உரோம்
இத்தாலியின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உரோம் (Rome, இத்தாலியம்: Roma, இலத்தீன்: Rōma) இத்தாலியின் தலைநகரம் ஆகும். உலகில் அழகு என்ற சொல்லுக்கு உரோம் நகரையும் கூறலாம். ஏனென்றால் ரோமர்கள் அப்படி அந்நகரை வடித்திருப்பர். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே', 'இறப்பதற்கு முன் ரோமை பார்க்க வேண்டும்' என்னும் வாக்கியங்கள் அதன் சிறப்புக்கு உதாரணம் ஆகும். ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோம் கலாச்சாரமே வழிகாட்டி ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். 1,285.3 km2 (496.3 sq mi) பரப்பளவுள்ள இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இதனால் இந்நகரமே நாட்டின் மிகவும் மக்களடர்த்தி மிக்க நகரமாக விளங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப்பகுதியாக விளங்குகின்றது. பெருநகரப்பகுதியில் மக்கள்தொகை 3.8 மில்லியனாக உள்ளது.[2][3][4][5][6][7]
இத்தாலிய மூவலந்தீவில் நடு-மேற்குப் பகுதியில் லாசியோ மாகாணத்தில் அனியென் ஆறானது டைபர் ஆற்றில் கலக்கும் இடத்தில், டைபர் ஆற்றங்கரையில் உரோம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் எல்லைகளுக்குள் தன்னாட்சியுள்ள நாடான வத்திக்கான் நகர் அமைந்துள்ளது; இவ்வாறு ஓர் நகரத்தினுள்ளே நாடொன்று அமைந்திருப்பது தனித்துவமானதாகும். சில நேரங்களில் உரோம், இக்காரணங்களால், இரு நாடுகளின் தலைநகரமாகவும் வரையறுக்கப்படுகின்றது.[8][9]
இந்நகரில் பேசப்பட்டு வந்த இலத்தின் மொழியே திரிந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வெவ்வேறு மொழியாக மாறியுள்ளது. ஆனால் தற்போது ரோமர்கள் பேசுவது இத்தாலிய மொழியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.
உரோம் நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக உள்ளது; பழங்கதைகளின்படி கிமு 753இல் உரோம் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் நெடுங்காலம் தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்த நகரங்களில் உரோம் ஒன்றாக உள்ளது. இக்காரணத்தால் "முடிவுறா நகரம்" (இலத்தீன்: Roma Aeterna) [10] என்றும் உலகத்தின் தலைநகர் "(இலத்தீன்: Caput Mundi)" என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைக்காலத்தில் உரோம் அடுத்தடுத்த உரோமை இராச்சியம், உரோமைக் குடியரசு உரோமைப் பேரரசுகளின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மேற்கத்திய பண்பாட்டின் தொட்டில் எனவும் உரோம் விவரிக்கப்படுகின்றது. கி.பி முதலாம் நூற்றாண்டிலிருந்து திருத்தந்தையின் இருப்பிடமாக விளங்குகின்றது. 8ஆவது நூற்றாண்டில் திருத்தந்தை நாடுகளின் தலைநகராக ஏற்றம் பெற்று 1870 வரையில் இத்தகுதியைப் பெற்றிருந்தது. 1871இல் இத்தாலிய இராச்சியத்தின் தலைநகரமாகவும் 1946 முதல் இத்தாலியின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.
நடுக்காலத்திற்குப் பின்னர் அனைத்து திருத்தந்தைகளும் உரோம் நகரத்தை உலகின் சிறந்த கலைநயம் மிக்க பாண்பாட்டு மையமான நகரமாக்கத் திட்டங்கள் வகுத்துள்ளனர்.[11] இதனால் இத்தாலிய மறுமலர்ச்சியின் முதன்மை மையமாக உரோம் விளங்கியது.[12] இங்குதான் பரோக்கு கலைவடிவம் பிறந்தது. பிரமாண்டே, மைக்கலாஞ்சலோ, ராபியேல் சான்சியோ, பெர்னினி போன்ற புகழ்பெற்றக் கலைஞர்களும் கட்டிட வடிவமைப்பாளர்களும் உரோமை மையமாகக் கொண்டிருந்தனர்; புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், இராபியேல் ரூம்சு, புனித பேதுரு சதுக்கம் போன்ற அழகிய கட்டிடங்களைக் கட்டமைத்தனர்.
உரோமிற்கு உலகளாவிய நகரம் என்ற தகுதி உள்ளது.[13][14][15] 2011ஆம் ஆண்டில் மிகவும் வருகை புரிந்த நகரமாக உலகில் 18ஆவதாகவும் ஐரோப்பாவில் மூன்றாவதாகவும் விளங்கியது; இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாவிடமாகத் திகழ்ந்தது.[16] இதன் வரலாற்று மையங்கள் யுனெசுக்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.[17] வத்திக்கான் அருங்காட்சியகங்கள், கொலோசியம் போன்ற நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் உலகின் மிகவும் பார்க்கப்பட்ட சுற்றுலா இடங்களாக உள்ளன; ஓராண்டில் பல மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களையும் காண்கின்றனர். 1960 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகம் இங்குள்ளது.
Remove ads
வரலாறு
ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ட்ராய் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது அங்கிருந்து ஓடிவந்த மன்னன், லிதியம் என்கிற ஆற்றின் கரையிலிருந்த வேறொரு மன்னனிடம் தஞ்சமடைந்தான். பிறகு, அம்மன்னனின் மகளையே மணம் செய்து கொண்டான். அந்த வம்சாவழியில் வந்த ஒரு பெண் ரியா சில்வியா, அவள் செவ்வாய் கிரகத்தால் கருவுற்று இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றாள். ஆனால், அந்த நேரத்தில் அவளின் மாமன் அந்த நகரத்தை கைப்பற்றியதால், தன் குழந்தைகளை காக்க ஒரு கூடையில் அவர்களை வைத்து டைபர் ஆற்றில் வி்ட்டுவிட்டாள். ஆற்றில் சென்ற குழந்தைகளை ஓநாய் ஒன்று இழுத்து வந்து, தன் பாலை சொரிந்து அவர்களைக் காத்தது. ஓநாயிடம் இருந்த குழந்தைகளை, அவ்வழியாக சென்ற மாடு மேய்ப்பவன் காப்பாற்றி வளர்த்து வந்தான். அவர்களே ரோமுலசு மற்றும் ரேமசு. இதன் அடையாளமாக ஓநாய் பாலூட்டும் இரட்டையர் சிலை ரோமானியா முழுவதும் இடம் பெற்றிருக்கும்.

இரட்டையர்களாகிய ரோமுலஸ், ரேமஸ் ஆகியோர் இணைந்து கி.மு. 753ல் ரோம் நகரத்தை நிறுவியதாக ஒரு தொல்மரபு கூறுகின்றது. அகழ்வாராய்ச்சியின் படியும் சுமார் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்து தொடர்ந்து மக்கள் இன்று ரோம் நகரம் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
உரோமைக் குடியரசு உரோம நாகரீகம் குடியரசு அரசமைப்பாக இருந்த கால கட்டத்தைக் குறிக்கிறது. முடியரசாக இருந்த உரோம நகர் கிமு 508 இல் குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் கோன்சல்கள் எனப்பட்டும் இரு அதிகாரிகள் செனேட் அவையினால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசை நிருவகித்தனர். காலப்போக்கில் ஒரு விரிந்த அரசியலமைப்புச் சட்டமும் உருவானது. அதில் அரசின் ஒவ்வொரு பிரிவின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு அங்கமும் முழு அதிகாரத்தைக் கையிலெடுக்காவண்ணம் அதிகாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேசிய நெருக்கடிக் காலங்களைத் தவிர அதிகாரிகளின் பதவிக் காலம் ஓராண்டாகக் குறுக்கப்பட்டிருந்தது. எந்த வொரு தனி மனிதனும் குடியரசு மீது சர்வாதிகாரம் செலுத்த முடியாதவாறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆனால் உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனது. அதிகாரம் ஒரு சில செல்வாக்கு வாய்ந்த செனேட்டர்கள் கையில் தங்கியதால், அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. கிமு முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. அவற்றின் இறுதியில் வெற்றி பெற்ற ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என்ற பெயரில் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது.
Remove ads
விக்டர் இம்மானுவேல் நினைவகம்
தனித்தனியாக இருந்த இத்தாலியை ஒன்றிணைத்து ஆட்சி செய்தவர் விக்டர் இம்மானுவேல். தனது ஆட்சி காலத்தில் ஆறு முதல் ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். அவரை கவுரவிக்க கட்டப்பட்ட கட்டிடமே விக்டர் இம்மானுவேல் நினைவகம். இதை 1885-ல் ஆரம்பித்து 1911 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள். இது முழுவதும் சலவைக் கற்களால் கட்டப்பட்டது ஆகும். இக்கட்டிடத்தின் முன் குதிரை மீது அமர்ந்து இருக்கும் இம்மானுவேலின் சிலை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Remove ads
ட்ரிவி ஃபவுண்டைன்
ரோம் நகரின் மிகப்பெரிய ஃபவுண்டைன்,ட்ரிவி ஃபவுண்டைன் ஆகும்.ட்ரிவி என்றால் 'மூன்று சாலை கூடுமிடம்' என்று பொருள்.இந்த ஃபவுண்டைனில் மூன்று சாலைகள் கூடுகின்றன அதனால் இப் பெயர் ஏற்பட்டது.இந் நீரூற்றுக்கு சலோன் என்னும் நீரூற்றிலிருந்து நீர் வருகிறது. இதை 1732-ல் ஆரம்பித்து 1762 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள்.இதில் சமுத்திரக் கடவுளான ஓசியானஸின் சிலை உள்ளது.அவரின் இரு பக்கமும் இரு சிலை உள்ளது.ஒன்று செல்வம் அளிக்கும் கடவுளின் சிலை மற்றொன்று நோயை குணப்படுத்தும் கடவுளின் சிலை.
கொலோசியம்
ரோமானியர்கள் சண்டையை ஒரு திருவிழா போல் கொண்டாடுவர்.அதற்காக கட்டப்பட்டதே கொலோசியம்.இங்கு சண்டை இடும் வீரர்களை கிளாடியேட்டர் என்றே அழைப்பர். கிளாடி என்றால்'கத்தி' என்று பொருள்.கி.பி.முதலாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது.இதன் உயரம் 150 அடியாகும்,மொத்தம் நான்கு கேலரியை உள்ளடுக்கியது ஆகும்,ஒரே சமயத்தில் இங்கு 8000 பேர் அமர்ந்து வீரர்களின் சண்டைகளை காணலாம்.
தி பாத்ஸ் ஆப் கரகலா
கரகலா என்ற மன்னன் கட்டிய ஒரு பொது குளியல் தொட்டியே தி பாத்ஸ் ஆப் கரகலா ஆகும்.
காலநிலை
Remove ads
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads