லியூட்டிக் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லியூட்டிக் நடவடிக்கை (Operation Lüttich) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் போது நாசி ஜெர்மனியின் படைகள் பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் நேச நாட்டுப் படை முன்னேற்றத்தை எதிர்த்து நிகழ்த்திய எதிர்த்தாக்குதலாகும். மோர்ட்டைன் பகுதியில் இது நிகழ்ந்ததால், மோர்ட்டைன் எதிர்த்தாக்குதல் என்றும் வழங்கப்படுகிறது.
நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு ஜூல் 6, 1944ல் நார்மாண்டிப் பகுதியில் நிகழ்ந்தது. இரு மாதங்கள் கடற்கரையோரப் பகுதிகளில் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியப் படை வளையத்தை உடைத்து பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கின. இந்த முன்னேற்றத்தைத் தடுத்து, இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற எதிர்த்தாக்குதல் ஒன்றை நிகழ்த்த இட்லர் தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டார். பிரிட்டானிப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்த பகுதிகளை மீட்டு, கோடென்ண்டின் தீபகற்கபத்தின் அவராஞ்செசு நகர் வரை முன்னேற ஜெர்மானியப் படைகளுக்கு இலக்குகள் கொடுத்தார். இத்தாக்குதலுக்கு லியூட்டிக் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. ஜெர்மானிய களத் தளபதிகள் இட்லரின் உத்தியோடு உடன்படவில்லை. இத்தகைய தாக்குதலுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு, மாறாக தாக்குதலில் ஈடுபடும் படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட வாய்ப்பு உண்டு என்று மறுத்தனர். ஆனால் அவர்களது கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் நடவடிக்கையைத் தொடங்க உத்தரவிட்டார் இட்லர்.
ஆகஸ்ட் 7 அன்று 47வது ஜெர்மானியக் கவச கோர், அமெரிக்கப் படை நிலைகளின் மீது தாக்குதலைத் தொடங்கியது. துவக்கத்தில் சண்டையின் போக்கு ஜெர்மானியர்களுக்குச் சாதகாமவே இருந்தாலும், நேச நாட்டு வான்படைகளின் எதிர்த்தாக்குதலால், ஜெர்மானியத் தாக்குதல் படையில் பெரும்பாலான டாங்குகள் அழிக்கப்பட்டன. தாக்கப்பட்ட நேசநாட்டுப் படைப்பிரிவுகளும் சுதாரித்துக்கொண்டு எதிர்த்துத் தாக்கத் தொடங்கின. இதனால் ஒரு வார சண்டைக்குப் பின்னர், ஜெர்மானிய முன்னேற்றம் தடைபட்டு, தாக்குதலில் ஈடுபட்ட படைப்பிரிவுகள் சுற்றி வளைக்கப்பட்டன. ஜெர்மானியத் தளபதிகள் இட்லரை எச்சரித்தபடியே பல படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படை வளையத்தில் சிக்கிக் கொண்டதால் ஃபலேசு இடைப்பகுதி உருவாகி விட்டது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads