பாரசீகக் கட்டிடக்கலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாரசீகக் கட்டிடக்கலை என்பது பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரான் நாட்டினதும் பண்டைக் காலத்தில் அதன் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த பெரிய ஈரானினதும் கட்டிடக்கலையைக் குறிக்கும். இக் கட்டிடக்கலையின் வரலாறு ஏறத்தாழ கிமு 5000 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து பல ஆயிரவாண்டுகள் நிலவியது. இதன் செல்வாக்குடன் கூடிய கட்டிடங்கள் சிரியா முதல் வட இந்தியா மற்றும் சீன எல்லை வரையும், காக்கேசியப் பகுதி தொடக்கம் சான்சிபார் வரையும் பரந்து காணப்படுகின்றன. பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் குடியானவர்களின் குடிசைகள், தேநீர் இல்லங்கள், பூங்கா மண்டபங்கள், உலகின் மிகப் பெரிய கட்டிடங்களுள் அடங்கக்கூடிய கட்டிடங்கள் எனப் பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன[1].

பாரசீகக் கட்டிடக்கலை அமைப்பு அடிப்படையிலும், அழகியல் அடிப்படையிலும் பல்வகைப்பட்டுக் காணப்படுகின்றது. இவ்வாறமைந்த கட்டிடங்கள் முன்னைய மரபுகளினதும் பட்டறிவினதும் அடிப்படையில் படிப்படியாக வளர்ச்சி பெற்றவையாக உள்ளன. அடிக்கடி இடம்பெற்ற ஆக்கிரமிப்புகள், பண்பாட்டு அதிர்ச்சிகள் எல்லாவற்றையும் கடந்து, எவ்விதமான திடீர்ப் புத்தாக்கங்களும் இன்றிப் பாரசீகக் கட்டிடக்கலை, பிற முசுலீம் நாடுகளின் கட்டிடக்கலையிலிருந்து வேறுபட்ட தனித்துவமான ஒரு கட்டிடக்கலையாக வளர்ச்சியடைந்தது[2] இக் கட்டிடக்கலையின் வடிவம், அளவு; வளைகூரை, குவிமாடம் என்பவற்றின் கட்டுமானங்கள்; அழகூட்டல்கள் என்பன வேறெந்தக் கட்டிடக்கலைக்கும் குறையாத பெறுமதி வாய்ந்தவை[3].

Thumb
இசுபகானில் உள்ள நாக்சே சகான் சதுக்கம். 360° தோற்றம்

மரபு வழியில், பாரசீகக் கட்டிடக்கலையின் முதன்மையான அழகூட்டற்கூறு அண்டக் குறியீட்டியம் ஆகும். இதன் மூலமே மனிதனை மேலுலகத்தின் சக்திகளோடு தொடர்புடன் வைத்திருக்க முடியும் என நம்பப்பட்டது. இக் கருத்துரு ஏறத்தாழ ஆசியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்டதோடு, இன்றுவரை நிலைத்திருப்பதையும் காண முடியும். இது பாரசீகத்தின் கட்டிடக்கலைத் தொடர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததோடு அல்லாமல், அதன் உணர்வு அடிப்படையிலான இயல்புகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

Remove ads

அடிப்படைக் கொள்கைகள்

Thumb
யாசிட்டில் மேய்பாட் என்னும் இடத்தில் உள்ள ஒரு "புறா மாடம்".

உள்நாட்டு அரசியல் குழப்பங்களாலும், வெளிநாட்டுத் தலையீடுகளினாலும், தற்காலிகமான விலகல்கள் இருந்தபோதும், மரபுவழியான பாரசீகக் கட்டிடக்கலை ஒரு தொடர்ச்சியைப் பேணி வந்துள்ளது. இதனால் இக் கட்டிடக்கலையானது வேறு கட்டிடக்கலைப் பாணிகளுடன் குழம்பிக்கொள்ள முடியாத வகையிலான பாணியை எக்காலத்தும் கொண்டிருந்தது எனலாம்.

பாரசீகக் கட்டிடக்கலையிலே எந்தக்கட்டிடமுமே முக்கியத்துவம் அற்றது எனக் கூற முடியாது. பூங்கா மண்டபங்கள் கூட மதிப்புக்கு உரிய வகையிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டன. மிகவும் எளிமையான வழியோரத் தங்குமிடங்கள் கூடக் கவர்ச்சி மிக்கவையாகவே இருந்தன. வெளிப்படுத்தும் தன்மையிலும், புரிந்துகொள்ளக்கூடிய தன்மையிலும் பெரும்பாலான பாரசீகக் கட்டிடங்கள் தெளிவானவையாகவே இருந்தன. எளிமையும், செறிவும் கொண்ட வடிவங்கள் காண்பவர்களோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளை அழகூட்டல்களும், நுட்பமான அளவு விகிதங்களும் அவற்றைத் தொடர்ச்சியாகப் பார்க்கத் தூண்டுகின்றன[5].

பாணிகளின் வகைப்பாடு

பாரசீகத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த நிலப்பகுதிகளிலும் பல்வாறு காலகட்டங்களிலும் நிலவிய மரபுவழிக் கட்டிடக்கலையைப் பின்வருமாறு ஏழு பாணிகளாக வகுக்க முடியும்.

  • இசுலாமுக்கு முந்திய காலம்:
    • பாரசீகப் பாணி (ஆக்கிமெனிட், மெடியன், எலமைட் காலப்பகுதிகள்)
    • பார்த்தியப் பாணி (பார்த்திய, சசானியக் காலப்பகுதிகள்)
  • இசுலாமியக் காலம்:
    • கோராசானி பாணி
    • ராசி பாணி
    • அசாரி பாணி
    • இசுபகானி பாணி

கட்டிடப்பொருட்கள்

கிடைக்கக்கூடிய கட்டிடப்பொருட்கள் பாரசீகக் கட்டிடக்கலையில் முதன்மையான வடிவங்களைத் தீர்மானித்தன. பாரசீகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மேட்டு நிலங்களில் களிமண் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருந்ததால், பழைய காலத்துக் கட்டிடங்களில் களிமண் பயன்படுத்தப்பட்டது. களிமண்ணை அச்சுக்களில் இட்டு கூடிய அளவுக்கு அழுத்தி உலரவிடும் மிகவும் தொன்மையான தொழில் நுட்பம் பயன்பட்டது. இப் பழைய தொழில்நுட்பம் எப்பொழுதும் முற்றாகக் கைவிடப்படவில்லை. நல்ல நெகிழ் தன்மை கொண்ட மண்ணும், சுண்ணாம்பும் போதிய அளவில் கிடைத்ததால் செங்கல் உற்பத்திக்கும் வழி ஏற்பட்டது.

Thumb
The bi-millennium old citadel of Arg-é Bam: சுடாத செங்கற்களினால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய அமைப்பு.

வடிவம்

பாரசீகக் கட்டிடக்கலை பெருமளவில் குறியீட்டு வடிவங்களைப் பயன்படுத்துகின்றது. வட்டம், சதுரம் போன்ற தூய வடிவங்கள் பயன்படுத்தப்படுவதுடன் கிடை அமைப்பு பெரும்பாலும் சமச்சீர் ஆனவையாகவும், நீள்சதுர முற்றங்களையும், மண்டபங்களையும் கொண்டிருப்பவையாகவும் காணப்படுகின்றன.

வடிவமைப்பு

பாரசீகக் கட்டிடக்கலையின் சில வடிவமைப்புக் கூறுகள் பாரசீக வரலாற்றுக் காலம் முழுதும் தொடர்ந்து இருப்பதைக் காணலாம். அளவு தொடர்பான உணர்வும்; எளிமையானவையும், மிகப் பெரியனவுமான வடிவங்களும் தெளிவாகத் தெரிவன.

Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads