைப் பிடிக்கும் நிலையைக் கொண்டு நிடேரியாக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஜெலி மீன்களில் மெடூஸா நிலையே ஆட்சியுடைய நிலையாகும். பவளங்களில் பொலிப்பு நிலையே ஆட்சியுடைய நிலையாகும். சில இனங்களில் மேற்கூறியவாறு ஒட்டுமொத்தமாக ஒரு நிலை இழக்கப்பட்டு விடுகின்றது.
வகைப்பாடு
நிடேரியாக்கள் அவைகளின் உடற்கூற்றியல் மற்றும் இனப்பெருக்க முறைகளின் அடிப்படையில் நான்கு பிரதான வகுப்புக்களாகப் பிரிக்கப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads