தென்னிந்தியா
தெற்கத்திய இந்திய மாநிலங்களின் குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென்னிந்தியா (South India) அல்லது தென் இந்தியா என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19.31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமியை உள்ளடக்கி, கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் அரபிக் கடல் மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நடுவில் பீடபூமியை நடுப்பகுதியாக கொண்டுள்ளது.[2][3] கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி மற்றும் சிறுவாணி ஆறுகள் தலைமை நீர் அடையாளங்களாகும்.[4] சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோயம்புத்தூர், கொச்சி,திருவனந்தபுரம்,திருச்சிராப்பள்ளி, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் மற்றும் மதுரை மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும்.
தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியனவற்றையே பேசுகின்றனர்.[5] தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட தலைமை வம்சாவளிகள் ஆகும்.[6][7]
இந்திய சுதந்திரத்துக்கு பிறகு பல ஏற்ற இறக்கங்கள் பட்ட பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தன. கடந்த முப்பதாண்டுகளாக, நாட்டு சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தென் இந்திய மாநிலங்களில் சில முன்னேற்றம் கண்ட அதே வேளை, வறுமை நாட்டின் ஏனைய பகுதிகளை போல சிக்கலாக இருக்கிறது.[8] தென் மாநிலங்களில் பொருளாதாரம் வட மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்றுவிட்டது. கல்வியறிவு விகிதம் தென் மாநிலங்களில் சுமார் 80% ஆக உள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் விட அதிகமானதாகும்.[9][10] தென்னிந்தியாவின் குழந்தை பிறப்பு வீதம் 1.9 ஆகும். அனைத்து இந்திய பகுதிகளில் இதுவே குறைவானதாகும்.
Remove ads
தென்னிந்தியாவின் முதல் தர பத்து மிகப்பெரிய நகரங்கள்
தென்னிந்தியாவில் பல தொழில் முதலீடுகளை உள்ள நகரங்கள் பல உள்ளன. மேலும் தென்னிந்தியாவின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வகையில் கீழ்கண்ட முதல் பத்து நகரங்கள் தென்னிந்திய பொருளாதாரத்தில் பெரும் பங்காக உள்ளது.
போன்ற நகரங்கள் தென்னிந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய மாநகரங்கள் ஆகும். இதன் தர வரிசையே தென்னிந்திய பெருநகரங்கள் மற்றும் தென்னிந்திய வரிசைப்படட்டியல் நகரங்கள் ஆகும்.
Remove ads
சொற்பிறப்பு

தீபகற்ப இந்தியா என்றும் அழைக்கப்படும் தென்னிந்தியா, பல பெயர்களால் அறியப்படுகிறது. கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து தீபகற்ப இந்தியாவின், பெரும்பகுதி தக்காணப் பீடபூமியால் காணப்படுகிறது.[11] "டெக்கான்" என்ற சொல், தக்ஷின் என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட தக்ஹின் என்ற பிராகிருத வார்த்தையின் ஆங்கில வடிவமாகும். கருநாடகமும் தென்னிந்தியாவுடன் தொடர்புடையது ஆகும்.[12]
வரலாறு
பண்டைய காலம்

இரும்புக் காலத்திலிருந்து (பொ.ஊ.மு. 1200 - பொ.ஊ.மு. 24), பொ.ஊ. 14ம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர், சோழர், சேரர், சாதவாகனர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர், பல்லவர், காக்கத்தியர், போசளர் காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது. களப்பிரர்கள் (பொ.ஊ. 250 – 600 ) சேர, சோழ, பாண்டியர்களை வென்று தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது. தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.
விடுதலைக்குப் பின்பு
1956ல் இந்திய அரசு இயற்றிய மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தென்னிந்தியாவில் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் எனும் புது மாநிலத்துடன் இணைத்தனர். கன்னட மொழி பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடன் இணைத்தனர். மலையாளம் பேசும் பகுதிகள் கேரளா எனும் புதிய மாநிலத்துடன் இணைத்தனர். 1968ல் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது. 1972ல் மைசூர் மாநிலத்தின் பெயரை கர்நாடகா எனப் பெயரிடப்பட்டது. 1961ல் போர்த்துகேய இந்தியாவின் பகுதியான கோவா இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது. பின்னர் 1987ல் கோவா தனி மாநிலமாக உயர்ந்தது. 1950ல் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியான புதுச்சேரி, இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது. ஆந்திரப் பிரதேசத்தின் பழைய ஐதராபாத் இராச்சியத்தின் பகுதிகளைக் கொண்டு 2014ல் தெலங்கானா மாநிலம் உருவானது.
புவியியல்

இந்தியாவில் தெற்கில் தலைகீழ் முக்கோண வடிவ அமைப்பில் அமைந்த தென்னிந்திய தீபகற்பத்தின் எல்லைகளாக கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் இந்தியப் பெருங்கடல், மேற்கில் அரபுக் கடல், வடக்கில் விந்திய மலைத்தொடர்களும் எல்லைகளாக உள்ளது.
சாத்பூரா மலைத்தொடர்களுக்கு தெற்கே அமைந்த தக்காண பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளை கொண்டுள்ளது. தக்காண பீடபூமியின் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் பருத்தி அதிகம் விளையும் வறட்சி மிக்க விதர்பா மற்றும் மரத்வாடா பிரதேசங்கள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கும், அரபுக் கடலுக்கும் இடையே மலபார் பிரதேசம் மற்றும் கொங்கண் மண்டலம் உள்ளது.
வடக்கிலிருந்து தெற்காக அமைந்த மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கிடையே மலைநாடு, மலபார் கடற்கரை, நீலகிரி, வயநாடு ஆனைமலை மற்றும் சத்தியமங்கலம் மலைக்காடுகள் உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் திருமலை, ஸ்ரீசைலம் போன்ற திருத்தலங்களும், நல்லமலா மலைக்காடுகளும் அமைந்துள்ளது
Remove ads
தாவரங்கள் மற்றும் விலங்குகள்
Remove ads
மக்கள் தொகை

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதிப்பிடப்பட்ட தென் இந்தியாவின் மக்கள்தொகை 25.2 கோடியாகும். இது இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். குழந்தை பிறப்பு வீதமானது மக்கள் தொகையை வீழ்ச்சி அடையாமல் வைத்திருக்கக்கூடிய 2.1க்கும் குறைவாகவே அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் உள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு இந்திய அளவிலேயே மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விதமாக 1.7 ஐப் பெற்றுள்ளன.[24][25] இதன் காரணமாக 1981 முதல் 2011 வரை இந்திய மக்கள் தொகையில் தென் இந்தியாவின் பங்கு குறைந்து கொண்டே வந்துள்ளது.[26][27] தென்னிந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி சுமாராக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 463 பேர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தென் இந்தியாவின் மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் ஆவர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். 47.5% பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.[28] தென் இந்தியாவின் மக்கள் தொகையில் 60% பேர் நிலையான வீட்டு அமைப்புகளில் வாழ்கின்றனர்.[29] 67.8% தென்னிந்தியா குழாய் குடிநீர் வசதி பெற்றுள்ளது. கிணறுகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் குடிநீர் வழங்குவதில் முக்கியமான ஆதாரங்களாக உள்ளன.[30]
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய சராசரியை விட அதிக வேகத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சில சமூக பொருளாதார அளவீடுகளில் மேம்பட்ட போதிலும்,[31][32] வறுமையானது மற்ற இந்திய பகுதிகளைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை குறைந்துள்ள போதிலும் அதன் தாக்கம் தொடர்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்திய மாநிலங்களின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் ஆனது அதிகமாக உள்ளது மற்றும் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களை காட்டிலும் பொருளாதாரமானது வேகமாக வளர்ந்துள்ளது.[33]
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80%. இது தேசிய சராசரியான 74% விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளா அதிகபட்ச எழுத்தறிவு வீதமாக 93.91% ஐப் பெற்றுள்ளது.[9][34] தென்னிந்தியா, பாலின விகிதமான 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்பதனை அதிகமாக பெற்றுள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.[35] பொருளாதார சுதந்திரம், ஆயுட்காலம், குடிநீர் வசதி, சொந்த வீடு வைத்திருப்பது மற்றும் சொந்த டிவி வைத்திருப்பது ஆகிய அளவீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன.[36][37][38][39][40] தென்னிந்திய மாநிலங்களில் 19% பேர் ஏழைகளாக உள்ளனர். அதே நேரத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் 38% பேர் ஏழைகளாக உள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் வருமானம் ₹19,531 (ஐஅ$230). இது மற்ற இந்திய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானமான ₹8,951 (ஐஅ$100) ஐக் காட்டிலும் அதிகம்.[41][42] ஐக்கிய நாடுகள் அவை 2015க்குள் அடைய வேண்டும் என்று சில இலக்குகளை புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் என்று அறிவித்து உள்ளது. இதில் மக்கள் தொகை சார்ந்த மூன்று புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை கேரளா மற்றும் தமிழ்நாடு 2009லேயே அடைந்துவிட்டன. அந்த இலக்குகள் தாயின் ஆரோக்கியம், சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவையாகும்.[43][44]
மொழிகள்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் சுமார் 73 மொழிகள் உள்ளன.[45] தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகும்.[46] துளு மொழி கடற்கரையோர கேரளா மற்றும் கருநாடகாவில், 15 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. கொங்கணி எனப்படும் இந்தோ ஆரிய மொழி கொங்கண் கடற்கரையில் 10 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. தென்னிந்தியாவின் நகரப்பகுதிகளில் ஆங்கிலமும் பரவலாக பேசப்படுகிறது.[47] தென்னிந்தியாவில் உருது மொழி சுமார் 1.2 கோடி முஸ்லிம்களால் பேசப்படுகிறது.[48][49][50] தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் கொங்கணி ஆகியவை அலுவல் மொழிச் சட்டம் 1963 இன் படி இந்தியாவின் அலுவல் மொழிகளான 22 இல் ஒன்றாக வருகின்றன. இந்திய அரசாங்கத்தால் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட முதல் மொழி தமிழ் ஆகும். 2004 இல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.[51][52] செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட பிறமொழிகள் கன்னடம் (2008), தெலுங்கு (2008) மற்றும் மலையாளம் (2013) ஆகும்.[53][54]
மதம்
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மதமாக 80% மக்கள் பின்பற்றக்கூடிய இந்துமதம் உள்ளது. 11% பேர் இஸ்லாமையும், 8% பேர் கிறித்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர்.[56] வரலாற்றுக்கு முந்தைய மதம் தென்னிந்தியாவில் பின்பற்றப்பட்டுள்ளதற்கு ஆதாரமாக நடனங்கள் மற்றும் சடங்குகளை விவரிக்கும் கற்கால ஓவியங்கள் கிழக்கு கர்நாடகாவின் குப்கல் போன்ற இடங்களில் சிதறி காணப்படுகின்றன.[57] அடிக்கடி உலகின் பழமையான மதமாக கருதப்படும் இந்து மதம் அதன் ஆரம்பத்தை இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் கொண்டுள்ளது.[58] தென்னிந்தியாவின் முக்கியமான ஆன்மீக பாரம்பரியங்களாக இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ கிளைகள் கருதப்படுகின்றன. எனினும் புத்த மற்றும் ஜைன தத்துவங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் செல்வாக்கு செலுத்திய போதும் இவை அவ்வாறு கருதப்படுகின்றன.[59] தென்னிந்தியாவின் தெற்குப் பகுதிகளில் அய்யாவழியும் பரவி காணப்படுகிறது.[60][61] தென்னிந்தியாவிற்கு இஸ்லாமானது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவின் மலபார் கடற்கரையில் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தக்காண சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இது பரவியது. அரேபிய வழி வந்த கேரள இஸ்லாமியர்கள் மாப்பிளமார் என்று அழைக்கப்படுகின்றனர்.[62] கிறித்தவ மதம் தென்னிந்தியாவிற்கு புனித தோமையாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பொ.ஊ. 52 இல் கேரளாவின் முசிறிக்கு விஜயம் செய்து கேரளாவின் யூதக் குடியிருப்புக்களுக்கு ஞானஸ்நானம் செய்தார்.[63][64] கேரளா உலகின் மிகப் பழமையான யூத சமூகங்களில் ஒன்றுக்கு உறைவிடமாகவும் உள்ளது. அவர்கள் சாலமன் ஆட்சிக்காலத்தில் மலபார் கடற்கரைக்கு வந்ததாக கருதப்படுகிறது.[65][66]
Remove ads
பொருளாதாரம்


தென்னிந்தியாவின் பொருளாதாரம் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு சோசலிச கட்டமைப்பை நோக்கி உறுதி அடைந்துள்ளது. தனியார் துறையின் பங்கெடுப்பு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு கடினமான அரசாங்க கட்டுப்பாடுகள் உள்ளன. 1960 முதல் 1990 வரை தென்னிந்திய பொருளாதாரங்கள் கலவையான பொருளாதார வளர்ச்சியை பெற்றன. 1960களில் கேரளா சராசரி பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. அதே நேரத்தில் ஆந்திரப்பிரதேசத்தின் பொருளாதாரம் அக்காலகட்டத்தில் சரிவை சந்தித்தது. 1970களில் கேரளா பொருளாதார சரிவை சந்தித்தது. அதே நேரத்தில் 1970க்குப் பிறகு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பொருளாதாரங்கள் தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட அதிகப்படியான வளர்ச்சி விகிதத்தை பெற்றன. மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் காரணமாக அவை இந்த வளர்ச்சியை பெற்றன.[67] 2017–18 கணக்கின்படி தென்னிந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹56 லட்சம் கோடி (US$780 பில்லியன்) ஆகும். இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெற்றுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு பிறகு இரண்டாவது அதிக தொழில்மயமான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.[68] மார்ச் 2015-இன் கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் 109 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 60% தென்னிந்தியாவில்தான் உள்ளன.[69]
தென்னிந்திய மக்களில் 48%க்கும் அதிகமானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயமானது பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது. நெல், சோளம், திணை, பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, மிளகாய் மற்றும் ராகி ஆகியவை தென்னிந்தியாவில் அறுவடை செய்யப்படும் முக்கியமான பயிர் வகைகள் ஆகும். பாக்கு, காப்பி, டீ, ரப்பர் மற்றும் நறுமணப் பொருட்கள் மலை சார்ந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படுகின்றன. மக்களின் பிரதான உணவு பயிராக நெல் உள்ளது. கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி டெல்டா பகுதிகள் நாட்டின் அதிக அரிசி உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றாக உள்ளன.[70] அடிக்கடி ஏற்படும் பஞ்சங்கள் காரணமாக விவசாயிகள் கடனாளிகளாகவும், தங்களது ஆடு மாடுகளை விற்கும் நிலைக்கும் மற்றும் சில நேரங்களில் தற்கொலை செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.[71] இந்தியாவின் மொத்த காப்பி உற்பத்தியில் 92% தென்னிந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.[72] பருத்தி, டீ, ரப்பர், மஞ்சள், மாம்பழங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உற்பத்தி செய்யும் முக்கியமான பகுதியாகவும் தென்னிந்தியா விளங்குகிறது.[69][73][74][75] மற்ற பிற முக்கிய விவசாய உற்பத்தி பொருட்களானவை பட்டு மற்றும் கோழி சார்ந்த உற்பத்திப் பொருட்கள் ஆகும்.[76][77]
பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கோயம்புத்தூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவை நாட்டின் முக்கியமான தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உள்ளன. இதில் பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப மையங்களின் வளர்ச்சி தென்னிந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வேலை தேடுவோரை ஈர்த்துள்ளது.[78] 2005–06ல் தென்னிந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி ₹64 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.[79] சென்னை "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த வாகன மற்றும் வாகன பாக உற்பத்தியில் 35% சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.[80] இப்பகுதி இந்தியாவின் மோட்டார்கள் மற்றும் பம்புகள் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை கோயம்புத்தூர் உற்பத்தி செய்கிறது. மேலும் நகைகள், ஈர அரவை இயந்திரங்கள் மற்றும் வாகன பொருட்கள் ஏற்றுமதி செய்யும் பெரிய பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.[81]
தென்னிந்தியாவின் மற்றொரு முக்கிய தொழில்துறை ஜவுளித் துறை ஆகும்.[82] இந்தியாவில் உள்ள மொத்த நார் ஜவுளி ஆலைகளில் 60% தென்னிந்தியாவில் குறிப்பாக கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோட்டில் தான் உள்ளன.[83]
சுற்றுலாத்துறை தென் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தெலுங்காணா ஆகிய மாநிலங்கள் சுற்றுலா பயணிகள் வருகையின் எண்ணிக்கையில் முதல் பத்து மாநிலங்களுக்குள் வருகின்றன. உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் 50%க்கும் மேற்பட்டோர் இந்த நான்கு மாநிலங்களுக்குத்தான் வருகின்றனர்.[84]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads