வட்டதாகே (Vatadage, சிங்களம்: වටදාගේ) எனப்படுவது இலங்கையின் பொலன்னறுவை நகரத்தில் காணப்படும் ஒரு வகை பௌத்த சமய வழிபாட்டுக்குரிய கட்டிடம் ஆகும்.[1] இதற்கு, தாகே, தூபகர, சைத்தியகர போன்ற பெயர்களும் உண்டு. இக்கட்டிட வகையில் இந்தியச் செல்வாக்கு ஓரளவுக்குக் காணப்படுகிறது எனினும், இவ்வகையை பண்டைய இலங்கைக் கட்டிடக்கலைக்கு உரிய தனித்துவமான அமைப்பு எனக் கூறலாம். புத்தரின் புனித சின்னங்களைத் தம்மகத்தே கொண்ட சிறிய தாதுகோபுரங்களைப் பாதுகாப்பதற்காக இவ் வட்டதாகேக்கள் அவற்றை மூடிக் கட்டப்பட்டன. வட்ட வடிவம் கொண்ட இக் கட்டிடங்கள் செங்கல், கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட இவை கல் சிற்பங்களைக் கொண்டு அழகுபடுத்தப்பட்டிருந்தன. இக்கட்டிடத்துக்கு, ஒன்றுக்குள் ஒன்றாக வட்ட வடிவ வரிசைகளில் அமைந்த தூண்களால் தாங்கப்பட்ட மரத்தால் ஆன கூரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இலங்கையில் இப்போது பத்து வட்டதாகேக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. பெரும்பாலான இக் கட்டிடங்களைக் கட்டியவர்கள் யார் என்பதோ, எப்போது கட்டப்பட்டது என்பதோ தெரியவில்லை. தூபாராம தாதுகோபுரத்தைச் சுற்றி அமைந்த வட்டதாகேயே மிகவும் பழைய இவ்வகைக் கட்டிடம் எனக் கருதப்படுகின்றது. எனினும், இவ்வகைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு பொலநறுவையில் உள்ள வட்டதாகே ஆகும். மெதிரிகிரிய, திரியாய் ஆகிய இடங்களில் அமைந்துள்ள வட்டதாகேக்களும் ஓரளவு நல்ல நிலையில் உள்ளன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.