திருநெல்வேலி

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

திருநெல்வேலிmap
Remove ads

திருநெல்வேலி அல்லது நெல்லை (ஒலிப்பு, Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.

விரைவான உண்மைகள் திருநெல்வேலி நெல்லை, நாடு ...

திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.[2]

Remove ads

பெயர் விளக்கம்

16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப்படுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை 'நெல்வேலி' எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள்.[சான்று தேவை]

அந்தணர் ஒருவர் நெல்லையப்பர் சுவாமிக்கு சமைத்து படைப்பதற்காக நெல்லை வெய்யிலில் காய வைத்து விட்டு சென்றிருக்க மழை பொழிய ஆரம்பித்து விட்டது. பயந்தோடி வேகமாக வந்தவர் வியந்து போனார். இறைவன் அருளால் நெல்லைச் சுற்றி மழை பொழியாமல் வேலியிட்டார் போல காணப்பட்டது. இவ்வாறு இறைவன் நெல்லுக்கு வேலியிட்டதால் திரு என்னும் அடைமொழியுடன் திருநெல்வேலி ஆனது. இந்த விளக்கத்தை நெல்லையப்பர் சுவாமி கோவிலிலும் காணலாம்.

Remove ads

பெயர்க் காரணம்

முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வோர் ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.

சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தன. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்குச் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லைக் காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காகக் காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே எனப் பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.

மன்னரும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.[3]

ஓர் ஏழை விவசாயி இறைவனுக்குப் படைக்க நெல்லைக் காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரெனப் பெய்ய, சிவன் (நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர் என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.

Remove ads

வரலாறு

Thumb
திருநெல்வேலியின் பெரும் கோவில்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் செதுக்கப்பட்ட தூண்

திருநெல்வேலியின் வரலாற்றை இங்கு வந்திருந்த கிறித்தவப் பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் (1814–91) ஆய்வு செய்துள்ளார்.[4][5][6] திருநெல்வேலி பாண்டிய அரசர்களின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது; அவர்களின் முதன்மைத் தலைநகரமாக மதுரை இருந்தது.[7] இங்கிருந்த பாண்டிய வம்சம் பொது ஊழிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன; அசோகர் (பொ.ஊ.மு. 304–232) காலக் கல்வெட்டுக்களிலும் மகாவம்சம், வராகமிகிரரின் பிரகத் சம்கிதை மற்றும் மெகஸ்தனிசின் (பொ.ஊ. 350–290) நூலிலும் இப்பேரரசு குறிக்கப்பட்டுள்ளது. இந்த இராச்சியம் பொ.ஊ. 1064இல் இராசேந்திர சோழன் காலத்தில் சோழர் ஆட்சியின் கீழ் வந்தது.[8] 13ஆவது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பிற்காலப் பாண்டியரின் கீழ் வந்தது.[9]

பொ.ஊ. 13ஆவது, 14ஆவது நூற்றாண்டுகளில் நெல்லையப்பர் கோவில் பாண்டியர்களின் அரசக் கோவிலாக விளங்கியது. அரச ஆதரவினால் அக்காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. குலசேகரப் பாண்டியனின் (1268–1308) மரணத்திற்குப் பிறகு, 16ஆவது நூற்றாண்டில் விசயநகர மன்னர்களும் (பாளையக்காரர்கள்) ஆட்சி புரிந்தனர். தெலுங்கு, கன்னடர்கள் கிழக்கத்திய கரிசல் மண் பிரதேசத்திலும் குடியேறினர். திருநெல்வேலி மதுரை நாயக்கர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது;[7] விசுவநாத நாயக்கர் (1529–64) காலத்தில் 1560இல் திருநெல்வேலி மீளமைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கற்றளிகளில் இவரது தாராளமான நன்கொடை பதியப்பட்டுள்ளது.[10] 1736இல் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது; 18ஆம் நூற்றாண்டின் மையக்காலத்தில் இப்பகுதியை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (1725–1764) கைப்பற்றினர்.[11][12]

1743இல் நிசாம்-உல்-முல்க், தக்காணப் பீடபூமியின் தளபதி, இப்பகுதியில் இருந்த மராத்தியர்களை விரட்டியடித்து, இப்பகுதி ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் அதிகாரம் நாயக்கர்களின் படைத்தளபதிகளாக இருந்த பாளையக்காரர்களிடம் இருந்தது. திருநெல்வேலி நாயக்கர் ஆட்சியிலும், நவாப் ஆட்சிக்காலத்திலும் முதன்மை வணிக நகரமாக விளங்கிய இந்நகரம் நெல்லைச் சீமை எனப்பட்டது; சீமை என்பதற்கு "வளர்ச்சியுற்ற வெளிநாட்டு நகரம்" எனப் பொருள் கொள்ளலாம்.[13] பாளையக்காரர்கள் மலைகளில் கோட்டைகள் கட்டிக்கொண்டு, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வந்தனர். 1755இல் பிரித்தானிய அரசு மேஜர் எரானையும் மகபுசு கானையும் அனுப்பி அமைதி ஏற்படுத்தினர். திருநெல்வேலி நகரம் மகபூசு கானுக்கு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் மகபூசு கானுடன் சண்டையிட்டனர். மகபூசுகானுக்கு உதவியாக கிழக்கிந்தியக் கம்பனி முகமது யூசபை அனுப்பியது. கான் ஆட்சியைக் கைபற்றிய பின்னர் 1763இல் எதிர்பாளராக மாறினார். இதனால் 1764இல் கான் தூக்கிலிடப்பட்டார். 1758இல் பிரித்தானிய துருப்புகள் தளபதி புல்லர்டன் தலைமையில் கட்டபொம்மனை வென்றனர். 1797இல் பானர்மேன் தலைமையிலான பிரித்தானியருக்கும் கட்டபொம்மன் தலைமையிலான பாளையக்காரர்களுக்கும் முதலாம் பாளையக்காரப் போர் மூண்டது. எட்டையபுரம் மன்னர் போன்ற சில பாளையக்காரர்கள் பிரித்தானியர்களுக்கு ஆதரவாயிருந்தனர். கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டு தனது பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் நிகழ்ந்தது. மிகுந்த எதிர்ப்புக்கு பிறகு பிரித்தானியர் மீண்டும் வென்றனர். நவாபுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்னாடிக் பகுதி பிரித்தானியர் ஆட்சி கீழ் வந்தது.[12][14][15]

1801இல் நவாபிடமிருந்து திருநெல்வேலியைப் பெற்ற பிறகு பிரித்தானியர் இதனைத் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரமாக்கினர். நிர்வாக, படைத்துறை தலைமையகங்கள் பாளையம்கோட்டையில் அமைந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத் தலைநகரமாக விளங்கியது. 1986இல் தனியாக தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தது.[16] தற்போதைய இந்திய அரசின் 100 நுண்சீர் நகரங்களில் ஒன்றாக திருநெல்வேலி அடையாளம் காணப்பட்டுள்ளது.

Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.73°N 77.7°E / 8.73; 77.7 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

மேலதிகத் தகவல்கள் மதவாரியான கணக்கீடு ...

இந்திய 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4,73,637 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[17] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரிக் கல்வியறிவு 90.39% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.75%, பெண்களின் கல்வியறிவு 86.18% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,73,637 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,97,826 ஆகவும் உள்ளது.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருநெல்வேலியில் இந்துக்கள் 69.00%, முஸ்லிம்கள் 20.02%, கிறிஸ்தவர்கள் 10.59%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.02%, 0.35% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.

Remove ads

இரட்டை நகரங்கள்

Thumb
இரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும்

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஓடுகின்றது. திருநெல்வேலி ஆனது ஆற்றின் மேற்குப் புறமும், பாளையங்கோட்டை கிழக்குப் புறமும் அமைந்துள்ளன.

பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

Remove ads

போக்குவரத்து

Thumb
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்

திருநெல்வேலி ஒரு விரிவான போக்குவரத்துப் பிணையத்தினைக் கொண்டுள்ளது; இது சாலை, இரயில் மற்றும் விமானம் மூலம் பிற முக்கிய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி 763.3 km (474.3 mi) சாலைகளை மொத்தம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் முப்பது கிலோமீட்டர்கள் சாலையும், மாநில நெடுஞ்சாலைகள் துறை மூலம் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் சாலையும் பராமரிக்கப்படுகின்றன. 1844 ஆம் ஆண்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கர்னல் ஹார்ஸ்லேவினால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இன்று அது சுலோச்சன முதலியார் பாலம் என்றழைக்கப்டுகிறது. திருநெல்வேலி நகரம் தேசிய நெடுஞ்சாலை 7 மேல், மதுரைக்குத் தெற்கே 150 km (93 mi) தொலைவிலும் மற்றும் கன்னியாகுமரிக்கு வடக்கே 91 km (57 mi) தொலைவிலும் அமைந்துள்ளது,. தேசிய நெடுஞ்சாலை 7A, இது தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு நீட்டிப்பு ஆகும்; இது தூத்துக்குடி துறைமுகத்தினை பாளையங்கோட்டையோடு இணைக்கிறது.

திருநெல்வேலி நகரில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. 2003 இல், மத்தியப் பேருந்து நிலையம் (புதிய பஸ் ஸ்டாண்ட்) வேய்ந்தான் குளத்தில் திறக்கப்பட்டது. இங்கிருந்து மற்றைய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆனது பெங்களூர், சென்னை, கன்னியாகுமாரி மற்றும் பிற நகரங்களுக்கு அதிதூரப் பேருந்து சேவையை இயக்குகிறது. மேலும் சந்திப்பு மற்றும் பாளைப் பேருந்து நிலையங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி நகர மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்குப் பேருந்து சேவையை இயக்குகிறது.

திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவில் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்றாகும். செங்கோட்டை - திருநெல்வேலி தொடருந்து இணைப்பு 1903 ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டது; பின்பு கொல்லம் வரை இணைக்கப்பட்ட இது பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் மாகாணத்திற்கு மிக முக்கியமான வர்த்தகப் பாதையாக இருந்தது. திருநெல்வேலி நகரம் நான்கு திசைகளிலும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வடக்கே மதுரை, தெற்கே நாகர்கோயில், மேற்கே கொல்லம் செல்லும் தொடருந்து இணைப்பு தென்காசி, செங்கோட்டையுடனும், கிழக்கே திருச்செந்தூருடனும் இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து தினமும் திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, குருவாயூர், ஹவுரா, தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஊர்களுக்கு விரைவுப் பயணிகள் சேவைகள் உள்ளன. மேலும் மதுரை, திருச்செந்தூர், திருச்சி மற்றும் கொல்லம் தென்காசி பாசஞ்சர் சேவை உள்ளது.

திருநெல்வேலியின் அருகில் உள்ள விமான நிலையம் தூத்துக்குடி வானூர்தி நிலையம் ஆகும்; இது திருநெல்வேலி நகரின் கிழக்குத் திசையில் 22 km (14 mi) தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் (Vaagaikulam) என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சென்னைக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (TRV) 130 km (81 mi) தொலைவில் உள்ளது. மற்றுமோர் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், 150 km (93 mi) ஆகும்.

Remove ads

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

மேலதிகத் தகவல்கள் மாநகராட்சி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ...

திருநெல்வேலி மாநகராட்சியானது திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக-வை)ச் சேர்ந்த எஸ். ஞானதிரவியம் வெற்றி பெற்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில், பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.

Remove ads

கல்வி

Thumb
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் கலையரங்கம்

மாநில கீதமான "தமிழ்த் தாய் வாழ்த்தினைப்" பாடிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரில் இங்கு ஒரு பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அபிசேகப்பட்டியில் உள்ளது. [18] பெரும்பாலான கிறித்தவப் பள்ளிகளும், கல்லூரிகளும் பாளையங்கோட்டையில் உள்ளன. திருநெல்வேலியில் 80 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 29 மேல்நிலைப் பள்ளிகளும், 12 உயர்நிலைப் பள்ளிகளும், 22 நடுநிலைப் பள்ளிகளும், 17 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன; திருநெல்வேலி மாநகராட்சி இவற்றில் 33 பள்ளிகளை நடத்துகின்றது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி,[19] கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம்,[20] மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி[21] அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி ஆகிய தொழில்சார்ந்த கல்லூரிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றன. செ. சேவியர் கல்லூரி, செ. ஜான்ஸ் கல்லூரி கிறித்தவ டயோசிசின் அமைப்பினரால் நடத்தப்படுகின்றன. மேலும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி (பாரதியார் இங்கு படித்தார்), சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி குறிப்பிடத்தகுந்தவை.

இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் ஜியோமெகனடிசம் (IIG) அதன் பிராந்திய நிறுவனமாக, 'the Equatorial Geophysical Research Laboratory'-ஐ நிறுவி, மண்ணியல், வளிமண்டல மற்றும் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.[22]

திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இது பெங்களூரிலுள்ள விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின், துணைப்பிரிவு ஆகும். இங்கு நிரந்தரக் காட்சியகங்ளும், அறிவியல் காட்சிகளும், ஊடாடும்(Interactive) மற்றும் சுய வழிகாட்டுதல் (self-guided) சுற்றுலாவும், சிறியகோளரங்கம் மற்றும் வானிலைக்கூர்நோக்கும் மையமும் உள்ளன. [23][24]

முக்கிய இடங்கள்

நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்தியமலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப்பிடிப்புகள் நடந்துள்ளன. பாபநாசத்தில், புகழ் பெற்ற அகத்தியர் அருவி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற குற்றால அருவித்தொடர் உள்ளது. இந்தக் குற்றால அருவி நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி, புலிஅருவி, பழைய குற்றாலம் எனப் பல அருவிகள் உள்ளன. மெயின் அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த அருவிக்கு மக்கள் வருகின்றனர்.

நெல்லையப்பர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் இந்த நகரில் அமைந்துள்ளது. ஸ்ரீ காந்திமதி-நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[சான்று தேவை] அம்பாளுக்கும், சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது. திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வழி கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் கோரக்க மகரிஷியால் வழிபட்ட தலம் ஆகும்.

Remove ads

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

இந்திய அரசின் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாநகரங்களில் இதுவும் ஒன்றாகும். சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 17984கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[25][26][27][28][29][30][31]

சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகரில் இரண்டுவகையான வளர்ச்சி பணிகள், அதாவது "நகரம் முழுவதும்"[32] மற்றும் "குறிப்பிட்ட பகுதி சார் வளர்ச்சி"[33] மேற்கொள்ளப்படுகின்றன.

மேலதிகத் தகவல்கள் பணி எண், திட்டம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads