பாஸ்டன்

அமெரிக்க மாசச்சூசெட்சு மாநிலத் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

பாஸ்டன்
Remove ads

பாஸ்டன் (இலங்கை வழக்கு: பொஸ்ரன்) அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மக்கள்தொகையின்படி ஐக்கிய அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பொதுநலவாயத்தின் மிகப் பெரும் நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.[3] மாசச்சூசெட்சில் கவுன்டி அரசு 1999இல் கலைக்கப்படும் வரை பாஸ்டன் சஃபோக் கவுன்ட்டியின் தலைமையிடமாகவும் இருந்தது. 48 சதுர மைல்கள் (124 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 2014இல் 655,884 உடன் [4] நியூ இங்கிலாந்தின் மிகப் பெரும் நகரமாகவும் உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 24வது பெரிய நகரமாக உள்ளது.[5] இதனை மையமாகக் கொண்ட பெருநகர பாஸ்டன் மக்கள்தொகை 4.7 மில்லியனாக உள்ளது.[6]

விரைவான உண்மைகள் பாஸ்டன் நகரம், நாடு ...

ஐக்கிய அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றான பாஸ்டன், சாமுத் மூவலந்தீவில் 1630இல் இங்கிலாந்திலிருந்து புலம்பெயர்ந்த தூய்மையாளர்களால் நிறுவப்பட்டது.[7][8] பாஸ்டன் படுகொலை, பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம், பங்கர் ஹில் சண்டை, பாசுடன் முற்றுகை போன்ற அமெரிக்கப் புரட்சியின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தேறியுள்ளன. பெரிய பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகும் இந்த நகரம் முதன்மைத் துறைமுகமாகவும் தயாரிப்பு மையமாகவும் விளங்கியது; கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகவும் விளங்கி வருகின்றது.[9][10] கடலடி நிலமீட்பு மற்றும் நகராட்சி ஒன்றிணைப்பு மூலமாக பாஸ்டன் சாமுத் மூவலந்தீவிற்கப்பாலும் விரிவடைந்து வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றது; பானுவல் கூடம் மட்டுமே ஆண்டுக்கு 20 மில்லியனுக்கும் கூடுதலானப் பயணிகளை ஈர்க்கின்றது.[11] பாஸ்டனில் தான் ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொதுப் பள்ளி, பாஸ்டன் இலத்தீன் பள்ளி (1635),[12] முதல் சுரங்க இரயில்பாதை அமைப்பு (1897),[13] மற்றும் முதல் பொதுப் பூங்கா (1634) அமைந்தன.

இப்பகுதியிலுள்ள பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாஸ்டனை உயர்கல்விக்கான பன்னாட்டு மையமாக ஆக்கியுள்ளன. சட்டம், மருத்துவம், பொறியியல், மற்றும் வணிகவியல் கல்விக்கு முதன்மை சேரிடமாக பாஸ்டன் விளங்குகின்றது. புத்தாக்கத்திற்கும் தொழில் முனைவிற்கும் பாஸ்டன் உலகிற்கு முன்னோடியாக விளங்குகின்றது.[14][15] பாஸ்டனின் பொருளாதாரத்தில் நிதியம்,[16] தொழில்முறை வணிக சேவைகள், உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மற்றும் அரசு செயல்பாடுகள் முதன்மையாக உள்ளன.[17] இங்குள்ள குடும்பங்கள் நாட்டிலேயே மிகுந்த ஈகைக்குணம் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்;[18] பேண்தகுநிலை மற்றும் முதலீட்டில் இங்குள்ள நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.[19] உலகின் வாழத்தகுந்த நகரப் பட்டியல்களில் முதலிடங்களைப் பெற்றபோதும்[20] ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகுந்த வாழ்நிலைச் செலவு கொண்ட நகரமாக பாஸ்டன் விளங்குகின்றது.[21]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads