பக்கவாதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பக்கவாதம் அல்லது பாரிசவாதம் (stroke) என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்[1] குருதி உறைதல், குழலியக்குருதியுறைமை போன்றவற்றால் அல்லது குருதிப்பெருக்கினால் குருதி வழங்கல் குறைவடையும்போது இது நிகழக்கூடும். மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறையும்போது மூளையின் உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், பிராண வாயுவும் கிடைக்காமல் போவதினால் பாதிக்கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய், உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடல் உறுப்புக்கள் இயங்க முடியாமல் போகிறது. அத்துடன், புரிந்துகொள்ள முடியாமை, ஒழுங்காகப் பேசமுடியாமை, பார்வைப் புலத்தின் ஒரு பகுதியைப் பார்க்க முடியாதிருத்தல் போன்றவையும் ஏற்படலாம்.

விரைவான உண்மைகள் பக்கவாதம், வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...

பக்கவாதம் நிரந்தரமான நரம்புச் சிதைவை ஏற்படுத்துவதுடன் இறப்பும் நிகழலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் வளர்ந்தவர்களில் ஏற்படும் ஊனத்துக்கான முன்னணிக் காரணம் இதுவாகும். ஐக்கிய இராச்சியத்தில் இறப்புக்கான காரணிகளில் இது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவிலும் இறப்புக்கான காரணிகளுள் இது இரண்டாவதாக இருப்பதுடன், விரைவில் இது முதல் இடத்துக்கு வரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Remove ads

பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் [2]

அமெரிக்க இதய அமைப்பு பரணிடப்பட்டது 2017-08-23 at the வந்தவழி இயந்திரம் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார் எனப் பட்டியலிட்டுள்ளது. பக்கவாதத்துக்கான இடர் காரணிகளில் சில பாரம்பரியத்தால் ஏற்படுவனவாகவும், இயற்கை செயல்முறைகளால் ஏற்படுவனவாகவும் இருக்கின்றன. அப்படியானவற்றை நாம் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ முடியாது. வேறு சில இடர் காரணிகள் வாழ்க்கை முறை, மற்றும் சூழல் போன்ற நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய, அல்லது மாற்றக் கூடிய காரணிகளாக இருக்கின்றன. அவற்றை தகுந்த உடல்நலப் பாதுகாப்பு முறைகளால் நாம் மாற்றியமைக்கலாம்.

கட்டுப்படுத்த முடியாத இடர் காரணிகள்

  • வயது: 55 வயதுக்கு மேல், ஒவ்வொரு பத்தாண்டும் இந்நோய் வருவதற்கான சாத்தியம் இரட்டிப்பாவதாகின்றது. வயது முதிர்ந்தவர்களிலேயே அதிகளவில் இந்நோய் ஏற்படுகின்றதாயினும், 65 வயதுக்குட்பட்டவர்களிலும் பக்கவாதம் ஏற்படுகின்றது.
  • பாரம்பரியம்: பாரம்பரியமாகவும் இந்நோய் வருவதாக அறியப்பட்டுள்ளது.
  • பாலினம்: எல்லா வயது மனிதர்களையும் கருத்தில் கொள்கையில், பெண்களை விட ஆண்களே இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும் நோய்த் தாக்கத்துக்குட்பட்டவர்களில் இறப்பு ஏற்படுவது பெண்களிலேயே அதிகமாக உள்ளது. பெண்களில் பிறப்புத் தடுப்பு மருந்துகள், கர்ப்ப நிலைகள் இடர் காரணிகளாக அமையும்.
  • முன்னதாக நோய்க்குட்பட்டவர்கள்: முதலிலேயே இந்நோய்த் தாக்கம் ஏற்பட்டவர்களிலும், மாரடைப்பு ஏற்பட்டவர்களிலும் பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

கட்டுப்படுத்தக்கூடிய இடர் காரணிகள்

  • இரத்த அழுத்தம்: உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்துக்கான முதன்மைக் காரணியாக உள்ளது. இவ்வுயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்போது அதிகளவில் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு குறைகின்றது.
  • புகைத்தல்: புகைப்பிடிப்பவர்களில் அதிகளவில் பக்கவாத நோய் ஏற்படுவதாக அண்மைய காலங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வாய்மூலம் எடுக்கும் பிறப்புத் தடை மருந்து பாவிப்பவர்கள், புகை பிடிப்பவர்களாயிருந்தால், மேலும் அதிகரித்த இடர் காரணியாக அமைந்து விடுகிறது.
  • நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உள்ளவர்களில் இந்நோய்த் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிமகாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ரோல், மற்றும் அதிக உடற் பருமனும் இருப்பின், இந்நோய் ஏற்படுவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கிறது.
  • உடற்பயிற்சியும், உடற்பருமனும்: அதிகரித்த உடற்பருமன் உடையவர்களில் உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ரோல், நீரிழிவு நோய், மேலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.
  • கொலஸ்திரோல் அளவு: உயர் கொலஸ்திரோல் அளவுள்ளவர்களில் இந்நோய்க்கான நிகழ்தகவு அதிகரிக்கும்.
  • உணவுப்பழக்கம்: அதிக கொழுப்பு உணவுகள், உடலில் கொலஸ்திரோல் அளவை அதிகரிப்பதாலும், சோடியம் (உப்பு) கூடிய உணவுகள் உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக இருப்பதாலும், அதிகரித்த கலோரி கொண்ட உணவுகள் உடற்பருமனை அதிகரிப்பதாலும், பக்கவாதத்திற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன. பழவகைகள், மரக்கறி வகைகளைக் கொண்ட உணவு இந்த நோய்த் தாக்கத்தை குறைக்கிறது.
  • சில நோய்கள்: கரோட்டிட், சில நாடி நோய்கள், Atrial fibrillation, Sickle cell disease, மேலும் சில இதய நோய்கள் இருப்பின், இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

சரிவர நிறுவப்படாத சில இடர்க் காரணிகள்

  • புவியியல் அமைவிடம்: பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பக்கவாதநோய் அதிகளவில் காணப்படுகிறது பரணிடப்பட்டது 2010-08-19 at the வந்தவழி இயந்திரம். அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அதிகளவில் இந்நோய் இருக்கிறது.
  • சமூக பொருளாதார நிலை: வறிய குடும்பங்களில் இந்நோய் அதிகளவில் இருப்பதாக அறியப்படுகிறது.
  • மதுபாவனை: அளவுக்கதிகமான மதுபாவனை பக்கவாதம் உட்பட, பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
  • போதை மருந்துகள் பாவனை: கொக்கெயின், ஹெரோயின் போன்ற போதை மருந்துக்கு அடிமையானவர்களில் இந்த பக்கவாத நோய்த்தாக்கம் அதிகரிக்கிறது. இது இப்படி அடிமைப்படும் இளையோரில் ஏற்படுகிறது. இம்மருந்துகள் சமூக, உடல்நல பிரச்சனைகளைத் தருவதுடன், பலவகை நோய்களுக்கும் காரணியாகின்றன.
Remove ads

நோய் அறிகுறிகளும் உணர்குறிகளும்

பக்கவாதத்திற்கான அறிகுறிகள் பொதுவில் திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றுபவையாக இருக்கும். அவை பொதுவாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதில்லை. ஏற்படும் பாதிப்பானது, மூளை எவ்வளவு தீவிரமாக பாதிப்படைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

எமது பேசுதல், நடத்தல், எழுதுதல் போன்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மூளையிலுள்ள குறிப்பிட்ட தொழிற்பாட்டு மையங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றது. ஆகவே மூளையின் எந்தப் பகுதிக்கு குருதி வழங்கல் தடைப்படுகிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகளும் மாறுகின்றன. பொதுவாக பக்கவாதத்தினால், உடலின் ஒரு பக்கமே இவ்வாறு பாதிப்படைகிறது. மூளையின் எப்பகுதி தாக்கத்துக்கு உட்படுகிறதோ, அதற்கு எதிரான உடலின் பக்கமே பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால் இங்கு கூறப்படும் அறிகுறிகளும், உணர்குறிகளும் வேறு காரணங்களாலும் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதால், இவை கட்டாயமாக பக்கவாதத்தினால் ஏற்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அடையாளம் காணும் ஆரம்பநிலை

முகத் தசைகளில் ஏற்படும் தளர்ச்சி, கையை தூக்க முடியாமல் போதல், அசாதாரணமாக பேசுதல் போன்றவை பக்கவாத நோயை கண்டு பிடிப்பதில் முதன்மையான அறிகுறிகளாக அறியப்படுகின்றன. (இம்மூன்று அறிகுறிகளில் ஏதாவதொன்று அறியப்படுகையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 5.5 எனவும், இம்மூன்றில் எந்தவொரு அறிகுறியும் இல்லாதிருக்கையில் பக்கவாதத்திற்கான நிகழ்தகவு வீதம் 0.39 எனவும் அறியப்பட்டுள்ளது).[3]. இவை நோயை கண்டறிவதற்கான மிகச்சிறந்த முறையாக இல்லாவிடினும், விரைவாக நோயை கண்டறிய உதவும்.

குறிப்பிட்ட இந்த முறையானது Department of Health (United Kingdom) and The Stroke Association, the American Stroke Association பரணிடப்பட்டது 2009-10-21 at the வந்தவழி இயந்திரம் (www.strokeassociation.org) , National Stroke Association (US), The Los Angeles Prehospital Stroke Screen பரணிடப்பட்டது 2010-06-19 at the வந்தவழி இயந்திரம் (LAPSS)[4], The Cincinnati Prehospital Stroke Scale பரணிடப்பட்டது 2010-07-31 at the வந்தவழி இயந்திரம் (CPSS).[5] ஆகியவற்றால் FAST (face, arm, speech, and time)[6] என அழைக்கப்படுகிறது. தொழில்ரீதியான நெறிமுறைகளில் இந்த முறையானது பரிந்துரைக்கப்படுகிறது[7].

மேலதிக அறிகுறிகள்

  • முகம், கை, கால்களில் திடீரென தளர்வும், உணர்வற்ற தன்மையும் ஏற்படல். இது பொதுவாக உடலின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படல்.
  • வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளல், விழுங்குதல் கடினமாதல்
  • திடீரென ஏற்படும் குழப்பம், பேச முடியாமையும், கிரகிக்க முடியாமையும்.
  • திடீரென ஒரு கண்ணிலோ, இரண்டிலுமோ பார்வைப் புலன் குறைவடைதல், அல்லது முற்றாக அற்றுப் போதல்
  • திடீரென நடக்க முடியாமல் போதல், உடற் சமநிலை குழம்புதல்,
  • காரணம் தெரியாமல் திடீரென ஏற்படும் தீவிர தலைவலி, மற்றும் மயக்க உணர்வு ஏற்படல்

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுமாயின், உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லல் வேண்டும்.

Remove ads

சிகிச்சை

சிகிச்சை மூலம் மூளைக்கு ஏற்படும் மேலதிக பாதிப்புக்கள் தடுக்கப்படுவதுடன், பக்கவாதம் ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி, மீண்டும் ஏற்படாமல் தடுத்தல் ஆகும்.

பக்கவாதநோயானது உடனடியாக தீவிர சிகிச்சை கொடுக்கப்பட வேண்டிய ஒரு நோயாகும். பக்கவாத தாக்கம் ஏற்படின் மூளையின் கலங்கள் சில நிமிடங்களிலேயே அழிவடைய ஆரம்பித்து விடும். எனவே பக்க வாதத்துக்கான அறிகுறிகள் ஏதாவது சந்தேகப்படும்படியாக ஏற்படுமாயின், அறிகுறிகள் இல்லாமல் போகின்றதா எனப் பார்த்துக் கொண்டிராமல், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அறிவித்து, கூடிய விரைவில் தகுந்த மருத்துவரின் உதவியை நாட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆரம்ப சிகிச்சை[8]

  • பக்கவாதத் தாக்கம் இருப்பின், உடலில் நீரற்றநிலை (dehydration) ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதால், உடனடியாக நாளம் மூலம் திரவம் வழங்கப்படும்.
  • மூளைக் கலங்களுக்கு போதியளவு பிராண வாயு கிடைப்பதை உறுதிப்படுத்தும் முகமாக, செயற்கையாக பிராண வாயு வழங்கப்படும்.
  • மூச்செடுப்பதில் சிரமம் இருப்பின், அதை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • நெஞ்சு வலியுடன் வருபவர்களுக்குப் போலல்லாமல், பக்கவாதத்துடன் வரும் நோயாளிகளுக்கு பொதுவாக உடனடியாக ஆஸ்பிரின் கொடுக்கப்படுவதில்லை.
  • விழுங்கும் தன்மையை அவதானித்தறியும் வரை உணவோ, நீராகாரமோ வாயினால் அருந்த அனுமதிக்கப்படுவதில்லை.
  • மூளைக்கு போதியளவு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதற்காக, உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் வழங்கப்படும்.
  • பக்கவாதம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியவும், மேலதிக பக்கவாதத் தாக்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்குமான நடவடிக்கைகள் உடனடியாக மேற் கொள்ளப்படும். காரணம் ஒரு முறை தாக்கத்துக்கு உட்பட்டவர்களிடம், மேலதிக தாக்கம் ஏற்படும் சாத்தியம் மிக அதிகமாக இருக்கும்.

மருந்துகள்

தடுக்கும் முறைகள்[9]

  • இரத்த அழுத்தம் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஓரளவு உயர் இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இருந்தாலே, பக்கவாதம் ஏற்படக் கூடிய காரணியாக மாறிவிடும்.
  • உடலில் கொலஸ்ரோல் அளவு அதிகரிக்காமல் உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதயத் துடிப்பு ஒழுங்கற்று இருக்குமாயின், அதனை சாதாரண நிலைக்கு கொண்டு வரத்தக்க மருந்துகள் எடுக்கப்பட வேண்டும்.
  • பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக அதிகரித்த நிகழ்தகவுடயவர்களுக்கு ஆஸ்பிரின் கொடுக்கப்படுவதுண்டு.
  • நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட வேண்டும்.
  • புகைத்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
  • பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தோன்றின், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவின் உதவியை நாட வேண்டும்.

பராமரிப்பு

பக்கவாதத்தால் ஏற்படும் விளைவுகள் வேறுபடுவதால், பராமரிப்பும் அதற்கேற்பவே அமையும். பராமரிப்பின் நோக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை இயலுமானவரை சாதாரண வாழ்க்கை வாழ வழிவகுத்தல் ஆகும்.

  • நோயாளி படுக்கையிலேயே இருப்பாராயின், படுக்கைப்புண் ஏற்படுவதைத் தவிர்த்தல் வேண்டும். இதற்காக இரு மணித்தியாலத்துக்கு ஒரு முறை நோயாளி படுத்திருக்கும் பக்கத்தை மாற்றுவதுடன், தோலை உலர்வாகவும் சுத்தமாகவும் பேணுதல் வேண்டும்.
  • நோயாளியின் கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுமாயின், செயற்கை சிறுநீர்க் குழாய் பொருத்தப்பட்டு, பராமரிப்பவருக்கு அக்குழாயைப் பராமரித்தல்பற்றி சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
  • நோயாளிக்கு விழுங்க முடியாது போனால், நாசியறை-இரைப்பைக் குழாய் பொருத்தப்பட்டு, அதன்மூலம் உணவு, நீர் என்பன வழங்கப்பட வேண்டும். இக்குழாயும் சுத்தமாக பராமரிக்கப்படல் வேண்டும்.
  • நோயாளிக்கு நடப்பது கடினமாயின், சக்கர நாற்காலி, ஊன்றுகோல் என்பன பாவிக்க முடியும்.
  • நோயாளி சாதாரண வாழ்க்கை வாழ ஏற்புடைய வகையில் வீட்டு சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்படல் நல்லது.
  • நோயாளிக்குத் தேவையான உடற்பயிற்சி, தொழிற்பயிற்சி, பேச்சுப்பயிற்சி போன்றவற்றை வழங்க வேண்டும்.
  • நோயாளிக்கு நிறையுணவு வழங்கலும், போதியளவு நீர் அருந்தச் செய்தலும் முக்கியமானவையாகும்.
Remove ads

மேலதிக தகவல்களுக்கு

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads