லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அப்போதைய சென்னை மாகாணத்தில் நவம்பர் 1944 முதல் 1947 வரை மிகவும் பரபரப்பாக நடந்த குற்றவியல் வழக்காகும். சி. என். லட்சுமிகாந்தன் எனும் தமிழ் பத்திரிக்கையாளர் சென்னை, வேப்பேரியில் நவம்பர் 8, 1944இல் கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலையில் சென்னை பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் நடந்த புலன் விசாரணையை அடுத்து ஐயத்திற்குட்பட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் இயக்குநர் சு. மு. சிறீராமுலு நாயுடுவும் அடக்கம்.[1]
இவ்வழக்கில் இயக்குநர் நாயுடு விடுவிக்கப்பட்டு நடிகர்கள் தியாகராஜ பாகவதரும் கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த அறமன்றத்திலும் இவர்களது மேல்முறையீடு தோல்வியடைந்தது. 1947 வரை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர். பிரைவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இச்சமயம் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆனார்கள்.[2]
இந்த வழக்கினால் பாகவதர் மிகவும் மனமொடிந்ததுடன் தமது செல்வத்தையும் இழந்தார். 1959இல் வறுமையில் இறந்தார். கிருஷ்ணன் தமது மரணம் வரை சில திரைப்படங்களில் நடித்து மீண்டும் புகழ்பெற்றார்.
Remove ads
பின்னணி
சி.என். இலட்சுமிகாந்தன் 1940இல் சென்னையில் சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் காகித பற்றாக்குறையினால் அக்காலத்தில் புது பத்திரிக்கைகளை துவக்க அப்போதைய பிரித்தானிய அரசு அனுமதிக்கவில்லை. சினிமாதூது பத்திரிக்கை திரைப்பட பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அனுமதியில்லாமல் சினிமாதூது வெளியிடுப்படுவதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அதை மூடும் படி செய்தனர். அடுத்து லட்சுமிகாந்தன், இந்து நேசன் எனும் ஏற்கனெவே விற்பனையாகிவந்த பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் அனைத்துக் கலைஞர்களும், இவரின் பத்திரிக்கைச் செய்திகளுக்கு இலக்கானார்கள். தனி நபர்களின் மீது அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் மஞ்சள் ஏடுகளின் முன்னோடியாக இந்துநேசன் விளங்கியது. அதனால் அவர் பல எதிரிகளை பெற்றார்.
Remove ads
கொலைச் சம்பவம்
8-11-1944 அன்று, சென்னை புரசைவாக்கத்தில் ரிக்சாவில் போகும்போது, சிலர் லட்சுமிகாந்தனை கத்தியால் குத்தினர். அவரை சென்னை பொது மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். 9-11-1944 அன்று, திடீலென்று அவர் உடல்நிலை சரிந்து மாண்டார். டிசம்பர் 44ல், காவல்துறையினர் 8 பேரை கைது செய்து, கொலை வழக்கு தொடர்ந்தது. இந்த எட்டில் அந்த நாட்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதரும்,என்.எஸ்.கிருஷ்ணனும், திரைப்படத் தயாரிப்பாளரான சிறீராமுலு நாயுடுவும் அடங்குவர். அந்த 8 பேரும் 'கொலை சதி' செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
Remove ads
வழக்கின் போக்கு
ஏப்ரல் 1945ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத்துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்ட 8 பேருக்கும் வாதிட்டனர். சிறீராமுலுவின் மேல் ஆதாரம் வன்மையில்லாத்தால் அவர் விடுவிக்கப் பட்டார். மே 45ல், பாகவதர், கிருஷ்ணன் உள்பட ஆறுபேர் 'கொலை சதி' குற்றம் செய்தவர் என தீர்மானிக்கப்பட்டது. நீதிபதி எல்லோருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தார். பிறகு குற்றவாளிகள், மேல் நீதிமன்றத்திறத்தில் முறையிட்டனர்; ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்து அவர்களது தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.[3]
1946ல், பாகவதரும், கிருஷ்னனும் தங்கள் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, பாகவதர் நடித்த ஹரிதாஸ் 100 வாரங்கள் மேல் திரை அரங்குகளில் ஓடி, ஒரு புது சாதனையை செய்தது. ஏப்ரல் 1947ல் ப்ரிவி கௌன்ஸில் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை மறு பரிசீலனை செய்து, பாகவதரையும், கிருஷ்ணனையும் ஏப்ரல் 1947ல், விடுதலை செய்தது.
விடுதலைக்கு பின்
முப்பது மாதம் சிறை வாசத்திற்கு பின், தன் விசிறிக் கூட்டங்கள் நடுவே விடுவிக்கப்பட்ட பாகவதர் நேரே வடபழனி முருகன் கோவிலில் சென்று கும்பிட்டு, சொந்த ஊர் சென்றார். அவரும், கலைவாணரும் சேர்ந்து 1950களில் படம் எடுத்தனர்; ஆனால் அவர்கள் புகழ் முன்பிருந்த சிகரங்களை எட்டவில்லை.
சினிமாவில், அழகிய முகம் கொண்ட நடிகருக்கு வேறு ஒரு அழகிய குரல் கொண்ட பாடகர் பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. (இதற்கு முன் ஶ்ரீவள்ளி 1945 படத்தில் அழகிய முகம் கொண்ட கதாநாயகிக்கு அழகிய குரல் கொண்ட பாடகி, பின்னணி குரல் கொடுத்து மாபெரும் படம் மாபெரும் வெற்றி கண்டிருந்தது)
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads