பொக்காரா பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொக்காரா பள்ளத்தாக்கு (Pokhara Valley) நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு ஆகும். இது நேபாளத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பொக்காரா மற்றும் லேக்நாத் ஆகியவை இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்கள் ஆகும். காத்மாண்டு சமவெளி பள்ளத்தாக்கின் மேற்காக 203 கிலோ மீட்டர் (126 மைல்கள்) தொலைவில் கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது.[1] பொக்காரா நகரமானது நேபாளத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். காத்மாண்டு சமவெளியைப் போல இந்தப் பகுதியும் மண்ணின் களித்தன்மையும், திரவமாக்கும் திறனின் காரணமாகவும் எளிதில் நிலநடுக்கத்திற்கு இலக்காகும் பகுதியாகும்.
Remove ads
சுற்றுலா
பொக்காரா, நேபாளத்தில் உள்ள மிக பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பல சுற்றுலா பயணிகள் இமயமலைத் தொடரைப் பார்ப்பதற்காகவும், இங்குள்ள ஏரிகளைப் பார்ப்பதற்காகவும் பொக்காரா பள்ளத்தாக்குக்கு வருகிறார்கள். பொக்காரா படகு சவாரி, மலையேற்றம், நீர்ச்சறுக்கு விளையாட்டு போன்றவற்றிற்கும் கூட பிரபலமானது ஆகும். மேலும், பல விதமான செயல்களின் (நடத்தல், தவழ்தல், நீந்துதல், மலையேறுதல் போன்ற செயல்கள்) கூட்டான தீர விளையாட்டான கேனோயிங் மற்றும் கயிறு கட்டி குதிக்கும் விளையாட்டு (பங்கி குதித்தல்) ஆகிய விளையாட்டுகளும் இங்கு பிரபலமானவையாகும். நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின் படி 2009 ஆம் ஆண்டில் பொக்காரா வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 203,527 ஆகவும், அதே ஆண்டில் நேபாளம் வந்த சர்வதேச சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 509,956 ஆகவும் இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.[2]
ஏரிகள்

பொக்காரா பள்ளத்தாக்கில் உள்ள பல ஏரிகளில் பெவா ஏரி மிகப்பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரி நேபாளத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியுமாகும். இந்த ஏரியானது பொக்காரா பள்ளத்தாக்கு, சாரங்காட், மற்றும் காஸ்கிகாட் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மச்சப்புச்ரே (மீனின் வால்) மலையின் பிரதிபலிப்பினை இந்த ஏரியில் காணலாம். இந்த ஏரியில் பல சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு மகிழ்கின்றனர். பெவா ஏரியின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாக, ஏரியின் மத்தியில் ஒரு தீவினைப் போன்று காணப்படும் இரண்டு அடுக்கு பராகி பகவதி கோயில் அமைந்துள்ளது.[3] பெவா ஏரியைத் தவிரவும், பெக்னாஸ் ஏரி பொக்காரா பள்ளத்தாக்கின் மற்றுமொரு புகழ்பெற்ற ஏரியாகும். பெக்னாஸ் ஏரியானது 650 மீ உயரத்தில், 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதாகும்.[4]
குகைகள்
பொக்காரா பள்ளத்தாக்கின் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களில் மகேந்திரா குகையும் ஒன்றாகும். இந்தக் குகையானது பாடுலேசாவ்ர் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. மகேந்திரா குகை என்பது மறைந்த நேபாள அரசர் மகேந்திர பீர் பிக்ராம் சா தேவ் என்பவரின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் குகையானது ஒரு இயற்கையான சுரங்கம் போன்று அமைந்துள்ளது. இந்தக் குகைக்குள் ஒருவர் நடந்து செல்லும் போது குகையின் பக்கச்சுவர்களில் சுண்ணாம்புப் பாறைகள் போன்ற பலவிதப் பாறைகளைக் காணலாம். இந்தச் சுண்ணாம்புப் பாறைகளில் ஒளியானது படும்போது மின்னக்கூடிய தன்மை கொண்டவையாகும்.[5] நேபாளத்தின் இருள் நிறைந்த நோக்குமிடங்களுள் ஒன்றான மகேந்திரா குகையானது சுற்றுலாவாசிகளுக்கு இருளில் கண்டறியும் வாய்ப்பைத் தரும் குகையாக உள்ளது. வௌவால்களின் இயற்கையான வாழிடமாக உள்ள வௌவால் குகையானதும் பார்வையிடுவதற்குத் தகுதியான மற்றொரு இடமாகும். இந்தக் குகை மகேந்திரா குகையிலிருந்து 10 நிமிட நடை துாரத்தில் அமைந்துள்ளது. [6] வௌவால் குகையானது 150 மீ நீளமும் மற்றும் 25 அடி உயரமும் கொண்டதாகும். இந்தக் குகையின் நுழைவு வாயிலானது மிகவும் குறுகியதாகவும், உள்பகுதியானது போதுமான அளவிற்கு அகலமானதாகவும் உள்ளது. 15 ஆயிரம் வகையிலான வௌவால் இனங்கள், இந்தக் குகையின் முக்கிய சிறப்பம்சம் ஆகும். யானைத் தும்பிக்கைகள் மற்றும் கடவுளர்களின் படங்களை குகையின் உட்புறச் சுவர்களில் காணலாம். [7]
சர்வதேச மலை அருங்காட்சியகம்

ஒவ்வொரு ஆண்டும் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் சர்வதேச மலைக் காட்சியகத்தைப் பார்வையிடுகின்றனர். இந்த அருங்காட்சியகத்தின் பதிவுருக்கள், ஆவணங்கள் உலகெங்கிலுமுள்ள மலைகளின் கடந்த கால மற்றும் நிகழ்கால வளர்ச்சி குறித்த தகவல்களைக் கொண்டுள்ளது. [8] இந்த அருங்காட்சியகம் மகா இமயமலையின் அரங்கம், புகழ் பெற்ற மலைகளின் அரங்கம், உலக மலைகளின் அரங்கம் மூன்று காட்சியக அரங்குகளைக் கொண்டுள்ளது. இந்த அரங்கங்கள், நேபாள மக்களின் மரபு வழிக் கலாச்சாரங்கள் மற்றும் மதிப்புகளை குறிப்பிடும்வகையில் புகழ்பெற்ற சிகரங்கள், மலையேறுபவர்கள், மலைவாழ் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை, உயிரின வகைகள் மற்றும் மண்ணியல் போன்றவை குறித்த விவரங்களைத் தருகிறது. [9]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads