பறம்பு மலை

From Wikipedia, the free encyclopedia

பறம்பு மலை
Remove ads

பறம்பு மலை 10°14'38.44"N சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் [2] எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் [3] குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.[4]

Thumb
குறிஞ்சியும் மருதமும்
Thumb
பறம்பின் முகடு [1]
Remove ads

இருப்பிடம்

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும்.

Remove ads

பறம்பு மலை வளம்

Thumb
திருக்கொடுங்குன்றம் என்னும் பிரான்மலை
Thumb
பறம்புமலை
  • பறம்புநாடு ‘பெரும்பெயர்ப் பறம்பு’ எனப் பலராலும் போற்றப்பட்டது.[5]
  • பறம்புநாடு 300 ஊர்களைக் கொண்டது.[6]
  • பறம்பு நாடானது அறை [7], பொறை [8] முதலானவற்றைக் கொண்டது. இந்த நாட்டிலிருந்த ஒரு குளம் எட்டாம் நாள் பிறைநிலா போல வளைவாக இருந்தது.[9]
  • பறம்பு மலையில் ஓர் ஊரிலிருந்த ‘பனிச்சுனை’ நீர் மிகவும் சுவையானது.[10][11] இந்தச் சுனைநீர் எப்போதாவது மட்டுமே கிட்டும்.[12]
  • பறம்பு மலை முற்றுகையின்போது பாரி வளர்த்த பறவைகள் பறந்து சென்று நெற்கதிர்களை அவனுக்குக் கொண்டுவந்து தந்தன.[13]
  • பறம்பு மலையில் குறத்தியர் மூட்டிய சந்தனப் புகை பக்கத்தில் உள்ள வேங்கைப் பூக்களோடு சேர்ந்து மணக்கும்.[14]
  • பறம்புமலை மூங்கில்-நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் ஆகிய நான்கும் விளையும் உழவர் உழாத நான்கு வளங்களை உடையது. கபிலர் புறம் 109
Remove ads

பறம்பு நாடு

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு [15] எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டார். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக,

மேலதிகத் தகவல்கள் எல்லைத்திசைகள், எல்லைப்பகுதிகள் ...

எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது.[16]

பாடிய புலவர்கள்

சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.

கல்வெட்டுச் சான்றுகள்

இப்பறம்பு மலை தற்காலத்தில் பிரான்மலை என்று வழங்கப் பெறுகிறது. இங்குள்ள விசுவநாதர் கோயில் கருவறை வடக்குப்புற அடிப்படைச் சுவரில்,

...... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்
பாரிசுரமும் இக்களங்களில்

என்று குறிக்கப் பெற்றுள்ளது.

அதே கோயில் பின்புறம் முகப்பு அடிப்படை முகப்புப் பட்டைத் தொடரில்,

..... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில்
பாரிசுரமும் இவ்ஊர்களில் ....

என்றும் இரு கல்வெட்டுகள் இருக்கின்றன.

இத்தலத்தைப் பற்றியனவாக இருபத்தொரு கல்வெட்டுக்கள் அரசியலாரால் கி.பி. 1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன. ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் குலசேகர பாண்டியனுடைய ஆட்சி 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் பாதிரியார்.

இத்தலத்தில் சுந்தரபாண்டியன் மண்டபம் (இது கருப்பக் கிருகவாயிலில் உள்ளது) ஆறுகால் மண்டபம் (-144 of 1903), லக்ஷ்மி மண்டபம்(-142 of 1903), முதலிய மண்டபங்களும் , விசுவநாதர் கோயில்(-146 of 1903), சுப்பிரமணிய சுவாமி கோயில் (-152 of 1903) முதலியனவும் கோயிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் கிராமத்தில் ஷ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது(-154 of 1903). இறைவன் மங்கைநாதர்(-138 of 1903) எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார்(-140 of1903) எனவும், நல்லமங்கைபாகர் எனவும், (-154 of 1903) குன்றாண்ட நாயனார் எனவும்,( -202 of 1924) குறிப்பிடப்பெறுகின்றார்.

பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன் I,சுந்தரபாண்டி யன்II, பராக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப் பொன்னும் நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன; பல கல்வெட்டுக்கள். கி.பி. 1251 – 1264க்குள் ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச்சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன் நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது(-154 of 1903).

1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள் ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி 9ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை எழுந்தருள் வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூ ரானான கொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்கு நிபந்தமும் அளித்தான்(-208 of 1934). குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலி யுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர் (-194 of 1924) . கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாம பூசைக்கு நிலம் அளித் தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர் (-202 of 1924). காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான் (-203 of 1924). விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்(-207 of 1924), உற்சவத்திற்காகவும் (-196 of 1924), கானூர் முதலிய இடங்களை அளித்தனர்,

Remove ads

விடுதலைப் போராட்டக் காலத்தில் பறம்புமலை (பிரான்மலை)

மூவேந்தர்களுக்குப் பின்னர் பறம்புமலை பெயர் மாற்றம் பெற்றுப் பிரான்மலை என்று வழங்கப் பெற்றது. இக்காலகட்டத்தில் இது இராமநாதபுரம் சமசுதானத்திலும், சிவகங்கைச் சீமைக்குட்பட்டும், புதுக்கோட்டை சமசுதானத்திலும் விளங்கியிருக்கிறது. ஆங்கிலேளயர்கள் வருகையின்போது இம்மலைப்பகுதி மூவருக்கும் உரிய மேய்ச்சல் நிலமாக இருந்துள்ளது. இந்த மேய்ச்சல் நில எல்லை உரிமையில் ஆங்கிலேயர்களும் தலையிட்டுச் சமரசப் பேச்சுகளுக்கு முயன்றிருக்கிறார்கள். தொடக்கத்தில் ஆங்கிலேயரோடு நட்புப் பூண்டிருந்த மருதுசகோதரர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகிய போராளிகளுக்கு ஆதரவளித்துத் தங்கள் தேசபக்தியைக் காட்டுவதற்கு அவர்களுக்கு எதிராகப் போர்புரிய வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் இந்தப் போராட்டக் குழுக்களின் முக்கியப் பகுதியாக பிரான்மலை விளங்கியிருக்கிறது. கட்டப்பொம்மன் சிறைப்பட்டவுடன் அங்கிருந்து தப்பித்த ஊமைத்துரை மருதுபாண்டியர்களை நாடி வந்தபோது அவரை மனிதர்கள் யாரும் காணமுடியாதபடி பிரான்மலையுச்சியில் ஒளித்து வைத்துள்ளனர். இந்த இடம் இன்றும் ஊமையன் குடம்பு என்று வழங்கப்படுகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான மருதுபாண்டியர்களின் போரில் பறம்புமலை எனப்படும் பிரான்மலை ஒரு முக்கியக் கோட்டையாக விளங்கியிருக்கிறது. உலகத்திலேயே முதன்முதலாக இராக்கெட் தாக்குதல் முறையில் போர் நடந்துள்ளது. மலையுச்சியில் இன்றும் ஓர் பெரிய பீரங்கி அதன் நினைவாக இருக்கிறது. ஆங்கிலத் தளபதி வெல்ஸின் இராணுவக்குறிப்புகள் பிரான்மலையின் கோட்டையமைப்பைக் குறித்துப் பெரிதும் விளக்குகின்றன. பறம்புமலையாகிய பிரான்மலையை வெல்சு பெறாமல்லே (PERAHMALLE) என்று குறிப்பிடுவதோடு அதன் நுட்பங்களைக் குறித்தும் விளக்குகிறார். கண்காணிப்புக் கோபுரங்களும், எதிர்த்தாக்குதல் நடத்தும் இரகசிய வழிகளும் நிறைந்ததாக அந்தக் கோட்டை இருந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது.[17]

Thumb
பாரி ஆண்ட பறம்பு மலையின் விளிம்பு
Remove ads

தற்காலச் செய்திகள்

பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா். இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

Remove ads

சான்றாதாரம்

கவிஞர் மரு. பரமகுரு எழுதிய பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு என்னும் நூலிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் காண்க

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads