புத்த விகாரம்

From Wikipedia, the free encyclopedia

புத்த விகாரம்
Remove ads

புத்த விகாரங்கள், பௌத்த பிக்குகளின் உறைவிடங்கள் ஆகும். குறிப்பாக, முக்கால ஞானம் உடைய துறவிகள் வாழும் இடமே விகாரம் என்ற பெயரைப் பெறுகிறது.

Thumb
பௌத்த விகாரை, அஜந்தா குகைகள், மகாராட்டிரா, இந்தியா
Thumb
புத்தரின் சாம்பல் மேல் கட்டிய தூபி, வைசாலி, பிகார், இந்தியா

பௌத்த கட்டிடங்களும், விகாரங்களும்

பௌத்தர்களும், சமணர்களும் தங்கள் சமயப் பெரியார்களின் ஈமச்சின்னங்களைப் புதைத்தவிடங்களில் ஒரு மேடையமைத்து அதன்மீது உருண்டை வடிவ மேடு கட்டுவர். இதனை தூபி என்றழைப்பர். இவை காலங்களுக்கும், இடங்களுக்குமேற்ப சிற்சில மாறுதல்களுடன் உள்ளன. ஸ்தூபி, புத்தரது பரிநிர்வாணத்தைக் குறிக்கும் புனிதச் சின்னம். எனவே அது வழிபாடு பொருளாயிற்று. புத்தர் பரிநிர்வாணமடைந்ததும் அவரது ஈமச்சின்னங்களைப் புதைத்த இடங்களில் செங்கல்லாலும், மணலாலும் எட்டு மகா ஸ்தூபிகளை நிறுவியதாக பௌத்த நூல்கள் கூறும். ஆனால் அவை காலத்தால் அழிந்துபோகவே, அசோகர் அவற்றைப் புதுப்பித்து ஸ்தூபி வழிபாட்டு மரபிற்கு ஊக்கமளித்தார். காலப்போக்கில் ஸ்தூபியைப் பாதுகாக்க அதன்மீது மரங்களாலும், ஓலைகளாலும் கூரை வேய்ந்தனர். இத்தகைய கூரைக்கட்டங்கள் இன்று இல்லை என்றாலும், இவற்றின் அமைப்பின் அடிப்படையில் மேற்கத்தியக் குன்றுகளில் குடையப்பட்ட குடைவரைகளை இன்றும் அஜந்தா குகைகள், எல்லோரா ஆகிய இடங்களில் காணலாம்.[1]

பௌத்த பிக்குகளின் உறைவிடப் பள்ளியே விகாரை எனப்படும். சாத்தனார் காலத்துத் தமிழ்த் தலைநகரங்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன. எனினும் புகார் நகரில் இருந்த பள்ளிகளே புகழ் படைத்தவை. பள்ளியின் பக்கத்தே புத்தரின் திருவுருவம் எழுந்தருளிய கோயிலும் இருந்தது. பள்ளியும் விகாரமும் ஒன்று போல் தோன்றினாலும் நுணுகி நோக்கின் வேறுபட்டன ஆகும். இரண்டிலும் துறவிகள் இருப்பர் எனினும் அவர்தம் நிலையில் வேறுபாடுண்டு. விகாரத்தில் உறையும் துறவிகளைச் சாரணர் என்றும், பள்ளியில் இருப்போரை மாதவர் என்றும் சாத்தனார் குறிப்பிடுகிறார். சாரணர்கள் முக்கால ஞானம் உடையவர்கள். சாரணர்களுக்கு ஒப்பான ஆற்றலும் மெய்யுணர்வும் பள்ளியில் வாழும் பிக்கு, பிக்குணிகளுக்கு இருந்ததாக எண்ண இடமில்லை. பௌத்தத் துறவிகளின் உறைவிடம் ஆராமம் எனப்படும். இதனைச் சங்காராமம் என்று வடமொழி நூல்களில் கூறுவர். மணிமேகலைக் காப்பியத்தில் ஆராமம், உவவனம், அறத்தோர் வனம், பூம்பொழில், தருமவதனம் எனப் பலப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.[2]

Remove ads

பூம்புகார் புத்த விகாரம்

தமிழகத்தில், குறிப்பாக சோழ நாட்டில் புத்த விகாரங்கள் இருந்ததற்கான சான்று தற்போது பூம்புகாரில் மட்டுமே உள்ளது.[சான்று தேவை]

நாகப்பட்டின புத்த விகாரம்

நாகப்பட்டினத்தில் இராஜராஜ சோழன் காலத்திலும் அவருடைய மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் புத்த விகாரங்கள் இருந்துள்ளன. அவை முறையே இராஜராஜப்பெரும்பள்ளி இராஜேந்திரப்பெரும்பள்ளி என அழைக்கப்பட்டன. நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் இருந்ததற்கான சுவடு தற்போது இல்லை. நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அருகே முன்பு விகாரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விகாரம் சூடாமணி விஹாரம் எனப்படும். நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் இருந்த இடமான தற்போதைய வெளிப்பாளையம் மற்றும் நாணயக்காரன் தெரு ஆகிய இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட புத்த செப்புத்திருமேனிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[3]

புத்தர் கோயில்

தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் உள்ள செவ்வப்ப நாயக்கர் கல்வெட்டின் மூலமாக கும்பகோணம் அருகே திருவிளந்துறையில் புத்தர் கோயில் இருந்ததற்கான கல்வெட்டு காணப்படுகிறது.[4] மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரியிலும் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தமங்கலத்திலும் புத்தர் கோயில்கள் உள்ளன.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads