யாவோ டி பாரோசு

From Wikipedia, the free encyclopedia

யாவோ டி பாரோசு
Remove ads

யாவோ டி பாரோசு (João de Barros) (1496 - 20 ஒக்டோபர் 1570) புகழ் பெற்ற தொடக்ககால போர்த்துக்கேய வரலாற்றாளர்களுள் ஒருவர். இந்தியா உள்ளிட்ட ஆசிய, தென்கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியவை தொடர்பான போர்த்துக்கேயரின் வரலாறு குறித்து "டெக்கேடாஸ் டா ஆசியா" (Décadas da Ásia) என்னும் நூலை எழுதியதன் மூலம் இவர் புகழ் பெற்றார்.

விரைவான உண்மைகள் யாவோ டி பாரோசுJoão de Barros, பிறப்பு ...
Remove ads

தொடக்க காலம்

இவர் போர்த்துக்கலின் முதலாம் மனுவேலின் அரண்மனையில் கல்வி பயின்றார். இருபதாவது வயதில் பேரரசர் கிளாரிமுண்டோவின் வரலாற்றுக் காலவரிசை என்னும் வீரகாவியம் ஒன்றை எழுதினார். இதை எட்டு மாதங்களில் அவர் எழுதி முடித்தார்.[1] இதை எழுதுவதில், பிற்காலத்தில் மூன்றாம் சான் என்னும் பெயரில் அரசரான இளவரசர் சானின் உதவி பாரோசுக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சான் அரசுக் கட்டில் ஏறிய பின்னர், பாரோசை எல்மினா புனித சார்ச்சுக் கோட்டையின் படைத் தலைவனாக ஆக்கினார். 1522ல் பாரோசு இப்பதவியை ஏற்றுக்கொண்டார். 1525ல் இந்தியா இல்லம் எனப்பட்ட அமைப்பின் நிதிப் பொறுப்பாளராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். 1528 ஆம் ஆண்டு வரை அவர் இப்பதவியில் இருந்தார்.

அக்காலத்தில் பரவிய கொள்ளை நோயில் இருந்து தப்புவதற்காக பாரோசு லிசுபனை விட்டு பொம்பால் என்னும் ஊரில் இருந்த தனது நாட்டுப்புற இல்லத்துக்குச் சென்று வசித்தார். 1532 ஆம் ஆண்டு மீண்டும் லிசுபன் திரும்பிய பாரோசை, அரசர் இந்தியா மற்றும் மினா இல்லத்தின் முகவராக நியமித்தார். ஐரோப்பாவின் கிழக்கத்திய நாடுகளுடனான வணிகத்தின் மையமாக லிசுபன் விளங்கிய அக்காலத்தில், இப்பதவி மிகுந்த முக்கியத்துவமும் பொறுப்பும் கொண்ட ஒரு பதவியாக விளங்கியது. இந்தியா, ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற இடங்களுக்குக் கப்பல்களை ஒழுங்கு செய்து அனுப்புதல், அவ்விடங்களில் இருந்து கப்பல்களில் வரும் பண்டங்களைப் பெற்று, களஞ்சியப்படுத்தி, விநியோகம் செய்தல் போன்றவற்றை மேற்பார்வை செய்வது இவரது பொறுப்பாக இருந்தது. அத்துடன், கடிதத் தொடர்புகளைப் பொறுப்பேற்றுப் பதிவு செய்தல் அவற்றை ஆவணப்படுத்துதல், நிதி நிர்வாகம் போன்ற வேலைகளும் இவர் பொறுப்பிலேயே இருந்தன.[2] பாரோசு நேர்மையும், சுறுசுறுப்பும் கொண்ட சிறந்த நிர்வாகியாக விளங்கினார். அக்காலத்தில் இவ்வாறான பண்புகள் மிக அரிதாகவே காணப்பட்டன. இதன் விளைவாக இதற்கு முன் இப்பதவியை வகித்தோரைவிட பாரோசு குறைவான இலாபத்தையே பெற முடிந்தது.

Remove ads

பிரேசில் தோல்வி

இந்நிலையில், பிரேசிலில் குடியேறிகளைக் கவர விரும்பிய மூன்றாம் சான், அந்நாட்டை தலைமைப் பகுதிகளாகப் பிரித்து, மாரஞ்ஞோ என்னும் பகுதியை பாரோசுக்கு ஒதுக்கினார். தன்னுடன் இரண்டு பங்காளிகளையும் சேர்த்துக்கொண்ட பாரோசு, ஒவ்வொன்றிலும் 900 பேர்களைக் கொண்ட பத்துக் கப்பல்களைக் கொண்ட அணியொன்றை உருவாக்கினார். இது 1539ல் பிரேசிலை நோக்கிப் புறப்பட்டது. மாலுமிகளின் அறியாமையினால் எல்லாக் கப்பல்களுமே மூழ்கிவிட்டன. இது பாரோசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

Remove ads

ஆய்வுகள்

Thumb
பாரோசின் Grammatica, (1539) என்னும் நூலின் முகப்புப் பக்கம்

இக்காலத்தில் ஓய்வு நேரங்களில் பாரோசு தனது ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பிரேசில் முயற்சி தோல்வியுற்ற சிறிது காலத்துக்குப் பின்னர் போர்த்துக்கேய இந்தியாவின் வரலாற்றை எழுதுவதற்கு அவர் முன்வந்தார். இதை அரசரும் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பான வேலைகளைத் தொடங்கிய அதே வேளை, இடைக்காலத்தில் போர்த்துக்கேய இலக்கணம் தொடர்பான ஒரு நூல்[3] உள்ளிட்ட சில நூல்களை எழுதி வெளியிட்டார்.

போர்த்துக்கேய இந்தியாவின் வரலாறு தொடர்பில் போர்த்துக்கேய மொழியில் அவர் எழுதிய ஆசியாவின் பத்தாண்டுகள் (Décadas da Ásia) என்னும் நூலின் முதல் பத்தாண்டு 1552ல் வெளியானது. இரண்டாம் பத்தாண்டு 1553 இலும், மூன்றாம் பத்தாண்டு 1563 இலும் வெளியாகின. நான்காவது, பாரோசு இறந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் 1615ம் ஆண்டிலேயே வெளியானது. இதன் முதல் பகுதிக்கு இருந்த வரவேற்பைக் கண்ட உடனேயே அரசர் சான், அரசர் மனுவேலின் வரலாற்றை எழுதும் பொறுப்பையும் பாரோசிடம் ஒப்படைத்தார். எனினும் பாரோசுக்கு இருந்த பல வேலைகளுக்கு இடையில் இதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

இறுதிக்காலம்

1567ம் ஆண்டு பக்கவாத நோய் ஏற்பட்டுப் பாரோசு ஓய்வு பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இவருக்குப் போர்த்துக்கேயப் பிரபுக்களுக்கு வழங்கப்படும் பட்டமான பிடல்கோ (fidalgo) என்னும் பட்டத்தையும், ஓய்வூதியம் மற்றும் பிற வருமானங்களையும் அரசர் செபசுத்தியன் வழங்கினார். பிரேசிலுக்குக் கப்பல்களை அனுப்பியது தொடர்பில் அரசுக்குச் செலுத்த வேண்டியிருந்த கடனையும் அரசு தள்ளுபடி செய்துவிட்டது.[4]

1570ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி இன்னொரு பக்கவாதத் தாக்குதலுக்கு உள்ளான பாரோசு காலமானார்.[5]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads