பிரான்சிய இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரான்சிய இராச்சியம் (Kingdom of France, French: Royaume de France) மேற்கு ஐரோப்பாவில் தற்கால பிரான்சுக்கு முன்பாக நடுக்காலத்திலும் துவக்க நவீனக் காலத்திலும் இருந்து வந்த முடியாட்சியாகும். ஐரோப்பாவின் மிகவும் வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கியது. நடுக்காலத்தின் பிற்பகுதியிலும் நூறாண்டுப் போர்களுக்கு பின்பும் உலக வல்லமை கொண்டிருந்தது. தவிரவும் துவக்க குடியேற்றவாத நாடுகளில் பிரான்சிய இராச்சியமும் ஒன்றாகும்; வட அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க உடமைகளைக் கொண்டிருந்தது.
843ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெர்துன் உடன்பாட்டின்படி கரோலிஞ்சியப் பேரரசின் மேற்குப் பாதி, மேற்கு பிரான்சியாவாக (பிரான்சியா ஆக்சிடென்டலிசு) இந்த இராச்சியம் உருவானது.[1] கரோலிஞ்சிய வம்சவழியில் வந்தோர் 987ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தனர். 987இல் இயூ கெப்பே அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இவர் கெப்பேசிய வம்சத்தை நிறுவினார்.[2] இப்பகுதி இடைக்காலத்தில் பிரான்சியா எனவும் ஆட்சியாளர் ரெக்சு பிரான்கோரம் ("பிராங்குகளின் அரசர்") எனவும் அறியப்பட்டனர். 1190இல் தம்மை முதன்முதலாக ராய் டெ பிரான்சு ("பிரான்சின் அரசர்") என அழைத்துக் கொண்டவர் பிலிப் II ஆகும். பிரான்சு கெப்பேசியர்களால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது; அவர்களது பயிற்சியில் வந்த வெலுவா, பூர்பூன்களும் 1792ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியால் முடியாட்சி வீழ்த்தப்பட்டவரையில் ஆண்டு வந்தனர்..
இடைக்காலத்து பிரான்சில் அதிகாரம் பகிரப்பட்டு நிலக்கிழாரிய முடியாட்சியாக விளங்கியது. பிரிட்டனியிலும் தற்போது எசுப்பானியாவில் உள்ள காட்டலோனியாவிலும் பிரான்சிய அரசரின் அதிகாரம் மிகவும் குறைவாக இருந்தது. லொர்ரைன், புரொவென்சு பகுதிகள் புனித உரோமைப் பேரரசின் மாநிலங்களாக இருந்தன. துவக்கத்தில் சமய சார்ப்பற்றவர்களாலும் சமய குருக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அரசர், பின்னாளில் அரசரின் மகனுக்கே முடி சூட்டும் கொள்கை நிறுவப்பட்டது; இது சாலிக் சட்டத்தின் மூலம் முறையாக்கப்பட்டது. இடைக்காலத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்து அரசர்கள் பிரான்சிய அரியணைக்கு உரிமை கோரினார்கள். இதனால் நூறாண்டுப் போர் என அறியப்பட்ட சண்டைகள் 1337 முதல் 1453 வரை நடந்து வந்தன. தொடர்ந்து பிரான்சு இத்தாலியிலும் தனது ஆட்சியை விரிவாக்க முயன்றது; ஆனால் இதற்காக 1494–1559 காலத்தில் நடைபெற்ற இத்தாலியப் போர்களில் எசுப்பானியாவிடம் தோற்றது.
நவீனக் காலத்தின் துவக்கத்தில் பிரான்சில் அதிகாரம் மெதுவாக மையப்படுத்தப்பட்டு வந்தது. பிரெஞ்சு மொழி மற்ற மொழிகளை ஒதுக்கி அலுவல்மொழியானது; அரசர் முழுமையான முடியாட்சியைத் தழுவினார். இருப்பினும் நிர்வாகத்துறை, வரிவிதிப்பு, சட்டம், நீதித்துறை, சமயப் பிரிவுகள், உள்ளூர் தனிச்சிறப்புகளால் காலங்காலமாக வந்த, பிராந்திய வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. சமயத்துறையில் பெரும்பாலான கத்தோலிக்கர்களுக்கும் சிறுபான்மை சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே பிளவுபட்டிருந்தது. 1562க்கும் 1598க்கும் இடையே நடந்த சமயப் போர்களுக்குப் பிறகு சீர்திருத்தவாதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். கூட்டாக புதிய பிரான்சு என அறியப்பட்ட வட அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு பிரான்சு உரிமை பாராட்டியது. 1763இல் பெரிய பிரித்தானியாவுடனான போரில் இப்பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது. அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்சின் குறுக்கீடு புதிய ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவாகக் காரணமாக அமைந்தது.
பிரான்சிய இராச்சியம் 1791இல் எழுதப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது; ஆனால் ஓராண்டு கழித்து இந்த இராச்சியம் அழிக்கப்பட்டு முதல் பிரெஞ்சுக் குடியரசு உருவானது. 1814இல் மற்ற பேரரசுகளால் முடியாட்சி மீட்கப்பட்டது; இது 1848இல் பிரெஞ்சுப் புரட்சியால் வீழ்த்தப்பட்டது.
Remove ads
மேற்சான்றுகள்
வரலாற்று நூல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads