முகம்மது நசீது

From Wikipedia, the free encyclopedia

முகம்மது நசீது
Remove ads

முகம்மது நசீது (Mohamed Nasheed, திவெயி: މުހައްމަދު ނަޝީދު; பிறப்பு: 17 May 1967) மாலைத்தீவு அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும்,[1] 2008 முதல் 2012 வரை மாலைத்தீவு அரசுத்தலைவராக இருந்தவரும் ஆவார்.[2] இவர் மாலைத்தீவுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசுத்தலைவரும்,[3] மாலைத்தீவு சனநாயகக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.[4] 2008 அரசுத்தலைவர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில், முகம்மது நசீது 25% வாக்குகளைப் பெற்றார், அதன் பின்னர் 30 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த மாமூன் அப்துல் கயூமிற்கு எதிரான பொது எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். நசீது 2008 நவம்பர் 11 இல் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

விரைவான உண்மைகள் முகம்மது நசீதுMohamed Nasheed, மாலைத்தீவுகள் நாடாளுமன்றத்தின் 19-வது அவைத்தலைவர் ...

2011-12 இல் எதிர்க்கட்சிகள் ந்சீதுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. இராணுவத்தினரும், காவல்துறையினரும் இதில் இணைந்து கொண்டனர். இதனை அடுத்து 2012 பெப்ரவரி 7 இல் நசீது பதவியில் இருந்து விலகினார். இராணுவத்தினரால் அதான் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து விலகுவதற்கு வற்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.[5] கயூமின் செல்வாக்கு மிக்க ஆதரவாளர்களின் உதவியுடன் இராணுவப் புரட்சி மூலம் அவர் பதவியில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது.[6] இவருக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த முகமது வாகித் அசன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து விசாரணை செய்த மாலைத்தீவு தேசிய விசாரணைகள் ஆணைக்குழு நசீதின் குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறியது.[7] அவர் பதவியில் இருந்த போது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா முகம்மது என்பவரைக் கைது செய்தமைக்காக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நசீது 2015 மார்ச்சில் கைது செய்யப்பட்டு,[8] 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[9] பன்னாட்டு மன்னிப்பு அவை இதனை "அரசியல் பழிவாங்கல்" எனக் குற்றஞ் சாட்டியது.[8][10] ஐக்கிய அமெரிக்க அரசுச் செயலகம் "விசாரணையின் போது பொருத்தமான குற்றவியல் நடைமுறைகள் இல்லாதது" குறித்துக் கவலை தெரிவித்தது.[9] இந்தியாவும் இது குறித்து வருத்தம் தெரிவித்தது.[11]

2016 இல், நசீது மருத்துவ சிகிச்சைக்காக ஐக்கிய இராச்சியம் சென்ற போது, அவருக்கு அந்நாடு அரசியல் புகலிடம் அளித்தது.[12] சட்டரீதியான தடைகளைச் சுட்டிக்காட்டி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது திட்டங்களை அவர் கைவிட்டார். கட்சியின் முதன்மை வாக்கெடுப்பில் தனது வெற்றியை நிராகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்தார்.[13] 2018 அரசுத்தலைவர் தேர்தலில், நசீதின் இளமைக்கால நண்பரும், கட்சியின் வேட்பாளருமான இப்ராகிம் முகமது சாலி வெற்றி பெற்றதை அடுத்து, நசீது நாடு திரும்பினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மச்சங்கோலி மேது தொகுதியில் போட்டியிட்டு 1,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[14] அதை அடுத்து அவர் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 மே 6 இல், நசீது அவரது வீட்டுக்கருகில் தனது வாகனத்தில் ஏறும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் படுகாயமுற்றார்.[15]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads