மார்ட்டின் (தூர் நகர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூர் நகர மார்ட்டின் (Martin of Tours) (இலத்தீன்: Sanctus Martinus Turonensis; 316 – நவம்பர் 8, 397) என்பவர் இன்றைய பிரான்சு நாட்டின் தூர் என்னும் நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். தூர் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், எசுப்பானியாவில் உள்ள கொம்போஸ்தேலா சந்தியாகு நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் கட்டாயமாக சந்தித்துச் செல்லும் ஒரு சிறப்பிடமாக விளங்குகிறது.
Remove ads
புகழ்பெற்ற புனிதர்
புனித தூர் நகர மார்ட்டின் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் புனிதர்களுள் ஒருவர். அவரைப் பற்றித் தெரிகின்ற வரலாற்றுச் செய்திகளோடு, புனைவுகளும் பல கலந்துள்ளன.
புனித மார்ட்டின் ஐரோப்பா முழுவதையும் இணைக்கின்ற ஒரு பாலமாக விளங்குகின்றார். அவர் பிறந்தது அங்கேரி நாட்டில். அவருடைய இளமைப் பருவம் கழிந்தது இத்தாலி நாட்டின் பவீயா நகரில். வளர்ந்த பின் அவர் பல ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்ந்தார். இவ்வாறு ஐரோப்பாவின் பல நாடுகளை இணைக்கும் ஒருவராக அவர் துலங்குகின்றார்.[2]
Remove ads
வரலாற்றை எழுதியவர்
புனித மார்ட்டின் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் முதன்முதலாக புனித மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றைச் சில புனைவுகள் சேர்த்து எழுதினார். மார்ட்டின் போர்வீரர்களின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.
இளம்பருவம்
மார்ட்டின் இன்றைய அங்கேரி நாட்டின் பொன்னோயா மறைமாவட்டத்தில் சவாரியா (இன்று சோம்பாத்தேலி) நகரில் கி.பி. 316ஆம் ஆண்டு பிறந்தார். மார்ட்டினின் தந்தை உரோமைப் படையின் ஒரு பிரிவான அரசு குதிரை வீரர் அமைப்பில் மூத்த அலுவலராகச் செயலாற்றினார். அலுவல் காரணமாக அவர் வட இத்தாலியாவின் திச்சீனும் என்று அழைக்கப்பட்ட பவீயா நரில் தங்கியிருந்தார். அங்குதான் மார்ட்டின் தம் இளமைப் பருவத்தைக் கழித்தார்.
மார்ட்டினுக்குப் பத்து வயது ஆனபோது, அவர் தம் பெற்றோரின் விருப்பத்தை எதிர்த்து கிறித்தவ சமயத்தைத் தழுவும்பொருட்டு திருமுழுக்குப் பெறுவதற்கான ஆயத்தநிலைக் குழுவில் சேர்ந்தார். அக்காலத்தில் உரோமைப் பேரரசில் கிறித்தவம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மதமாக மாறியிருந்தாலும் (கி.பி. 313) பெருமளவில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியில்தான் பலர் நகரங்களில் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். அந்நகரங்களிலிருந்து வணிகப் பாதைகள் வழியாக, கிறித்தவர்களான யூதர் மற்றும் கிரேக்கர்களால் கிறித்தவம் மேலைப் பகுதிக்கும் கொண்டுவரப்பட்டது.
கிறித்தவம் அல்லாத பாகால் சமயம் பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் நிலவியதால் அப்பெயர் பெற்றது (pagus, paganus என்னும் இலத்தீன் சொற்களுக்கு முறையே "நாட்டுப்புறம்", "நாட்டுப்புறம் சார்ந்தவர்" என்பது பொருள்).
சமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருந்தோரிடம் கிறித்தவம் அதிகமாகப் பரவியிருக்கவில்லை. பேரரசின் இராணுவத்தினர் நடுவே "மித்ரா" (Mythras) என்னும் கடவுள் வழிபாடு பரவலாயிருந்திருக்க வேண்டும். உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறித்தவத்தைத் தழுவியதும், பல பெரிய கிறித்தவக் கோவில்கள் கட்டியதும் கிறித்தவம் பரவ தூண்டுதலாக இருந்தாலும், கிறித்தவம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்தது.
இராணுவத்தில் பதவி வகித்தவர் ஒருவரின் மகன் என்ற முறையில் மார்ட்டினுக்கு 15 வயது நிரம்பியதும் அவரும் குதிரைப்படையில் வீரனாகச் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது. கி.பி. 334 அளவில் மார்ட்டின் இன்றைய பிரான்சு நாட்டின் அமியேன் என்னும் நகரில் (அக்காலத்தில், கால் நாட்டு சாமரோப்ரீவா நகர்)குதிரைப் போர்வீரனாகப் பாளையத்தில் தங்கியிருந்தார் .
மார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி

மார்ட்டின் உரோமைப் பேரரசில் போர்வீரனாகச் சேர்ந்து, பிரான்சின் அமியேன் நகரில் தங்கியிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க தூண்டுதலாயிற்று.
ஒருநாள் மார்ட்டின் குதிரைமேல் ஏறி, அமியேன் நகரின் வாயிலை நேக்கி வந்துகொண்டிருந்தார். நகர வாயிலை நெருங்கிய வேளையில், அரைகுறையாக ஆடை உடுத்திய ஓர் இரவலர் ஆங்கு குளிரில் நின்றுகொண்டிருக்கக் கண்டார். உடனேயே, மார்ட்டின் தாம் போர்த்தியிருந்த மேலாடையை இரண்டாக வெட்டிக் கிழித்தார். ஒரு பாதியை அந்த இரவலரிடம் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னார். மறுபாதியைத் தம் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்.
அன்றிரவு மார்ட்டின் ஒரு கனவு கண்டார். அக்கனவில் இயேசுவின் உருவம் தெரிந்தது. மார்ட்டின் இரவலருக்குக் கொடுத்த மேலாடைத் துண்டை இயேசு தம் மீது போர்த்தியிருந்தார். அப்போது இயேசு தம்மைச் சூழ்ந்து நின்ற வானதூதர்களை நோக்கி, "இதோ இங்கே நிற்பவர்தான் மார்ட்டின். இவர் இன்னும் திருமுழுக்குப் பெறவில்லை. ஆனால் நான் போர்த்திக்கொள்வதற்குத் தன் ஆடையை வெட்டி எனக்குத் தந்தவர் இவரே" என்று கூறினார். இக்காட்சியைக் கண்ட மார்ட்டின் பெரு வியப்புற்றார்.
இந்நிகழ்ச்சி வேறொரு வடிவத்திலும் சொல்லப்படுகிறது. அதாவது, மார்ட்டின் துயில் கலைந்து எழுந்ததும் தன் மேலாடையைப் பார்த்தார். அது ஒரு பாதித் துண்டாக இல்லாமல் அதிசயமான விதத்தில் முழு உடையாக மாறிவிட்டிருந்தது.(Sulpicius, ch 2 பரணிடப்பட்டது 2006-09-09 at the வந்தவழி இயந்திரம்).

Remove ads
"கிறித்துவின் போர்வீரன்"
இயேசுவைக் கனவில் கண்ட மார்ட்டின் உள்ளத்தில் திடம் கொண்டவரானார். தான் எப்படியாவது உடனடியாகக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என்று முடிவுசெய்தார். தமது 18ஆம் வயதில் மார்ட்டின் கிறித்தவ திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றார்.[3]
உரோமைப் பேரரசின் இராணுவத் துறையில் போர்வீரனாக மார்ட்டின் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாட்களில் அவர் நேரடியாக சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, உரோமைப் பேரரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர் குழுவின் இருந்திருக்கக் கூடும்.
உரோமைப் படைகள் கால் நாட்டவரை எதிர்த்துப் போரிடவேண்டிய சூழ்நிலை எழுந்தது. இன்றைய செருமனியில் உள்ள வோர்ம்ஸ் (Worms) என்னும் நகரில் சண்டை நிகழப் போனது.
அப்பின்னணியில் கி.பி. 336ஆம் ஆண்டு மார்ட்டின் தாம் சண்டையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தார். அப்போது அவர் கூறியது: "நான் உரோமைப் பேரரசனின் போர்வீரன் அல்ல, மாறாக நான் கிறித்துவின் போர்வீரன். எனவே, நான் போரில் கலந்துகொள்ளப் போவதில்லை!"
மார்ட்டின் சண்டையில் பங்கேற்பதில்லை என்று கூறியது அவருடைய கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது என்று ஒருசிலர் குற்றம் சாட்டவே, அவரைச் சிறையில் அடைத்தார்கள். அவர்மீது சாற்றப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த மார்ட்டின் தாம் ஆயுதம் தாங்கிப் போரிட்டு யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ போவதில்லை என்றும், யாதொரு ஆயுதமும் தாங்காமல் படையின் முன்னணியில் செல்லத் தயார் என்றும் சவால் விட்டார். அச்சவாலை மார்ட்டினின் படைத் தலைவர்கள் ஏற்க முன்வந்த சமயத்தில், எதிர்த்துவந்த படை சண்டைக்கான திட்டத்தைக் கைவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இவ்வாறு, மார்ட்டின் ஆயுதமின்றி எதிரிகளின் படையைச் சந்திக்கப் போவதாகக் கூறியது நிறைவேறாமல் போயிற்று. ஆனால் அதிகாரிகள் மார்ட்டினுக்குப் படைப் பிரிவிலிருந்து பணிவிடுதலை கொடுத்தார்கள்.[4]
Remove ads
கிறித்துவின் சீடர்
மார்ட்டின் தம் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்று தீர்மானித்ததும் பிரான்சு நாட்டு தூர் (Tours) என்னும் நகருக்குச் சென்றார். உரோமைப் பேரரசில் அந்நகரத்தின் பெயர் "சேசரோடுனும்" (Caesarodunum) என்பதாகும். அங்கு புவாத்தியே நகர ஹிலரி என்னும் ஆயரின் சீடராக மார்ட்டின் சேர்ந்தார். ஹிலரி கிறித்தவ சமய உண்மைகளை விளக்கி உரைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார் என்னும் கிறித்தவ உண்மையை மறுத்த ஆரியப் பிரிவினரை (Arianism) அவர் எதிர்த்தார். ஆரியுசு[5] என்பவரின் கொள்கையைப் பின்பற்றிய ஆரியப் பிரிவினர் குறிப்பாக அரசவையில் செல்வாக்குக் கொண்டிருந்தனர்.
எனவே, புவாத்தியே நகரிலிருந்து ஹிலரி நாடுகடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, மார்ட்டின் இத்தாலி திரும்பினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய, சம காலத்தவரான சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவரின் கூற்றுப்படி, மார்ட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக் கொள்ளைக்காரன் ஒருவனை மனந்திருப்பினார்.
இல்லீரியா பகுதியிலிருந்து மார்ட்டின் மிலான் நகரம் வந்தபோது, அங்கு ஆட்சிசெய்த ஆரியப் பிரிவு ஆயர் அவுக்சேன்சியுஸ் மார்ட்டினை நகரிலிருந்து வெளியேற்றினார். எனவே, மார்ட்டின் அந்நகரை விட்டு அல்பேங்கா (Albenga) தீவுக்குப் போய் அங்கே தனிமையில் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்.
Remove ads
மார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல்
கி.பி. 361இல் ஆயர் ஹிலரி மீண்டும் தம் பணித்தளமான புவாத்தியே நகருக்குத் திரும்பினார். மார்ட்டின் உடனேயே ஹிலரியிடம் சென்று, பணிபுரியலானார். புவாத்தியே நகருக்கு அருகில் துறவற இல்லம் ஒன்றைத் தொடங்கினார். அது பெனடிக்ட் சபை இல்லமாக (Ligugé Abbey) வளர்ந்தது. அதுவே பிரான்சு (கால்) நாட்டில் நிறுவப்பட்ட முதல் துறவியர் இல்லம் ஆகும். அந்த இல்லத்திலிருந்து அதை அடுத்த நாட்டுப் பகுதிகளில் கிறித்தவம் பரவியது.
மார்ட்டின் மேற்கு பிரான்சு பகுதிகளில் பயணமாகச் சென்று கிறித்தவத்தைப் பரப்பினார். அவர் சென்ற இடங்களில் அவரைப் பற்றிய கதைகள் இன்றுவரை மக்கள் நடுவே கூறப்பட்டுவருகின்றன.[6]


தூர் நகரத்தில் மார்ட்டின் ஆற்றிய பணியைக் கண்டு மகிழ்ந்த மக்கள் அவர் தங்கள் ஆயராகப் பதவி ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு மார்ட்டின் கி.பி. 371ஆம் ஆண்டில் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில் அவர் கிறித்தவம் அல்லாத பேகனிய சமயம் சார்ந்த கோவில்களைத் தகர்த்தார். பேகனிய பழக்கவழக்கங்களை ஒழித்தார்.[7]
கி.பி. 372இல் மார்ட்டின் தூர் நகரத்துக்கு அருகே ஒரு துறவற இல்லத்தைத் தொடங்கினார். "பெரிய மடம்" என்ற பெயர் கொண்ட அந்த இல்லம் (இலத்தீனில் Majus Monasterium) பிரஞ்சு மொழியில் Marmoutier ஆயிற்று. அந்த இல்லத்திற்குச் சென்று மார்ட்டின் வாழ்ந்தார். அந்த மடம் லுவார் நதியின் மறுகரையில் தூர் நகருக்கு எதிர்ப்புறம் இருந்தது. அந்த இல்லத்திற்குப் பொறுப்பாக ஒரு மடாதிபதியும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அம்மடம் ஓரளவு தன்னாட்சி கொண்டதாக விளங்கியது.
தூர் நகரத்தின் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் மார்ட்டின் தம் மறைமாவட்டத்தில் பங்குகளை ஏற்படுத்தினார்.
Remove ads
மார்ட்டினின் இரக்க குணம்
மார்ட்டின் வாழ்ந்த காலத்தில் எசுப்பானியா பகுதியில் பிரிசில்லியன் என்பவரும் அவருடைய சீடர்களும் தப்பறைக் கொள்கையைப் போதித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.[8] தம் உயிருக்கு அஞ்சி அவர்கள் எசுப்பானியாவை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களை எதிர்த்த இத்தாசியுசு என்னும் எசுப்பானிய ஆயர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாக்னுஸ் மாக்சிமுஸ் என்னும் உரோமைப் பேரரசனின் முன் கொணர்ந்தனர்.
மார்ட்டின் பிரிசில்லியனின் கொள்கைகளை எதிர்த்தவர் தான் என்றாலும், ட்ரியர் நகரில் அமைந்திருந்த பேரரசன் அவைக்கு விரைந்து சென்று, பிரிசில்லியனையும் அவர்தம் சீடர்களையும் அரசவை தண்டிப்பதோ கொலைசெய்வதோ முறையல்ல என்று பிரிசில்லியனுக்கு ஆதரவாகப் பரிந்துபேசினார். அரசனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாலும், மார்ட்டின் நகரை விட்டுச் சென்ற உடனேயே பிரிசில்லியனையும் சீடர்களையும் கொன்றுபோட ஆணையிட்டான் (கி.பி. 385). தப்பறைக் கொள்கைக்காகக் கொல்லப்பட்ட முதல் கிறித்தவர்கள் இவர்களே.

.
இதைக் கேள்விப்பட்ட மார்ட்டின் துயரத்தில் ஆழ்ந்தார். கொலைத் தண்டனை அளிக்கப்படுவதற்குத் தூண்டுதலாக இருந்த இத்தாசியு என்னும் ஆயரோடு தொடர்புகொள்ள அவர் மறுத்தார். இறுதியில் மன்னனின் வற்புறுத்தலுக்குப் பணிந்துதான் அந்த ஆயரோடு தொடர்புகொண்டார்.
Remove ads
இறப்பு
மார்ட்டின் நடு பிரான்சு பகுதியில் காந்த் என்னும் இடத்தில் கி.பி. 397இல் இறந்தார். அவர் இறந்த இடம் அவருடைய பெயராலேயே இன்றும் அறியப்படுகிறது (பிரஞ்சு மொழியில் Candes-Saint-Martin).
மார்ட்டின் வாழ்க்கை பற்றிய புனைவுகள்
மார்ட்டினின் சமகாலத்தவரான சல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அந்நூலில் மார்ட்டின் புரிந்த பல புதுமைகள் கூறப்படுகின்றன.[9] அவற்றுள் சில:
- மார்ட்டின் தீய ஆவியாகிய சாத்தானை நேரில் சந்தித்து எதிர்த்து நின்றார்.
- தீய ஆவியை ஓட்டினார்.
- வாதமுற்றவருக்கு குணமளித்து, இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்தார்.
- ஒரு பேகனிய கோவிலிலிருந்து பரவிய தீயைத் திசைதிருப்பிவிட்டார்.
- பேகனிய புனித மரமாகக் கருதப்பட்ட பைன் மரத்தின் கீழ் நின்றபிறகும், அதை வெட்டியதும் அம்மரம் மார்ட்டினின் மேல் விழாமல் அப்பாற்போய் விழச் செய்தார்.
- மார்ட்டினின் ஆடையிலிருந்து பெறப்பட்ட நூல் நோயாளர் மேல் வைக்கப்பட்டதும் அவர்கள் குணமடைந்தார்கள்.
மேற்கூறிய புதுமைகள் பலவும் பொதுமக்கள் மார்ட்டின் மட்டில் கொண்டிருந்த மரியாதையை வெளிப்படுத்துகின்ற புனைவுகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Remove ads
புனித மார்ட்டினுக்கு அளிக்கப்பட்ட வணக்கம்
மார்ட்டின் இறந்த பிறகு பொதுமக்கள் அவருடைய பக்தியையும் ஆன்மிக ஆழத்தையும் பிறரன்புப் பணியையும் நினைவுகூர்ந்து அவருக்கு வணக்கம் செலுத்தலாயினர். அவ்வணக்கம் குறிப்பாக மத்திய காலத்தில் பிரான்சு நாட்டின் வடமேற்குப் பகுதியில் விரைந்து பரவியது. மார்ட்டினின் பெயர் கொண்ட பல இடங்கள் அங்கு உள்ளன.[10]"எங்கெல்லாம் மக்கள் கிறித்துவை அறிந்துள்ளார்களோ அங்கெல்லாம் மார்ட்டினையும் அறிந்துள்ளார்கள்" என்று 6ஆம் நூற்றாண்டில் மார்ட்டினின் வரலாற்றைக் கவிதையாக வடித்த ஆயர் ஃபோர்த்துனாத்துஸ் என்பவர் கூறுகிறார்.[11]

மார்ட்டின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. ஆனால், மார்ட்டினைப் புனிதராகக் கருதி வணக்கம் செலுத்திய திருப்பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் தூர் நகரில் பெரிய அளவில் ஒரு கோவில் கட்டி அங்கு மார்ட்டினின் உடலை அடக்கம் செய்ய 461இல் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்ற பெர்ப்பேத்துவுஸ் என்பவர் முடிவுசெய்தார். கோவிலின் நீளம் 38 மீட்டர், அகலம் 18 மீட்டர் என்று அமைந்தது. 120 பெரிய தூண்கள் கோவில் கட்டடத்தைத் தாங்கின.[12]
மார்ட்டினின் உடல் காந்த் நகரிலிருந்து தூர் நகர் கொண்டுவரப்பட்டு, பெரிய கோவிலின் நடுப்பீடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.[13]
மார்ட்டின் தாம் அணிந்திருந்த மேலாடையைத் துண்டித்து இரவலர் ஒருவருக்கு அளித்ததும், அதன் பிறகு இயேசுவே அந்த ஆடையை அணிந்தவராக மார்ட்டினுக்குக் காட்சியில் தோன்றியதும் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. நடுக்காலத்தில், மார்ட்டினின் அந்த மேலாடை ஒரு மீபொருளாக வைத்துக் காக்கப்பட்டது. பிராங்கு இன அரசர்களின் மீபொருள் தொகுப்பில் மார்ட்டினின் மேலாடை மிக்க மரியாதையுடன் காக்கப்பட்டது.
சில சமயங்களில் பிராங்கு இன அரசர்கள் தாம் போருக்குச் சென்றபோது மார்ட்டினின் அந்த மேலாடையைத் தங்களோடு எடுத்துச் சென்றார்களாம். அந்த மேலாடையைத் தொட்டு உறுதிப்பிரமாணம் செய்வதும் வழக்கமாக இருந்தது.
மார்ட்டினின் மேலாடை அரச மீபொருள் தொகுப்பில் கி.பி. 679இலிருந்து காக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.[14]
மார்ட்டினின் மேலாடையைக் காப்பதற்காக நியமிக்கப்பட்ட குரு "மேலாடை காப்பாளர்" என்று பொருள்படுகின்ற விதத்தில் cappellanu (இலத்தீனில் cappa, cappella என்றால் மேலாடை என்று பொருள்) அழைக்கப்பட்டார். மார்ட்டினின் மேலாடை போன்ற பிற மீபொருள் காப்பிடம் chapel என்னும் பெயர் பெற்றது. மார்ட்டினின் மேலாடையைக் காத்ததோடு, இராணுவத்தினருக்கு ஆன்ம பணிபுரிகின்ற குருக்கள் cappellani என்று அழைக்கப்பட்டனர். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கென்று பணிசெய்ய நியமிக்கப்பட்ட குருக்கள் "தனிப்பணிக் குருக்கள்" (ஆங்கிலத்தில் chaplains என்று பெயர்பெறலாயினர்.[15][16] [17]
Remove ads
புனித மார்ட்டினுக்கும் ஆட்சிமுறை மற்றும் இராணுவத்திற்கும் தொடர்பு
புனித மார்ட்டின் தம் இளமைப் பருவத்தில் உரோமை இராணுவத்தில் உறுப்பினராகி ஒரு போர்வீரராகச் செயல்பட்டார். மேலும் அவரது மனமாற்றத்திற்குப் பின் அவருடைய மறைப்பணி பெரும்பாலும் பிரான்சு நாட்டில் நிகழ்ந்தது. இந்த வரலாற்றுப் பின்னணியில் அவருடைய பெயர் இராணுவத்தாரோடும், ஆட்சியாளர்களோடும் குறிப்பாக பிரான்சு நாட்டு ஆட்சியாளர்களோடும் தொடர்புடையதாயிற்று.
- பிரான்சு நாட்டின் அரச குடும்பங்கள் புனித மார்ட்டினைத் தங்கள் பாதுகாவலாகத் தெரிந்துகொண்டன. சாலிய பிராங்கு இனத்தைச் சார்ந்த முதலாம் குளோவிஸ் (Clovis I) (கி.பி. சுமார் 466-511) என்னும் அரசர் க்ளோட்டில்டா (Clotilda) என்னும் கிறித்தவ அரசியை மணந்திருந்தார். அவர் அலமான்னி இனத்தாரை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, போரில் வெற்றி கிடைத்தால் தான் திருமுழுக்குப் பெற்று கிறித்தவ மதத்தைத் தழுவ ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார். போரில் வெற்றிபெற்ற அரசர் அந்த வெற்றி புனித மார்ட்டினின் வேண்டுதலால்தான் தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். அதுபோலவே வேறுபல போர்களிலும் அவர் வெற்றிபெற்றார். தொடர்ந்து குளோவிஸ் தனது தலைநகரை பாரிசு நகருக்கு மாற்றினார். அவர் "பிரான்சு நாட்டின் நிறுவுநர்" என்று கருதப்படுகிறார்.
- இவ்வாறு மெரோவிஞ்சிய அரசர்கள் (Merovingian monarchy) ஆட்சிக்காலத்தில் புனித மார்ட்டினுக்கு நாட்டில் மிகுந்த வணக்கம் செலுத்தப்பட்டது. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புனித மார்ட்டின் கல்லறையைப் பொன், மாணிக்கக் கற்கள் போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்க மன்னன் முதலாம் டாகொபெர்ட் (Dagobert I) ஏற்பாடு செய்தார்.
- தூர் நகரின் ஆயரான கிரகோரி (கி.பி.538-594) புனித மார்ட்டினின் வரலாற்றை எழுதி வெளியிட்டு, அவர் புரிந்த புதுமைகளையும் விவரித்தார்.
- மெரோவிஞ்சிய அரசர்களுக்குப் பிறகு வந்த கரோலிஞ்சிய அரசர்களும் (Carolingian dynasty) புனித மார்ட்டின் பக்தியைத் தொடர்ந்தார்கள்.
- தூர் நகரத்தில் மார்ட்டின் தொடங்கிய துறவற இல்லம் நடுக்கால பிரான்சு நாட்டில் மிக்க செல்வாக்கோடு விளங்கியது. அந்த இல்லத்திற்குத் தலைவராக அல்க்குயின் என்பவரை மன்னன் சார்லமேன் நியமித்தார். அல்க்குயின் இங்கிலாந்தைச் சார்ந்த தலைசிறந்த அறிஞரும் கல்வி வல்லுநரும் ஆவார். துறவற இல்லத் தலைவர் என்ற முறையில் அவர் தூர் நகரிலிருந்து அரச அவை இருந்த ட்ரீயர் நகருக்குச் செல்லவும், தமது நிலங்கள் இருந்த இடங்களில் தங்கவும் உரிமை பெற்றிருந்தார். ட்ரீயர் நகரில் அல்க்குயினுக்கு ஓர் "எழுத்தகம்" (scriptorium) இருந்தது. விவிலியம், பண்டைய இலக்கியங்கள் போன்ற நூல்களைக் கையெழுத்துப் படிகளாக எழுதுவதற்கு அந்த எழுத்தகம் பயன்பட்டது. அங்குதான் "காரொலைன் சிற்றெழுத்துமுறை" என்னும் எழுத்துப் பாணி உருவானது. அம்முறையில் எழுதப்பட்ட கையெழுத்துப் படிகள் வாசிப்பதற்கு எளிதாக இருந்தன.
புனித மார்ட்டின் துறவற இல்லம்
- புனித மார்ட்டின் துறவற இல்லம் இயற்கை விபத்துகளாலும் போர்களின் விளைவாலும் பலமுறை சேதமடைந்தது. புனித மார்ட்டின் மீது கொண்ட பக்தியால் மக்கள் கூட்டம் அந்த இல்லத்திற்குச் சென்றது. பெருகிவந்த திருப்பயணியர் கூட்டத்திற்கு வசதியாக அத்துறவற இல்லம் 1014இல் புதுப்பிக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டது. புனித மார்ட்டின் திருத்தலத்தை நாடி எண்ணிறந்த திருப்பயணிகள் வரத் தொடங்கினர். ரொமானியப் பாணியில் கட்டப்பட்டிருந்த உட்பக்கக் கூரை கோத்திக் பாணியில் மாற்றப்பட்டது. 1096இல் திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவர் அத்திருத்தலச் சிற்றாலயத்தை அர்ச்சித்தார்.
- 1453இல் புனித மார்ட்டினின் மீபொருள்கள் மிக அழகாக வடித்தெடுக்கப்பட்ட ஒரு மீபொருள் கலத்திற்கு மாற்றப்பட்டது. அந்த மீபொருள் கலனை பிரான்சு அரசரான 7ஆம் சார்லசு என்பவர் செய்வித்து நன்கொடையாக அளித்தார்.
- கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்டாண்டு ஹூகெனாட் குழுவினருக்கும் நடந்த மோதலில் 1562ஆம் ஆண்டு புனித மார்ட்டின் கோவில் சூறையாடப்பட்டது. பின்னர் அந்த துறவற இல்லமும் கோவிலும் மீண்டும் செயல்படத் தொடங்கின. ஆனால் பிரஞ்சுப் புரட்சியின்போது அவ்விடம் தாக்குதலுக்கு உள்ளானது. புரட்சியாளர்கள் அந்த இல்லத்தை ஒரு தொழுவமாக மாற்றினார்கள்; அதன்பின் அதை அடியோடு அழித்துவிட்டனர். அத்துறவற இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்பலாகாது என்பதற்காக அது இருந்த இடத்தில் இரு சாலைகளை ஏற்படுத்தினர்.
- 1860ஆம் ஆண்டு நடத்திய அகழ்வாய்வின்போது புனித மார்ட்டின் கோவில் மற்றும் துறவற இல்லத்தின் சிதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புனித மார்ட்டினின் கல்லறையும் 1860, திசம்பர் 14ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து புனித மார்ட்டின் பக்தி மீண்டும் வளரலாயிற்று.
புனித மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோவில்
பழைய கோவில் இருந்த இடத்தின் ஒரு பகுதியில் புதிய கோவில் கட்டட வேலை 1886இல் தொடங்கப்பட்டது. பெரிய அளவில் கட்டப்பட்ட அப்புதிய கோவில் 1925, சூலை 4ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது.[18]
பிராங்கோ-புருசிய போர்
1870-1871இல் பிரான்சுக்கும் செர்மனிக்கும் நடந்த போரின்போது புனித மார்ட்டின் முக்கியத்துவம் பெற்றார். பிரஞ்சு அரசனான மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றார். பிரஞ்சுப் பேரரசும் கவிழ்ந்தது. அதன்பின் 1870 செப்டம்பரில் தற்காலிகமாக பிரான்சின் மூன்றாம் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது. பாரிசு நகரிலிருந்து தலைநகரம் தூர் நகருக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு புனித மார்ட்டினின் நகரான தூர் பிரான்சு நாட்டின் தலைநகரமாக 1870 செப்டம்பரிலிருந்து டிசம்பர் வரை நீடித்தது.
செருமனியின் தாக்குதலுக்கு ஆளான பிரான்சுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் புனித மார்ட்டினிடம் மன்றாட வேண்டும் என்ற கருத்து பிரான்சில் பரவியது. மூன்றாம் நெப்போலியன் போரில் தோல்வியுற்றதற்குக் காரணம் அரசனும் நாடும் கடவுளின் வழியினின்று பிறழ்ந்ததே என்றும், திருச்சபையை எதிர்த்தது தான் அதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. புனித மார்ட்டின் கோவிலின் உடைந்த கோபுரங்கள் பிரான்சு நாட்டின் இறைப்பற்றின்மைக்கு அடையாளமாக விளக்கப்பட்டது.[19]
பிராங்கோ-புருசியப் போரின்போது தூர் நகரம் பிரான்சின் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புனித மார்ட்டின் பக்தி புத்துயிர் பெற்றது. பல திருப்பயணிகள் தூர் நகருக்கு வந்து புனித மார்ட்டினுக்கு அவருடைய கல்லறையில் வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.
புனித மார்ட்டின் பக்தி வளர்ந்த அதே நேரத்தில் பிரான்சு நாட்டில் இயேசுவின் திரு இருதய பக்தியும் விரிவடைந்தது. நாட்டுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் இந்தப் பக்தி முயற்சிகள் வளரவேண்டும் என்னும் கருத்து பரவியது.[20] பாட்டே நகரில் நடந்த சண்டையில் பிரஞ்சு இராணுவம் வெற்றிகண்டது. அது கடவுளின் தலையீட்டால் நிகழ்ந்தது என்று மக்கள் நம்பினர். 1870களில் எழுந்த ஒரு பாடலில் புனித மார்ட்டினின் மேற்போர்வை "பிரான்சு நாட்டின் முதல் கொடி" என்று குறிக்கப்பட்டது.[19]
இராணுவத்தினரின் பாதுகாவலர் புனித மார்ட்டின்
19ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டு மக்கள் புனித மார்ட்டீனை "ஆண்களுக்கு முன்மாதிரியான புனிதராக" பார்த்தார்கள். அவர் வீரம் மிகுந்த போர்வீரர், ஏழைகளுக்கு உதவும் கடமை தனக்கு உண்டு என்று உணர்ந்தவர், தன் சொத்துக்களைப் பிறரோடு பகிர்ந்துகொண்டவர், இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தன் கடமையை ஆற்றியவர், நாட்டு அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்தவர் என்று சிறப்பிக்கப்பட்டதால், அவர் "ஆண்களுக்கு" உரிய புனிதராக முன்வைக்கப்பட்டார்.[21]
இவ்வாறு சிறப்பிக்கப்பட்ட புனித மார்ட்டின், இராணுவத்தை விட்டு விலகி, தாம் இனிமேல் போரிடுவதில்லை என்று துணிச்சலோடு செயல்பட்டதை மக்கள் மறந்துவிட்டார்கள்.
முதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டினுக்கு வணக்கம்
முதலாம் உலகப்போரின் போது புனித மார்ட்டின் பக்தி சிறப்பாகத் துலங்கியது. திருச்சபைக்கு எதிரான இயக்கங்கள் சிறிது தணிந்தன. அதைத்தொடர்ந்து, பிரஞ்சு இராணுவத்தில் பல குருக்கள் போர்வீரர்களுக்கு ஆன்ம பணி ஆற்றினர். 5000க்கும் மேலான குருக்கள் போரில் இறந்தனர். 1916இல் ஏற்பாடான திருப்பயணத்தின்போது பிரான்சு நாடு முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் புனித மார்ட்டின் கல்லறையில் வேண்டுவதற்காக தூர் நகர் வந்தனர். பிரான்சு முழுவதிலும் புனித மார்ட்டினை நோக்கி வேண்டுதல்கள் எழுப்பப்பட்டன. 1918ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று, போர் இடை ஓய்வு நிகழ்ந்தது. இதை மக்கள் புனித மார்ட்டின் பிரான்சு நாட்டுக்குச் செய்த உதவியாக மக்கள் புரிந்துகொண்டார்கள்.[22]
புனித மார்ட்டினும் மார்ட்டின் லூதரும்
திருச்சபையில் சீர்திருத்தம் ஏற்படவேண்டும் என்று கூறிய மார்ட்டின் லூதர் (1483–1546) 1483ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள், புனித மார்ட்டின் திருவிழாவன்று திருமுழுக்கு பெற்றதால் புனித மார்ட்டின் பெயரையே அவருக்கு அளித்தார்கள். லூதரன் சபைக் கோவில்கள் பல புனித மார்ட்டின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
அமெரிக்க இராணுவமும் புனித மார்ட்டினும்
ஐ.அ.நாடுகளின் இராணுவத் துறையில் புனித மார்ட்டின் பெயரால் ஒரு விருது உள்ளது.[23]
குறிப்புகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads