மரக்கானா விளையாட்டரங்கம்

பிரேசிலின் இரியோ டி செனீரோவில் அமைந்துள்ள விளையாட்டரங்கம் From Wikipedia, the free encyclopedia

மரக்கானா விளையாட்டரங்கம்map
Remove ads

எசுடேடியோ டொ மரக்கானா (அ) மரக்கானா விளையாட்டரங்கம் (Estádio do Maracanã,ஆங்கிலம்: Maracanã Stadium, standard Brazilian Portuguese: [esˈtad͡ʒju du maɾakɐˈnɐ̃], local pronunciation: [iʃˈtad͡ʒu du mɐˌɾakɐˈnɐ̃] ), பிரேசிலின் இரியோ டி செனீரோவில் அமைந்துள்ள விளையாட்டரங்கம் ஆகும். இதன் அலுவல் பெயர் எசுடேடியோ யோர்னலிசுடா மாரியோ ஃபில்ஹோ (Estádio Jornalista Mário Filho; IPA: [iʃˈtad͡ʒu ʒoɦnaˈliʃtɐ ˈmaɾju ˈfiʎu]) என்பதாகும்.

விரைவான உண்மைகள் எசுடேடியோ டொ மரக்கானா (மரக்கானா விளையாட்டரங்கம்), முழு பெயர் ...

இரியோ டி செனீரோ அரசாங்கத்தின் உடைமையான மரக்கானா விளையாட்டரங்கம், ஆறாக இருந்து தற்போது கால்வாயாக இருக்கும் மரக்கானா ஆற்றின் பெயரில் வழங்கப்படுகிறது; இந்த விளையாட்டரங்கம் இருக்கும் இடப்பகுதியும் இவ்வாற்றின் பெயரிலேயே வழங்கப்படுகிறது. உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்காக 1950-ஆம் ஆண்டில் இந்த விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது; அந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் உருகுவையிடம் 2-1 என்ற இலக்குக் கணக்கில் பிரேசில் தோல்விகண்டது.

அதன்பின்னர், பிரேசிலின் கால்பந்துக் கழகங்களுக்கிடையேயான (எ-டு: பொடாஃபோகோ, பிளமெங்கோ, ஃபுளுமினென்சு, வாஸ்கோ டா காமா கால்பந்துக் கழகங்கள்) போட்டிகளை நடத்துவதற்கு இம்மைதானம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், கலை-இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், மற்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கும் அவ்வப்போது மரக்கானா விளையாட்டரங்கம் பயன்படுத்தப்படுகிறது.

1950 உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டியின்போது நுழைவுச்சீட்டு பெற்று போட்டியைக் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,99,854 ஆகும்; அதாவது, இந்த விளையாட்டரங்கம் திறக்கப்பட்டபோது இதுவே உலகிலேயே அதிக பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட விளையாட்டரங்கம் ஆகும். தற்போது 78,838 பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் அளவுக்கு இருக்கைகள் உள்ளன; இதன்மூலம் தென் அமெரிக்கா மற்றும் பிரேசிலில் அதிக பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட மைதானம் என்ற புகழுக்கு உரித்தானதாகவிருக்கிறது.[1] 2007 பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய விளையாட்டரங்கமாக இது இருந்தது. அந்த விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் நிழைவு விழாக்கள், கால்பந்துப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கில் நிகழ்த்தப்பட்டன.

2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மற்றும் 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் பொருட்டு மரக்கானா விளையாட்டரங்கம் புனரமைக்கப்பட்டது; 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரேசிலில் நடக்கும் முதல் உலகக்கோப்பை இதுவாகும். 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகியவற்றின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் மரக்கானா விளையாட்டரங்கில் நிகழ்த்தப்படுவதாக உள்ளது. 2014 உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி மரக்கானா விளையாட்டரங்கில் நடத்தப்படும்.

புனரமைக்கப்பட்ட பின்னர் முதல் சோதனைப் போட்டியானது ஏப்ரல் 27, 2013, அன்று நடத்தப்பட்டது; இதில் முன்னாள் கால்பந்து வீரர்கள் பங்கேற்றனர். முதல் அலுவல்முறை கால்பந்துப் போட்டி சூன் 2, 2013, அன்று நடத்தப்பட்டது; இதில் பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இப்போட்டி 2-2 இலக்கு கணக்குடன் சமநிலையில் முடிவுபெற்றது.[2]

Remove ads

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads