மு. சி. பூரணலிங்கம் பிள்ளை

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் From Wikipedia, the free encyclopedia

மு. சி. பூரணலிங்கம் பிள்ளை
Remove ads

முன்னீர்பள்ளம் சிவசுப்பிரமணியம் பூரணலிங்கம் பிள்ளை (M. S. Purnalingam Pillai) (25 மே 1866 – 6 சூன் 1947) என்பவர் தமிழறிஞர், கல்லூரிப் பேராசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர்.

விரைவான உண்மைகள் மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சென்னை மாகாணம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முன்னீர்பள்ளம்" என்னும் ஊரில் 1866-இல் பிறந்தார்.[1] இவரது பெற்றோர் சிவசுப்பிரமணியம் பிள்ளை வள்ளியம்மை ஆகியோராவர். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. தன் தந்தையின் ஆசிரியரான செல்லப் பெருமாளிடம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் அருகில் உள்ள மேலப்பாளையம் பள்ளியில் சுந்தரம் என்ற ஆசிரியரிடம் இலக்கணமும், திருக்குறளும் ஆழமாக கற்றார். பின்னர் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள தருவை என்ற சிற்றூரில் உள்ள பள்ளியில் சேர்ந்து பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார்.

Remove ads

ஆங்கிலப் பேராசிரியராகப் பணி

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1915ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கென்று ஒரு பாடத்திட்டம் இல்லை. கல்லூரிகளில் தமிழ்ப் பாடம் தேவையில்லை என்று பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவையில் பேசப்பட்டும் வந்தது. இதனால் பூர்ணலிங்கம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோர் ஒவ்வொரு ஆசிரியரின் வீட்டுக்கும் சென்று ஆதரவு திரட்டினர். மேலும் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து மதுரை தமிழ் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டனர். பாண்டித்துரையும் இவர்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார். ஆசிரியர் சங்க்க் கூட்டத்தின் தீர்மானமும் சென்னை பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் மொழிப்பாடமாக தமிழ் வைக்கப்பட்டது.

Remove ads

இதழாசிரியராக

சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது பரிதிமாற்கலைஞர் நடத்திய "ஞான போதினி" என்ற மாதப் பத்திரிகையை தொடங்கி வைத்தார் . நீதிக் கட்சியினரின் "ஜஸ்டிஸ்" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றிச் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.

பிற்காலத்தில், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவிமணி, சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.

நூல்கள் இயற்றல்

பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது.

தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார்.[2] திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.[3]

தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவாக தன் முதல் நூலான "Primer of Tamil Literature" என்ற ஆங்கில நூலினை 1904இல் எழுதினார். அதில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்திய வரலாற்றையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் பண்பாட்டையும் இணைத்து பூர்ணலிங்கம் பிள்ளை Tamil India என்ற ஆங்கில நுலை 1927இல் எழுதினார். இந்த நூலில் தமிழ் மொழியில் தொன்மையையும், தமிழின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும் வரலாற்று சான்றுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் செம்மோழியே என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார்.

"பத்துத் தமிழ் முனிவர்கள்" என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார்.

இவர் எழுதிய, இராவணப் பெரியோன், சூரபதுமன் வரலாறு ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை.

ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆசிரியர் பணியிலிருந்து 1926-இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார்.

Remove ads

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

1938-39 ஆண்டுகளில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழறிஞர்களுடன் இணைந்து இவரும் போராடினார்.[4]

நாட்டுடைமை

இவர் ஆங்கிலத்தில் 32 நூல்களையும், தமிழில் 18 நூல்களும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். பூர்ணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads