மெய்கண்ட தேவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைவர்களால் புறச் சந்தான குரவர்கள் எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் மெய்கண்டார்.[1] சைவ சித்தாந்த நூல்களுள் தலையாய சிவஞான போதத்தை இயற்றியவர் இவரே.
மெய்கண்ட தேவர், திருவெண்ணெய்நல்லூரில், சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்தவர். கிபி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான மனவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
Remove ads
வரலாறு
பிறப்பு
தொண்டை மண்டலத்தில் திருமுனைப்பாடி நாட்டில் திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தவர்களான அச்சுத களப்பாளர் மற்றும் மங்களாம்பிகை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். குழந்தை இன்மையை நினைத்து வருந்தி திருத்துறையூரில் சகலாகம பண்டிதர் என்பவரை சந்தித்து வேண்டினர்.
சகலாகம பண்டிதர் திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்க்கும் பொழுது திருஞானசம்பந்தர் அருளிய "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ எனத் தொடங்கும்" திருவெண்காட்டு பதிகம் வந்தது. அதனால் தம்பதிகளை திருவெண்காடு சென்று அங்குள்ள, முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடி, திருவெண்காட்டு பதிகம்தனை அனுசந்தானம் செய்து, திரு வெண்காடரை வணங்கும்படி கூறினார்.
அவ்வாறே அச்சுத களப்பாளர் மற்றும் மங்களாம்பிகை தம்பதியினர் திருவெண்காட்டிற்கு வந்து சுவேதவனப் பெருமானைப் பூசித்த பிறகு களப்பாளரின் கனவில் இறைவன் தோன்றி திருஞானசம்பந்தர் போன்ற மகவு கிடைக்கும் என அருளினார். அவ்வாறே தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுவேதவனப் பெருமாள் என பெயரிட்டனர்.
இளம் பிராயம்
சுவேதவனப் பெருமாள், சிவபக்தியுடன் வளர்ந்தார். ஆகாய மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவர், திருவெண்ணெய் நல்லூரில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த சுவேதவனப் பெருமாளைக் கண்டார். உடனே கீழிறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் தன்னை உபதேசித்தருளி அவருக்கு மெய்கண்டார் என்னும் திருநாமத்தையும் சூட்டினார். இப்பெயர் பரஞ்சோதி முனிவரின் ஞானாசிரியரான சத்திய ஞான தரிசிகள் என்னும் வடமொழிப் பெயரின் தமிழ் வடிவமாகும்.
நூற் பணி
மெய்கண்டார், தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களைத் தமிழில் தந்தார். உடன் வார்திகமும் (விளக்கம்) இணைந்த நூல் சிவஞான போதம் ஆகும். (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). இந்நூலே பிற்காலத்தில் சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது.
அருணந்தி சிவாச்சாரியர் சீடராதல்
இவ்வாறாக மெய்கண்டாரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட, அவரது குல ஆசாரியரான சகலாகம பண்டிதர், மெய்கண்டாரைக் காண திரு வெண்ணை நல்லூருக்கு எழுந்தருளினார். அச்சமயம், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய்கண்டாரின் அருளுரை தனை கேட்க குழுமியிருந்தனர். மெய்கண்டாரும், அவர்களுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டு, ஆணவ மலந்தனைப் பற்றி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
அருளுரை வழங்கிக் கொண்டிருந்த மெய்கண்டாரின் முன் சென்று...."இந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்?" என்ற ஆணவத்தோடு....ஆணவம் ஆவது யாது? அதன் வடிவம் என்ன? என்று கேட்டார் சகலாகம பண்டிதர். பதிலேதும் பேசாமல், மெய்கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவமென சுட்டிக் காட்டினார்.
மெய்கண்டதேவரின் அருள் நோக்கால், தன்னிலை உணர்தவாராய், மெய்கண்டாரின் திருவடிகளில் தண்டனிட்டு எழுந்த சகலாகம பண்டிதர்......மெய்கண்டாரிடம், தன்னை அவர்தம் சீடராக ஏற்று அருளும்படி வேண்டினார். மெய்கண்டாரும், அவரை ஆட்கொண்டருளத் திருவுளம் கொண்டு.... சகலாகம பண்டிதருக்கு சிவ தீக்ஷை தந்தருளி, அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமந் தனையும் வழங்கினார். சைவர்களால் சந்தானக் குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவஞான போதம் என்னும் நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபது என்னும் நூலும் இவர் அருளியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.
முக்தி
மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூசைத் தினத்தைச் சைவர்கள் சிறப்பாகக் கொண்டாடுவர்.
Remove ads
உசாத்துணைகள்
- பூலோகசிங்கம், பொ., அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1975.
- இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
ஆதாரங்கள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads