பிரெக்சிட்டு

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்கிறது From Wikipedia, the free encyclopedia

பிரெக்சிட்டு
Remove ads

பிரெக்சிட்டு (Brexit)[1] என்பது பிரிட்டிசு, "British", மற்றும் "exit" ஆகியவற்றின் இருபாதி ஒட்டுசொல்லாகும். இது ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதைக் குறிக்கும் பரப்புரைச் சொல்லாகும். ஐக்கிய இராச்சியத்தில் சூன் 2016 இல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 52% பிரித்தானியர் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரித்தானிய அரசு 2017 மார்ச்சில் வெளியேற்றத்தை முறைப்படி அறிவித்து, அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து 2020 சனவரி 31 பிப 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேற ஆரம்பித்தது. முழுமையான வெளியேற்றம் 2020 திசம்பர் 31 இல் நிறைவேறும் எனக் காலக்கெடுவை பிரித்தானிய அரசு அறிவித்தது.[2] 11-மாத இடைக்கலப் பகுதியில் ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது எதிர்கால உறவு பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்.[2] ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு உட்பட்டதாகவும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம், ஐரோப்பிய ஒற்றை சந்தையின் ஒரு பகுதியாகவும் இந்த இடைக்காலப் பகுதியில் தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்திருக்கும். ஆனாலும் இனி ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்புகள் அல்லது நிறுவனங்களை அது பிரதிநிதித்துவப்படுத்தாது.[3][4]

Thumb
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் (நீலம்) ஐக்கிய இராச்சியமும் (மஞ்சள்)

பிரெக்சிட் பரப்புரை யூரோ ஐயுறவுக் கொள்கையாளர்களால் மேற்கொள்ளபட்டது. ஐரோப்பிய சார்பானவர்கள் விலகலை எதிர்த்து வந்தனர். ஐக்கிய இராச்சியம் 1973 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சமூகத்தில் (முக்கியமாக ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில்) இணைந்தது. 1975 ஆம் ஆன்டில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 1970களிலும், 1980களிலும் ஐரோப்பிய சமூகத்தில் இருந்து விலகுவதற்கான பரப்புரைகள் முக்கியமாக இடதுசாரி அரசியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. தொழிற் கட்சியின் 1983 தேர்தல் அறிக்கையில் இதற்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. 1992 மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உருவானது, ஆனாலும் அது அப்போது பொது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. பழமைவாதக் கட்சியின் யூரோ ஐயுறவுக் கொள்கையாளர்கள் இவ்வொப்பந்தத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது அன்றைய பழமைவாதப் பிரதமர் டேவிட் கேமரனிற்கு பொது வாக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. 2016 சூன் மாதத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருக்க கேமரன் பரப்புரை நடத்தினார். ஆனாலும், வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் விலக ஆதரித்ததை அடுத்து கேமரன் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பிரெக்சிட்டுக்கு ஆதரவான தெரசா மே புதிய பிரதமரானார்.

29 மார்ச் 2017 அன்று, ஐக்கிய இராச்சிய அரசு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான ஒப்பந்தத்தின் 50-வது பிரிவை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் திரும்பப் பெறுவதற்கான முயற்சியைத் தொடங்கியது. 2017 சூன் மாதத்தில் தெரசா மே ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக கன்சர்வேடிவ் சிறுபான்மை அரசாங்கம் சனநாயக ஐக்கியவாதிகள் கட்சியின் ஆதரவைப் பெற்றது. தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பிரெக்சிட்டு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அந்த மாத இறுதியில் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம் மற்றும் ஒற்றைச் சந்தையை விட்டு வெளியேற பிரித்தானியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக நவம்பர் 2018 இல் விலகல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது, ஆனாலும், நாடாளுமன்றம் அவ்வொப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு மூன்று முறை எதிராக வாக்களித்தது. தொழிற் கட்சி சுங்கத் தொழிற்சங்கத்தில் தொடர்ந்திருக்க விரும்பியது, அதே நேரத்தில் பல கன்சர்வேடிவ்கள் ஒப்பந்தத்தின் நிதித் தீர்வை எதிர்த்தனர், அதே போல் வட அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசிற்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாடுகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட "ஐரிசு பின்னிணைப்பையும்" எதிர்த்தனர். லிபரல் சனநாயகவாதிகள், இசுக்கொட்டிய தேசியக் கட்சி மற்றும் பலர் முன்மொழியப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பு மூலம் பிரெக்சிட்டை இல்லாமலாக்க முயன்றனர்.

2019 மார்ச்சில், பிரெக்சிட்டை ஏப்ரல் வரை தாமதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்பதற்கான தெரசா மேயின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது, பின்னர் மீண்டும் 2019 அக்டோபர் வரை தாமதிக்கப்பட்டது. ஆனாலும், மே தயாரித்த உடன்படிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறத் தவறியதால், 2019 சூலையில் தெரசா மே தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் போரிஸ் ஜான்சன் பிரதமரானார். அவர் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை மாற்ற ஒப்புக்கொண்டு புதிய காலக்கெடுவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக உறுதியளித்தார். 2019 அக்டோபர் 17 அன்று, பிரித்தானிய அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் திருத்தப்பட்ட வெளியேற்ற ஒப்பந்தத்தை வட அயர்லாந்திற்கான புதிய ஏற்பாடுகளுடன் ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டன.[5][6] இவ்வொப்பந்தத்தை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது, ஆனால் அக்டோபர் 31 காலக்கெடுவிற்கு முன்னர் அதை சட்டமாக்குவதை நிராகரித்தது, மேலும் மூன்றாவது பிரெக்சிட்டு தாமதத்தைக் கேட்குமாறு அரசாங்கத்தை ('பென் சட்டம்' மூலம்) கட்டாயப்படுத்தியது. 2019 திசம்பர் 12 அன்று ஐக்கிய இராச்சியத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாதிகள் மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் வென்றனர், ஜான்சன் 2020 ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.[7] வெளியேறல் ஒப்பந்தத்திற்கு 2020 சனவரி 23 அன்று இங்கிலாந்தும், 2020 சனவரி 30 அன்று ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் அளித்தது, 2020 சனவரி 31 அன்று பிரெக்சிட்டு நடைமுறைக்கு வந்தது.

பிரெக்சிட்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதும், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு அதன் உண்மையான தனிநபர் வருமானத்தைக் குறைக்கும் என்பதும் பொது வாக்கெடுப்பு பொருளாதாரத்தை சேதப்படுத்தும் என்பதும் பொருளாதார வல்லுநர்களிடையே பரந்த ஒருமித்த கருத்து நிலவுகிறது.[a] பிரெக்சிட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேற்றத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாகவும், ஐக்கிய இராச்சியத்தின் உயர் கல்வி, கல்வி ஆய்வுகள் மற்றும் பாதுகாப்புக்கு சவால்களாக இருக்கும் என்றும் கருத்துகள் முன்வைக்கின்றன. பிரெக்சிட்டைத் தொடர்ந்து, விலகல் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டால் தவிர, ஐரோப்பிய ஒன்றிய சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஆகியவை பிரித்தானிய சட்டங்கள் அல்லது அதன் உச்சநீதிமன்றத்தின் மீது மேலாதிக்கத்தைக் கொண்டிருக்காது. ஐரோப்பிய ஒன்றியம் (விலகல்) சட்டம் 2018 தொடர்புடைய ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை ஐக்கிய இராச்சியம் உள்நாட்டுச் சட்டமாக மட்டுமே வைத்திருக்கிறது, அதனை அது பின்னர் திருத்தவோ அல்லது ரத்து செய்யவோ முடியும்.

Remove ads

குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads