மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்
சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Maasthi Venkatesa Iyengar 6 சூன் 1891 – 6 சூன் 1986) என்பவர் கன்னடத்தின் புகழ்பெற்ற புதின, சிறுகதை எழுத்தாளராவார். இவர் இந்தியாவின் இலக்கியத்துக்கான உயர் விருதான ஞானபீட விருது[1] பெற்ற நான்காவது கன்னட எழுத்தாளராவார்.[2] இவர் மாஸ்த்தி கன்னடத ஆஸ்தி (மாஸ்த்தி கன்னடத்தின் சொத்து) என்று போற்றப்படுபவர். மைசூர் மன்னர் நான்காம் கிருட்டிணராச உடையார் இவருக்கு ‘ராஜசேவசக்தா’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.
Remove ads
வாழ்க்கை
மாஸ்த்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் ஹொசஹல்லி என்ற இடத்தில் தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் 1891இல் பிறந்தார். இளமைப் பருவத்தை மாஸ்தி என்ற கிராமத்தில் கழித்தார். 1914இல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3]
பிறகு இந்தியன் குடிமைப் பணி தேர்வை முடித்து, மதிப்புமிக்க பல பதவிகளில் கர்நாடகத்தின் பல இடங்களில் பணியாற்றினார். 26 ஆண்டுகால பணிக்குப் பின் மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வு பெற்றார். 1943இல் தனது பணியில் இருந்து விலகனார். இவருக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்ததால் சிறிது காலம் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். பிறகு கன்னட மொழியில் ஸ்ரீநிவாசா என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார்.
Remove ads
பணிகள்
இவர் எழுதிய முதல் நூல் 1910இல் வெளியான ‘ரங்கன மதுவே’ கடைசி நூல் மாதுகரே ராமண்ணா 1985இல் வெளிவந்தது. இவரது ‘கெலவு சன்ன கதெகளு’ (சில சிறுகதைகள்) என்ற சிறுகதைத் தொகுப்பு, நவீன கன்னட இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க படைப்பாகும். இவர் நிறைய கவிதைகளையும்,பல நாடகங்களையும் எழுதியுள்ளார். புகழ்பெற்ற வேற்றுமொழி நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். ‘ஜீவனா’ என்ற மாத இதழின் ஆசிரியராக 1944 முதல் 1965 வரை பணியாற்றினார். சிறந்த எழுத்தாளரான இவர் கன்னடத்தில் 123 நூல்களையும்,[4] ஆங்கிலத்தில் 17 நூல்களையும் தம்வாழ்நாளில் எழுதியுள்ளார். 1983இல் இவரது சிக்கவீர ராஜேந்திரா என்கிற புதினத்திற்காக ஞானபீட விருது பெற்றார். இப்புதினம் குடகின் கடைசி மன்னரின் வரலாறை மையமாக் கொண்டது. ‘சென்னபசவ நாயக்கா’ என்னும் புதினம் இவரது இன்னொரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம் ஆகும்.
தமிழராகப் பிறந்து கன்னட இலக்கியத்தில் சாதனை படைத்த மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் தனது 95 வயதில் 1986இல் மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் விதமாக, சிறந்த கன்னட எழுத்தாளர்களுக்கு ‘மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் விருது’ 1993 முதல் ஆண்டுதோறும் கர்னாடக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.[5] இவர் பெங்களூர் பசவன் குடியில் வாழ்ந்த வீட்டை கர்நாடக அரசு அருங்காட்சியமாக பராமரிக்கப்படுகிறது.[6] கோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தில் உள்ள இவரது வீடு நூலகமாக மாற்றப்பட்டு, கர்நாடக அரசால் பராமரிக்கப்படுகிறது.[7] அங்கு ‘மாஸ்தி உறைவிடப் பள்ளி’ என்ற பள்ளியை கர்நாடக அரசு 2006-ல் தொடங்கியது.[8]
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads