பலா

From Wikipedia, the free encyclopedia

பலா
Remove ads

பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம் ஆகும்[1] . மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின்படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப் பயிராகவோ அல்லது வீட்டுத் தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.

விரைவான உண்மைகள் பலா, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

வரலாறு

பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.

தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும். இந்தியாவில், 2000ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சுமார் 14,286 ஏக்கர் பரப்பளவில் (சுமார் 1,00,000 மரங்கள்) பலா வளர்க்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும், வெற்றிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் நிழலுக்காகவும் பலா வளர்க்கப்படுகிறது. இலங்கையில், முக்கியமாக மரத்திற்காகவும், தாய்லாந்தில் பழத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது.

Remove ads

பயன்பாடு

விரைவான உண்மைகள் உணவாற்றல், கார்போவைதரேட்டு ...
Thumb
பலா பழத்தின் சுளைகள்

ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய்,மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.

ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

பலாப்பழத்தின் விதைகள் கூட ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் கூட சிலரால் சமைத்து உண்ணப்படுகின்றன.

உணவாக மட்டுமின்றி, பலாப்பழத்தின் கடினமான தோல், பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும், இது புகையிலையை பதனிட பயன்படுகிறது.

Remove ads

பலா வளர்ப்பு

இரகங்கள்

தென்னிந்தியாவில் இருவகை பலாக்கள் வளர்கின்றன.

    • 1. கூழச்சக்கா: சிறிய நாறுடைய மிக இனிப்பான சுளைகள்
    • 2. கூழப்பழம்: பெரிய, சுவையான விற்பனைக்கேற்ற சுளைகள்.

இவை அல்லாமல் இலங்கையின் தேன்பலா எல்லோராலும் மிக சிறந்தது என பாராட்டப்படுவதாகும். மேற்கூறிய பலா வகைகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சிலோன்' அல்லது 'சிங்கப்பூர்' பலா மிக விரைவில் பழம் தரக்கூடியதாகையால், 1949 இல் மிக பிரபலமடைந்தது. இந்தியாவில், சஹரன்பூர், கள்ளார் ஆகிய இடங்களிலுள்ள ஆராய்ச்சி நிலையங்கள் பல உயரிய பலா இரகங்களையும், பெயரிடப்படாத ஒரு கலப்பின இரகத்தையும் வெளியிட்டன.

  • இலங்கையில் கூழன்பழம், வருக்கன் பழம் என இவை வகைப்படுத்தப்படும். கூழன் சிறிய நார்த்தன்மையான பழம். வருகன் பெரிய சுவைமிகுந்த பழம்.

மண் மற்றும் தட்பவெப்பம்

பலாமரம் ஈரப்பதம் அதிகமுள்ள பூமத்தியரேகைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. உறைபனியைத் தாங்கும் சக்தி பலாமரத்திற்கு இல்லை. மழை குறைவாக இருப்பின், நீர்ப்பாசனம் செய்ய வேண்டியது அவசியமாகும். இந்தியாவில், பலா மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையிலான இடங்களில் கூட காணப்படுகின்றன. ஆனால், 4000 மீட்டர் உயரத்திற்கு மேலான இடங்களிலிருந்து கிடைக்கும் பலாப்பழங்கள் குறைந்த தரமுள்ளவையாக இருக்கும்.

நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் பலா நன்றாக வளரும்; சுண்ணாம்பு பாங்கான நிலத்தில் சற்று மெதுவாகத்தான் வளரும். வேர்ப்பகுதியில் நீர் தேங்குவது பலா மரத்திற்கு உகந்ததல்ல; இதனால் மரங்கள் பழம் தராமலோ வாடியோ போய்விடும்.

பலாக் கன்றுகள்

பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரிலோ, 10% ஜிப்பரெலிக் அமில கரைசலிலோ ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும். பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்கு வளர்ந்த பலா மரம் 21 மீ உயரம் வரையும், தடித்த தண்டும் கிளைகளும் கொண்டதாயும் இருக்கும். பலா இலைகள் பசுமையான நீள்கோள வடிவில் இருக்கும். எல்லா பாகங்களுமே பிசுபிசுவென்ற வெண்ணிறப் பால் கொண்டிருக்கும். பொதுவாக, பலாச்செடிகள் 3 – 7 வருடம் முதல் காய்க்கத் தொடங்கும்.

பலா பூப்பு, காய்ப்பு, அறுவடை

Thumb
இலை, பிஞ்சு

பலாமரம் ஆண் பூ, பெண் பூ என இருவகை பூக்கள் கொண்டது. ஆண் பூக்கள் கொத்தாக புதிய கிளைகளிலும், பெண் பூக்கள் கொத்தாக மரத்தண்டிலும், தடிமனான கிளைகளிலும் காணப்படுகின்றன. பூ பூத்த 3 – 8 மாதங்களில் பலாக்காய்கள் முற்றுகின்றன.

ஆசியாவில் பலாப்பழங்கள் முற்றும் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 – 150 பழங்கள் வரை கிடைக்கும். பழங்கள் காம்பை அறுத்து மரத்திலிருந்து பறிக்கப்படுகின்றன. வெகுவாக பால் சிந்தினால் அது நன்கு முற்றாத பலாக்காய் என அறியலாம். நன்கு முற்றிய பலாக்காய்கள் சுமார் 40 கிலோ வரை எடை உடையவயாய் இருக்கும். பழத்தின் வெளிப்புறம் தடிமனான முட்களுடையதாயும், பச்சை நிறத்திலும் இருக்கும். உட்புறம் மஞ்சள் நிற சுளைகள், வெளிர் மர நிறத்திலான கொட்டைகளுடன் இருக்கும்.

சில விவசாயிகள் பழத்தின் நுனியை சற்று பிளந்து விடுவதன் மூலம் விரைவாக பழுக்க வைக்கின்றனர்.

Remove ads

சிங்களவர் பயன்பாட்டில்

Thumb
கறி சமைக்க தயாரான நிலை
Thumb
வெட்டப்பட்ட பலா காயின் சுளைகள்

இலங்கையின் தமிழர் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பலாவை ஒரு பழமாகவே பார்க்கப்படுகிறது. சிறப்பாக யாழ்ப்பாணத்தில் பலாச் சுளையுடன் பிட்டு சாப்பிடும் வழக்கமே உள்ளது. ஆனால் இலங்கையின் மத்திய மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில் பலாவை பழமாக மட்டும் சாப்பிடுவதில்லை. அவற்றை கறியாக சமைத்து சாப்பிடும் வழக்கம் உள்ளது. குறிப்பாக கொழும்பில் உள்ள சிங்களவர் உணவகங்களில் பலாக்காய் கறி மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். சிங்களவர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாகவே பலாக்காய் கறி பார்க்கப்படுகிறது. இதனை சிங்களவரின் பண்பாட்டுடன் தொடர்புடைய ஒரு உணவாகக் கூறுவோரும் உளர். இந்த பலாக்காயை நான்கு பருவங்களாக சிங்களத்தில் கூறுவர்.

காய் (இளம் பருவம்)

பலா மிகவும் இளம் பருவமான காலத்தில், அதாவது 6 முதல் 8 அங்குளம் வரையான வளர்ச்சியின் போது, இதனை சிங்களத்தில் "பொலஸ்" அல்லது "பொலஸ் கெடி" (காய்) என்றழைப்பர். தமிழில் பலாபிஞ்சு எனலாம். இந்த "பொலஸ்" எனும் பருவத்தில் பலாப்பிஞ்சுவின் உள்ளே சுளைகள் எதுவும் இருக்காது. அதனை பெரும் துண்டங்களாக வெட்டி சமைப்பர். இந்த கறி இறைச்சி கறிக்கு இணையான சுவையாக இருக்கும். இதனை ஒட்டுமொத்தமாக அனைத்து சிங்களவர்களும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு வகையாகும். சாதாரண உணவகங்களில் இருந்து, நட்சத்திர சொகுசகங்கள் வரை இலங்கையில் இந்த "பொலஸ்" கறி மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இதன் சுவை காரணமாக கொழும்பு போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் பலாபிஞ்சு கறி சமைக்கப் பழக்கமாகியுள்ளதை காணலாம். குறிப்பாக "மாத்தறா பத்கடை" களில் இந்த கறி இருக்கும்.

கொத்து (நடுப்பருவம்)

பலா காய் ஓரளவான வளர்ச்சியின் போது, அதாவது உள்ளே சுளைகள் உருவாகுவதற்கான ஆயத்த வளர்ச்சி காலத்தின் போது அதனைப் பறித்து, வெளித்தோலை சீவி அகற்றிவிட்டு, கத்தியால் சிறுதுகல்களாக கொத்துவர். அதனாலேயே சிங்களத்திலும் இதன் பெயர் "கொத்து" அல்லது "கொத்து கெடி" (காய்) எனப்படுகின்றது. இதனை கறியாக சமைத்தாலும், சுவை வேறுபட்டதாக இருக்கும். அநேகமாக இது "சுண்டல்" வகையிலான ஒரு உணவாகவே இருக்கும்.

முற்றிய பருவம்

பலா பழுப்பதற்கு முன்னைய நிலையை, முற்றியப் பருவம் என்கின்றனர். பலா காய்களை கடைகளில் வாங்கும் பொது அது சரியாக முற்றியுள்ளதா என அறிய விரல்களால் சுண்டிப்பார்த்து அறியும் வழக்கமும் தென்னிலங்கை சமுகத்தினரிடம் காணப்படுகின்றது. சிலக் கடைகளில் சுழைகளை மட்டும் தனியாக எடுத்து விற்பனை செய்வதனையும் காணலாம். இந்த முற்றியப் பருவத்தில் சமைக்கும் கறியையே "பலாக்காய் கறி" என்பர். இதனை வெவ்வேறு விதமாக சமைப்பர். இந்த முற்றிய நிலை பலாக்காய் கறியின் சுவைக்கு இணையாக குறிப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் தேங்காய் பால்விட்டு வைக்கும் உருளைக்கிழங்கு கறிக்கு நிகரானதாக இருக்கும். இந்த பருவத்தில் கறியாக அல்லாமல் பலா சுளைகளை அவித்து முழுநேர உணவாக உட்கொள்வோரும் உளர்.

இலங்கை சிங்களவர் நடுவில் நான்கு காய்க்கும் பலா மரம் நின்றால், பஞ்சம் அற்ற வீடு எனும் சொல்வழக்கும் உள்ளது. அதாவது எத்தகை வறுமை நிலை தோன்றினாலும் பலா காயை அவித்து சாப்பிடலாம் எனும் பொருளே அதுவாகும்.

நான்காவது பருவம்

பலா காய் பழுத்தப் பருவமாகும். இந்த நான்காவது பருவமான பலா பழத்தையே சமைக்காமல் உண்ணப்படுகின்றது.

இவற்றைத் தவிர பலா சுளைகளை பல்வேறு இனிப்பு சுவைப்பொருட்களாகவும் பயன்படுகின்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வில் பனை எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே முக்கியத்துவம் சிங்களவர் வாழ்வில் "பலா" முக்கியத்துவம் பெறுகிறது.[சான்று தேவை]

Remove ads

இலங்கை வரலாற்றில் பலா

இலங்கை வரலாற்றில் 1977ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிமாவோ பண்டார நாயக்கா ஆட்சியின் போது, இலங்கையில் வரலாறு காணாத பஞ்சம் தோன்றியது. அக்காலங்களில் பெரும்பான்மையான சிங்களவர்களின் மூன்று நேர உணவாகவும் இந்த பலா காய் இருந்ததான குறிப்புகளும் செய்திகளும் நிறையவே உள்ளன.[சான்று தேவை] இது தொடர்பான பல நூல்கள், கொழும்பு விக்டோரியா பூங்காவின் பின்புறம் உள்ள நூலகத்தில் உள்ளன.

Thumb
மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பலாப்பழங்கள்
Remove ads

பலா பலகை

இலங்கை வடக்கு கிழக்கில் மிகவும் தரமானதும் நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்றதுமாக முதிரை, பாலை, கருங்காலி போன்ற மரப் பலகைகளையே தெரிவுசெய்வர். அதேவேளை இலங்கையின் மத்திய, மேற்கு, தெற்கு பகுதியினர் தரமான பலகையாக பலா பலகையையே தெரிவு செய்வர். மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கும் அழகானவையாக பலா பலகைகள் இருக்கும். மிக நீண்ட காலப் பயன்பாட்டிற்கு ஏற்ற மிகவும் உறுதிவாய்ந்த பலகை, பலா பலகைகளாகும். இலங்கையில் விலை அதிகமான பலகையும் பலாபலகை ஆகும்.

Remove ads

வேறு நாடுகளில் பலா

பலா காயை கறியாக சமைத்து உண்ணும் வழக்கம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாட்டவர்களிடமும் காணப்படுகின்றது. தாய்லாந்து மற்றும் பிலிப்பியன் போன்ற நாட்டவர்கள் பலா சுளைகளைக் கொண்டு பல்வேறு சுவை உணவுகளை தயார்செய்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இலக்கியத்தில் பலா

Thumb
வேர்ப்பலா,வேரோடு பலாக்கனி

பலா அடிமலரல் எனும் தனித்துவ இயல்புடையது. இதன் காரணமாக மரத்தின் பிரதான தண்டிலும் வேரிலும் பூத்தல் காய்த்தல் நிகழும். இதை தன்வயமாக்கி தமிழ் கவிஞர்கள் பல பாடல்களைப் படைத்துள்ளனர்.

        "கோரிகையற்றுக் கிடக்குதண்ணே
        இந்த வேரில் பழுத்த பலா"
                                                  -- பாரதிதாசன்

        "வேரோடு பலாக்கனி
        பழுத்துத் தொங்கும்
        வெள்ளாடு அதன் மீது
        முதுகு தேய்க்கும்"
                                                --காசி ஆனந்தன்

விடுகதைகள்

  • பலாக்காய்

        உச்சாணிக் கொம்பில்
        உரல் கட்டித் தொங்குது

  • பலாப்பழம்

        முள்ளுக் கோட்டைக்குள்
        மோகினி உறங்கு கின்றாள்

        தாய் சடைச்சி
        அப்பன் சொறியன்
        சேய் சக்கரைக்கட்டி

        முள்ளு முள்ளுக்குள்ளே
        முந்திரித் தோப்புக் குள்ளே
        வைக்கோல் போருக்குள்ளே
        கண்டெடுத்தேன் வைரமணி

துணை நூல்: சிந்திக்கத் தூண்டும் 1008 விடுகதைகள், ஏ. சண்பகவள்ளி, பி.எ., டி.எ1,ஸ். புத்தக மாளிகை, சென்னை-33
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads