மு. ஆலாலசுந்தரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முருகேசு ஆலாலசுந்தரம் (Murugesu Alalasundaram, இறப்பு: செப்டம்பர் 2, 1985) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும், நியாயவாதியும் ஆவார்.

விரைவான உண்மைகள் மு. ஆலாலசுந்தரம்நாஉ, இலங்கை நாடாளுமன்றம் கோப்பாய் ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

ஆலாலசுந்தரம் யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டைச் சேர்ந்தவர். தமிழ்நாடு, சென்னையில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றுத் திரும்பியவர் ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[3]

அரசியலில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீ. ஆனந்தசங்கரியிடம் தோற்றார்.[4] 1972 இல் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு, மற்றும் சில கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தோற்றுவித்தன. 1981 மார்ச்சு மாதத்தில் கோப்பாய்த் தொகுதி உறுப்பினர் சி. கதிரவேலுப்பிள்ளை இறந்ததை அடுத்து, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆலாலசுந்தரத்தை உறுப்பினராக நியமித்தது. ஆலாலசுந்தரம் 1981 சூலை 23 இல் நாடாளுமன்றத்துக்கு சென்றார்.[5]

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் ஆலாலசுந்தரம் நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[6]. சூலை கலவரத்தை அடுத்து பல தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். ஆலாலசுந்தரம் உட்பட ஒரு சிலரே இலங்கையில் தங்கியிருந்தனர். ஆலாலசுந்தரம் தமது நல்லூர் இல்லத்தில் இறுதிக் காலத்தில் தங்கியிருந்தார்.[7]

Remove ads

படுகொலை

1985 செப்டம்பர் 2 நள்ளிரவில் இனந்தெரியாத இருவர் நல்லூர் கல்வியங்காட்டில் உள்ள ஆலாலசுந்தரத்தின் இல்லத்துக்குச் சென்று அவரை ஆயுத முனையில் கடத்திச் சென்றனர்.[8] வாகனம் ஒன்றில் ஏற்றி உடுவிலுக்குச் சென்ற அவர்கள் அங்கு உடுவில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தையும் சேர்த்துக் கடத்திச் சென்றனர்.[8] அடுத்த நாள் அதிகாலையில் ஆலாலசுந்தரத்தின் உடல் சூட்டுக் காயங்களுடன் அவரது வீட்டுக்கு அருகில் கிடக்கக் காணப்பட்டது.[7][8] தருமலிங்கத்தின் இறந்த உடல் தலையில் சூட்டுக் காயத்துடன் மானிப்பாய்க்கு அருகில் தாவடியில் உள்ள இடுகாடு ஒன்றில் கிடக்கக் காணப்பட்டது.[7][8]

இப்படுகொலைகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.[7] ஈழ தேசிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்களே இப்படுகொலைகளை நிகழ்த்தியதாக தருமலிங்கத்தின் மகனும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டினார்.[8] விடுதலைப் புலிகளே இதனை நிகழ்த்தியதாக இலங்கை அரசு தெரிவித்து வந்தது. ஆனாலும், இப்படுகொலைகளை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவின் கட்டளைக்கிணங்க தமிழீழ விடுதலைக் கழகமே நிகழ்த்தியதாக பரவலாக நம்பப்படுகிறது.[8][9][10][11] ஆலாலசுந்தரம் டெலோ அமைப்புக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார், அத்துடன் டெலோ தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உறவினரும் ஆவார்.[12]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads