பதம் (இசை, நாட்டியம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதம் என்பது நாயகன், நாயகி, சகி பாவத்தில் அமைக்கப்பட்ட தெய்வீக உருப்படி ஆகும். இது முதலில் நாட்டிய சங்கீதத்தில் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. பின்பு அதன் இனிமை கருதி இசைக் கச்சேரிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
நாயகன் அல்லது நாயகி அல்லது சகி (தோழி)யால் பாடப்படுவதாகப் பதத்தின் சாகித்தியம் அமைந்திருக்கும். பெரும்பாலான பதங்கள் நாயகிகளாலும், சகிகளாலும் பாடப்பட்டவையாகவே உள்ளன. இது மதுர பாவத்தில் அமைந்த உருப்படியாகும்.
Remove ads
பொருள்
பதங்களில் அதாவது பதங்களின் சாகித்தியம் வெளிப்படையாகச் சிருங்காரப் பொருளைக் கொடுப்பினும் (சிற்றின்பக் கருத்து) ஆழமாக நோக்கினால் பெரிய தத்துவம் அடங்கியிருக்கும். அதாவது நாயகன், நாயகி, சகி என்னும் மூவரில் நாயகன் பரமாத்மா ஆகிய கடவுளையும், நாயகி ஜீவாத்மாவாகிய மனிதனையும், சகி ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் சேர்க்கும் ஞான குருவையும் குறிக்கும்.
சிருங்காரத்தின் அதி தேவதையாக சித்தரிக்கப்படும் கிருஷ்ணனை நாயகனாகக் கொண்டு அதிக பதங்கள் இயற்றப்பட்டுள்ளன. பச்சையான சிற்றின்பத்தை விபரிக்கும் பதங்களும், ஏளனப் பதங்களும், நகைச்சுவைப் பதங்களும் உண்டு. சில பதங்களில் பழமொழிகள், இராகங்களின் பெயர்கள், மருந்துகளின் பெயர்கள், ஆபரணங்களின் பெயர்கள் முதலியனவும் காணப்படுகின்றன.
Remove ads
அங்கங்கள்
பதத்திற்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்கங்களும் உண்டு. 2, 3 சரணங்கள் இருப்பினும் பெரும்பாலும் சரணத்தின் பின் இரு அடிகளும் அனுபல்லவியின் தாதுவைப் பின்பற்றியிருக்கும்."பாலனே வானிபை" எனத் தொடங்கும் காம்போதி இராகப் பதம் அனுபல்லவியில் தொடங்குகிறது.
சாகித்தியமும், பண்பும்
பதத்தின் சாகித்தியம் பேச்சு வழக்குச் சொற்களால் ஆக்கப்பட்டிருக்கும். பதங்களை இயற்றுவதற்கு அலங்கார சாஸ்திர ஞானமும், கவித்துவமும், இராக ரஸ உணர்ச்சியும் இருப்பது மிக அவசியம். பதங்களில் சந்தோஷம், சலிப்பு, துக்கம் முதலிய உணர்ச்சிகளைக் கொண்டு சாகித்தியம் அமைந்திருக்கும். ஷேத்ரக்ஞர் சிருங்கார சாஸ்திரத்திலுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் தனது பதங்களின் மூலமாகச் சித்தரித்துள்ளார். பதங்களில் சங்கதிகள் அனேகமாகக் காணப்படாது. கடினமான பிரயோகங்கள் இருக்காது. இராகத்தின் ஸ்வரூபம் பதங்களில் சிறப்பாகக் காணப்படும்.
பதங்களில் நிரவல், கற்பனை ஸ்வரம் பாடுவது வழக்கமில்லை. தெலுங்குப் பதங்கள் கிருஷ்ணனை நாயகனாகவும், தமிழ்ப் பதங்கள் முருகனை நாயகனாகவும் கொண்டுள்ளன.
தெலுங்குப் பதங்களை இயற்றியவர்கள்
- ஷேத்ரக்ஞர்
- பரிமளரங்கர்
- கஸ்தூரிரங்கர்
- சாரங்கபாணி
- மூவலூர் சபாபதி ஐயர்
தமிழ்ப் பதங்களை இயற்றியோர்
- முத்துத் தாண்டவர்
- கனம் கிருஷ்ணையர்
- கவிக் குஞ்சர பாரதி
- மாம்பழக் கவிராயர்
- சுப்பராம ஐயர்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads