பொம்மிரெட்டி நாகிரெட்டி
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (ஆங்கிலம்:Bommireddy Nagi Reddy) (டிசம்பர் 2 1912 - பெப்ரவரி 25 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார்[1]. வெங்காய ஏற்றுமதியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகிரெட்டி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.
Remove ads
வரலாறு
நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912-ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. இவருடைய தந்தை, வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார். இந்த தொழிலில் நாகிரெட்டி தமது 18-வது வயதில் ஈடுபட்டார். ஒரு முறை, வெங்காயம் ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கியதால் நட்டம் ஏற்பட்டது. எனவே 'பி.என்.கே' என்ற அச்சகத்தை தொடங்கினார். 'ஆந்திரஜோதி' என்ற தெலுங்கு மாத இதழைத் தொடங்கினார். நாகிரெட்டியின் மனைவி பெயர் சேசம்மா. வேணுகோபாலரெட்டி, விசுவநாத் ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி என்ற 3 மகன்களும் ஜெயம்மா, சாரதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
Remove ads
இதழியலாளர்
குழந்தைகளுக்காக தெலுங்கில் 'சந்தமாமா' என்ற சிறுவர் இதழைத் தொடங்கினார். இது பின்னர் 'அம்புலிமாமா' என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது. அது வெற்றியடையவே, பல்வேறு மொழிகளிலும் வெளியாயிற்று. ஆந்திராவைச் சேர்ந்த சக்ரபாணி என்ற எழுத்தாளர் அம்புலிமாமா இதழில் கதை எழுதி வந்தார். அப்போது நாகிரெட்டியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இருவரும் சினிமாத்துறையில் ஈடுபட விரும்பினர். அப்போது மூல நாராயண சுவாமி என்பவர் நடத்தி வந்த வாகினி ஸ்டுடியோஸ் கடும் நெருக்கடியிலிருந்ததை அறிந்து அதை குத்தகைக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தனர். பின்னர், தன்னுடைய விஜயா புரொக்டக்சன்ஸ்ஸையும் சேர்த்து வடபழனி அருகே நிலம் வாங்கி, "விஜயா-வாகினி ஸ்டுடியோ" என்ற பெயரில் படபிடிப்பு அரங்கத்தைத் தொடங்கினார்கள்.
Remove ads
திரைப்படத் தயாரிப்பாளர்
இங்கு தயாரான படங்கள் வெற்றிகரமாக ஓடின. நாகிரெட்டியின் மகள் பெயர் விஜயா. அவர் பெயரால் 'விஜயா புரொடக்ஷன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நாகிரெட்டியும், சக்ரபாணியும் தொடங்கி, 'பாதாள பைரவி' என்ற படத்தைத் தயாரித்தனர். என். டி. ராமராவ், கே. மாலதி, கிரிஜா, எஸ். வி. ரங்காராவ் ஆகியோர் நடித்த இந்தப்படம், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் தயாராகியது. தமிழ்ப்படத்துக்கான வசனத்தையும், பாடல்களையும் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.
இசை கண்டசாலா 17-5-1951-ல் வெளியான 'பாதாள பைரவி' தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றிப்படமாக அமைந்தது. பிறகு 'கல்யாணம் பண்ணிப்பார்' என்ற படத்தை நாகிரெட்டியும், சக்ரபாணியும் தயாரித்தனர். இந்தப் படத்தில் என்.டி.ராமராவ், ஜி.வரலட்சுமி ஜோடியாக நடித்தார்கள். சிறிய வேடங்களில் நடித்து வந்த சாவித்திரி, இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.
அடுத்து ஜெமினிகணேசன் -சாவித்திரி இருவரும் இணைந்து நடித்த 'குணசுந்தரி' (1954), 'மிஸ்ஸியம்மா' (1955) ஆகிய படங்கள் விஜயா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. இதில் 'மிஸ்ஸியம்மா' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பிறகு 10 ஆண்டுகள் தமிழ் படம் எதையும் நாகிரெட்டி தயாரிக்கவில்லை. 1965-ல் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவியை வைத்து, 'எங்கவீட்டுப் பிள்ளை'யை தயாரித்தார். சக்திகிருஷ்ணசாமி வசனம் எழுத, சாணக்யா இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தை தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாரித்தார்.
இந்தி படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம், வடநாட்டில் பல ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடியது. பிறகு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த 'நம் நாடு' படத்தை 1969-ல் வெளியிட்டார். இந்த படமும் வெற்றிப் படமாகும். 1974-ல் சிவாஜிகணேசன் - வாணிஸ்ரீ நடித்த 'வாணி ராணி' படத்தையும் தயாரித்தார். தமிழ், இந்தி உள்பட பல மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட சினிமா படங்களை தயாரித்தார். வாகினி ஸ்டூடியோவின் பெயர், விஜயா -வாகினி ஸ்டூடியோ என்று பிறகு மாறியது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக இது திகழ்ந்தது. இந்த ஸ்டூடியோவிலும், நாகிரெட்டி தயாரித்த படங்களிலும் சக்ரபாணி பங்குதாரராக இருந்தார். சிறந்த நட்புக்கு எடுத்துக் காட்டாக இவர்கள் விளங்கினார்கள். அக்காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிப்படங்களும் சென்னையில்தான் தயாரிக்கப்பட்டன. ஸ்டூடியோக்கள் சென்னையில்தான் இருந்தன. ஆந்திராவில் ஒரு ஸ்டூடியோ கூட கிடையாது. ஆந்திராவில் முதல்-மந்திரிகளாக இருந்த சஞ்சீவரெட்டி, பிரமானந்தரெட்டி ஆகியோர், 'உங்கள் ஸ்டூடியோவை ஆந்திராவுக்கு கொண்டுவந்து விடுங்கள். எல்லா வசதிகளும் செய்து தருகிறோம்' என்று அழைத்தார்கள்.
ஆனால், நாகிரெட்டி மறுத்துவிட்டார். 'தமிழ் மண்தான் என்னை வாழவைத்தது. கடைசி மூச்சு உள்ளவரை தமிழ்நாட்டில்தான் வாழ்வேன்' என்று கூறிவிட்டார். திரைப்படத் தயாரிப்பு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பட அதிபர்கள் வெளிப்புறக் காட்சிகளை அதிகம் படமாக்கத்தொடங்கவே, ஸ்டூடியோக்களில் வேலை குறைந்தது. இதனால் ஸ்டூடியோக்களை நடத்த முடியாமல், ஒவ்வொரு ஸ்டூடியோவாக மூடப்பட்டு வந்தன. நாகிரெட்டி, தன் ஸ்டூடியோவை மக்களுக்கு பயனுள்ள முறையில் மாற்ற விரும்பினார்.
Remove ads
இறுதிக்காலம்
ஸ்டூடியோ இருந்த இடங்களில் விஜயா மருத்துவமனை, விஜய சேச மகால் திருமண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினார். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர், இந்திய திரைப்படக் கழகத் தலைவர் போன்ற பதவிகளை பல முறை வகித்தவர் நாகிரெட்டி. 2 பல்கலைக்கழகங்கள் நாகிரெட்டிக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நாகிரெட்டி தனது நினைவாற்றலை இழந்தார். 25-2-2004 அன்று சென்னையில் நாகிரெட்டி மரணம் அடைந்தார்.
விருதுகள்
- கலைமாமணி விருது 1972 - 1973
- தாதாசாகெப் பால்கே விருது 1981
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads