நிஷ்காம கர்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிஷ்காம கர்மம் (ஆங்கிலம்: Niṣkāmakarma; சமஸ்கிருதப் பொருள்: "தன்னலமற்ற அல்லது பற்றற்ற செயல்") என்பது பலன்கள் அல்லது முடிவுகளை எதிர்பார்க்காமல் செய்யப்படும் ஒரு தன்னலமற்ற செயலாகும்.[1] இது வீடுபேறினை அடைவதற்கான கர்ம யோகப் பாதையின் மையக் கொள்கையாகும். தற்கால அறிஞர்கள் யோகக் கொள்கைகளைக் கொண்டே இதில் வெற்றி அடைய முடியும் என்றும்[2] நம் தனிப்பட்ட நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பொது நன்மையைக் கருதியே எந்தவொரு செயலையும் செய்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.[3][4][5] பகவத் கீதையின் மையக் கருத்தாக நிஷ்காம கர்மம் நன்கு அறியப்பட்டிருக்கிறது.[6]
இந்திய மெய்யியலில் கர்மா அல்லது செயல் அதன் உள்ளார்ந்த குணங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நிஷ்காம கர்மம் சத்வ (தூய்மையான) என்னும் முதல் வகையைச் சேர்ந்தது. சத்வ என்பது அமைதியைத் தரும் செயல்களைக் குறிப்பதாகும். இரண்டாவது வகையான சகாம கர்மம் (அதாவது தன்னை மையப்படுத்திய செயல்) ராஜசிகா (வன்மம்) என்ற வகையிலும் மூன்றாவதான விகர்மா (அதாவது மோசமான அல்லது தீய செயல்) தாமசிகா என்ற வகையிலும் அடங்கும். தாமசிகா என்பது இருண்ட, செயலற்ற தன்மையுடன் தொடர்புடையது.[7]
Remove ads
பகவத் கீதையில் நிஷ்காம கர்மம்
மகாபாரதத்தின் மையப் பொருளான பகவத் கீதையில் நிஷ்காம கர்மம் பிரதானமாக உரைக்கப்பட்டுள்ளது.[8] உண்மையை உணரச் சிறந்த வழியாக பகவான் கிருஷ்ணர் 'நிஷ்காம கர்ம யோகா' எனப்படும் தன்னலமற்ற செயற்பாட்டு யோகத்தைப் பரிந்துரைக்கிறார்.[9] எதிர்பார்ப்புகளும் உள்நோக்கங்களும் இல்லாமலும் ஒரு செயலின் பயன்களைப் பற்றி சிந்திக்காமலும் அச்செயலைச் செய்வதான் மூலம் ஒருவன் தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியுமென்றும் மேலும் அதுவே படிப்படியாக அந்நபருக்கு ஞானத்தை அல்லது அறிவின் தன்மையை உணரச் செய்து அச்செயல் அல்லது கர்மாவையே துறக்கும் மனநிலையைத் தரவல்லது என்றும் அதில் அவர் கூறுகிறார். கீதையின் கீழ்க்கண்ட பாடல்களில் இக்கருத்துகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன:
- உனக்குக் கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு. அவற்றின பயன்களில் ஒருக்காலும் உரிமையில்லை. ஆகவே, நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே. அனக்குக் கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது. (சுலேகம் 47, அத்யாயம் 2—ஸாங்க்ய யோகம், பகவத் கீதை)[10]:138–140[11]
- அர்ஜுனா! பற்றினைத் துறந்து மேலும் கைகூடுவது, கைகூடாமலிருப்பது என்பதில் சமநோக்குடையவனாக இருந்து, யோகத்தில் நிலைபெற்றுச் செய்யவேண்டிய கர்மங்களைச் செய். சமபாவனைதான் யோகம் என்று கூறப்படுகிறது. (சுலேகம் 48, அத்யாயம் 2—ஸாங்க்ய யோகம், பகவத் கீதை)[10]:141–142
- கர்மயோகிகள் மமகாரமின்றி வெறும் புலன்களாலும் மனத்தாலும் புத்தியினாலும் உடலாலும்கூடப் பற்றைத் துறந்து, மனத்தூய்மையை அடையும் பொருட்டுக் கர்மத்தைச் செய்கிறார்கள். (சுலேகம் 11, அத்யாயம் 5—கர்ம சந்யாச யோகம், பகவத் கீதை)[10]:342–343[12]
Remove ads
திருக்குறளில் நிஷ்காம கர்மம்
நிஷ்காம கர்மக் கோட்பாட்டைப் பற்றிக் கூறுகையில் வள்ளுவரின் கோட்பாடு மிக முக்கியமானதாகும். நிஷ்காம கர்மக் கருத்து திருக்குறளின் பல்வேறு அதிகாரங்களில் பரவலாகக் காணப்பட்டாலும், குறிப்பாக அறத்துப்பாலின் கடைசி ஐந்து அத்தியாயங்களில் இதன் சாராம்சம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து உலகப் பற்றுகளையும் படிப்படியாகவும் சரியான நேரத்திலும் துறக்க வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.[13] இதனைக் முதன்மையாக துறவு அதிகாரத்தில் குறள் 341 மற்றும் 342 ஆகியவற்றின் மூலம் அறியலாம்.[13]
தார்மீக சிந்தனையுடன் அறம் பிறழாது வாழும் ஒரு சாமானியன் "உள்ளத்துறவு", அஃதாவது பற்றற்று கடமையாற்றுதல், மூலமாக ஒரு துறவு மூலம் முனிவர் அடைவதை எளிதில் அடையமுடியும் என்று கூறுகிறது நிஷ்காம கர்மா.[14]:85–89[15]:68–70[16]:604–617 திருக்குறளின் 629-ஆவது குறள் இங்கு ஒப்பீட்டுடன் நோக்கப்படுகிறது: "இன்பம் விளையும் போது அவ்வின்பத்தில் திளைக்காதவன் துன்பம் விளையும் போது அத்துன்பத்தால் வாடுவதில்லை".[17]:83 சாமானிய மக்களைப் போலல்லாது சான்றோர் இன்பத்தையும் துன்பத்தையும் ஒப்பவே மதிப்பர் என்பதால் அவர்களுக்கு அவ்விரண்டினாலும் பாதிப்பு ஏற்படாது என்று சோ. ந. கந்தசாமி குறிப்பிடுகிறார்.[18]:302 இத்தகைய மனப்பக்குவத்தினை யோக மெய்யியலில் "சமசித்தம்" என்றும் சைவ சித்தாந்தத்தில் "இருவினை ஒப்பு" எனவும் குறிப்பிடுவர். இராமபிரானிடம் இப்பண்பு மேம்பட்டு விளங்கியது என்று கம்ப இராமாயணத்தில் கம்பர் உரைக்கிறார்.[18]:302
Remove ads
பணியிடத்தில் நிஷ்காம கர்மம்
சகாம கர்மம் (ஆசையுடன் கூடிய செயற்பாடு)[19] என்பதன் நேரெதிரான நிஷ்காம கர்மம் "கடமைக்கான கடமை" என்றும், எதிர்மறையான மனப்பான்மையோ அலட்சியமோ அற்ற 'பற்றற்ற ஈடுபாடு' என்றும் பலவிதமாக விளக்கப்படுகிறது.[20] இன்றைய நவீன உலகின் வணிகத் துறையில் நிஷ்காம கர்மம் பலராலும் பரிந்துரைக்கப்படுகிறது. உள்ளார்ந்த மனித விழுமியங்களோடு ஒத்த அறம் சார்ந்த வணிக முறைகளைக் கடைப்பிடிக்கவும் பணியிடத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியிலும் நிஷ்காம கர்மம் உதவுகிறது.[21][22]
சகாம அல்லது சுயநல கர்மத்திலிருந்து நிஷ்காம கர்மத்தை வேறுபடுத்தும் மற்றொரு அம்சமும் உண்டு. முந்தையது ஆசையின் உந்துதலால் வழிநடத்தப்படுகையில், பிந்தையது ஞானத்தின் உந்துதலால் வழிநடத்தப்படுவதாகும். இதுவே இவ்விரண்டிற்குமிடையிலான பிராதான வேறுபாட்டை நிறுவுகிறது. அதாவது, சகாமா கர்மம் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட காரணத்தால் அதிக பணிச்சுமைத் தந்து அதன் விளைவாக உடற்சோர்வினையும் மனச்சோர்வினையும் தரவல்லதாக இருக்கிறது. நிஷ்காமா கர்மம் செய்யப்படும் பணிக்கான மிகவும் சமநிலையான அணுகுமுறையைக் தரவல்லது என்பதால் அங்கு வேலையானது ஒருவனது ஆன்ம வளர்ச்சிக்கான ஒரு கருவியாக மாறிவிடுகிறது. இதன் விளைவாகவே புற ஊதியங்களேதுமின்றியே அப்பணியானது "செய்யும் தொழிலே தெய்வம்" என்னும் பழமொழிக்கேற்ப அவனுக்கு இயல்பான மனநிறைவை தரவல்லதாக அமைந்துவிடுகிறது. பலனை மட்டுமே கருதிச் செய்யப்படும் சகாம கர்மமோ நாட்பட நாட்பட அறமற்றதாகி தீயச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறிவிடுகிறது. நவீன காலப் பணியிடத்தில் இதனை அதிகம் காணலாம்.[23]
நிகழ்காலத்தைக் குறித்த விழிப்புணர்வு என்பது நிஷ்காம கர்மத்தின் பயிற்சி முறைக்கான மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.[24] இதைக் கடைபிடிப்பவர் செயலின் பலனிலிருந்து விலகியிருப்பதால் பணியில் காணப்படும் ஏற்றயிறக்கங்களுக்கு ஆட்படாது இருந்துவிடுகிறார். அதே நேரம் பணியானது தனது ஆத்மத் திருப்திக்காக வேண்டி தானாற்றவேண்டிய ஒரு கடமை என்ற நோக்கில் மட்டுமே செயல்படுவதால் பணியில் அர்பணிப்பு ஏற்பட்டு அது முழு மன நிறைவை தரவல்லதாக மாறிவிடுகிறது. காலப்போக்கில், பழக்கமாகிவிட்ட இந்த நடைமுறையானது மனதை சமநோக்குக் கருவியாக மாற்றிவிடுகிறது.[25][26] இறுதியில் இது இதயத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முழுமையான ஆன்மீக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.[27]
இவற்றையும் பார்க்க
தரவுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads