சைவ சித்தாந்தம்
சைவ ஆகம, வேதங்கள், உபநிடதங்கள் சார்ந்து, சிவனை மூலக் கடவுளாக வழிபடும் முறை. From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைவ சித்தாந்தம் (Saiva Siddhantam) என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப் பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.

சைவ சித்தாத்தினை வேதாந்தம் எனும் மரத்தில் காய்த்த பழுத்த கனி என்கிறார் குமர குருபரர்.[1] சைவ சித்தாந்தம் திராவிட அறிவின் சிறந்த வெளிப்பாடு என்று ஜி.யு.போப் குறிப்பிடுகின்றார்.[2]
Remove ads
சிவ வணக்கம்
சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றியதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகவும் அவர்கள் கருதுவர்.
இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது.
Remove ads
சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள்
இந்தியாவில் இந்து சமயத்தின் பெரும்பாலான தத்துவப் பிரிவுகள் வேதங்களையும் அவற்றின் இறுதிப்பகுதியாகக் கொள்ளப்படும் உபநிடதங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க, சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏராளமான ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் சில சைவ சமயத்துக்கும், வேறுசில வைணவ சமயத்துக்கும், மற்றவை சாக்த சமயத்துக்கும் உரியவை. சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுட் தலையாயவை காமிகாகமம், காரணாகமம் என்பன.
சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.[3]
- திருவுந்தியார்
- திருக்களிற்றுப்படியார்.
- சிவஞானபோதம்
- சிவஞான சித்தியார்.
- இருபா இருபது.
- உண்மை விளக்கம்.
- சிவப்பிரகாசம்.
- திருவருட்பயன்.
- வினா வெண்பா.
- போற்றிப் பஃறொடை.
- கொடிக்கவி.
- நெஞ்சுவிடு தூது.
- உண்மை நெறி விளக்கம்.
- சங்கற்ப நிராகரணம்.
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பற்றித் தமிழில் எழுந்த நூல்களைப் போன்றே வடமொழியிலும் சில நூல்கள் எழுந்துள்ளன. பொ.ஊ. 8–12 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதான அட்டப்பிரகரணம் எனும் தொகுப்பிலுள்ள எட்டு நூல்களை அவ்வகையுள் குறிப்பிடலாம். அவை,
- தத்துவப் பிரகாசிகை
- தத்துவ சங்கிரகம்
- தத்துவத் திரய நிர்ணயம்
- இரத்தினத் திரயம்
- போக காரிகை
- நாத காரிகை
- மோட்ச காரிகை
- பரமோட்ச நிராச காரிகை
என்பனவாகும்.
Remove ads
தத்துவ அடிப்படைகள்
- பதி (இறைவன்)
- பசு (உயிர்)
- பாசம் (மலங்கள்)
ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.
- இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.
- உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.
- மலங்கள்: மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது.
சித்தாந்தமும் வேதாந்தமும்
"உமாபதி சிவம் நெஞ்சுவிடுதூது என்னும் சிந்தாந்த பிரபந்தத்தில் உலகாயதம், வேதாந்தம், பௌத்தம், சமணம், மீமாஞ்சம் ஆகிய தத்துவங்களைச் சித்தாந்தப் பார்வையில் மறுத்துக் கூறிச் சித்தாந்த சைவத்தினை நிலைநாட்டியுள்ளார்." [4]
சைவ சித்தாந்தமும் வீர சைவமும்
குழந்தைப் பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு, மாதவிடாய் தீட்டு, பூப்புத் தீட்டு, எச்சில் பட்ட உணவு அல்லது நீர் அருந்துவதால் ஏற்படும் உணவுத் தீட்டு மற்றும் தாழ்குலத்தவர்கள் தீட்டு என ஐந்து தீட்டுகள் சைவ சித்தாந்தத்தில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் வீர சைவர்கள் இத்தகைய தீட்டுகளை கடைப்பிடிக்கப்படுவதில்லை. மேலும் வீர சைவர்கள் பால் பேதம் சொல்லிப் பெண்களை ஆன்மீக விடயங்களில் இருந்தும் ஒதுக்கிவைப்பதும் இல்லை.
Remove ads
சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும்
சைவ சித்தாந்தம் சாதியமைப்பைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது.[5] இது அது தோற்றம் கண்ட காலத்தில் (சோழர் காலம்) இருந்தே இருந்து வருகின்றது. பிராமணர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பில் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களாகவும், மதக்குருமார்களான பிராமணர்கள் சடங்கு ரீதியில் முக்கியத்துவம் பெறுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads