வல்லரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லரசு என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு நாடு ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான அலிசு லைமன் மில்லர் என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப்பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்."[1]

1944 ஆம் ஆண்டளவில், பிரித்தானியப் பேரரசு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகிய பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது பனிப்போர் எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது[2] எனினும், பிரேசில், சீனா,[3] ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, உருசியா[4][5][6][7] ஆகிய நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசுகள் ஆவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது.[8]
பனிப்போருக்குப் பின்னர் வல்லரசு என்று ஒன்று இருப்பதையே சிலர் ஐயுறுகின்றனர். இன்றைய சிக்கலான உலகச் சந்தையமைப்பில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தங்கி இருக்கவேண்டிய நிலை உள்ளதால் வல்லரசு என்னும் கருத்துரு காலம் கடந்தது என்றும் தற்போதைய உலகம் பல்முனைப்பண்பு கொண்டது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
Remove ads
சொல்லும் பொருளும்

"வல்லரசு" என்னும் தமிழ்ச் சொல், "சூப்பர் பவர்" (Superpower) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுகிறது. மேற்குறித்த ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவை முழுமையாகத் தமிழில் குறிக்கும் ஒரு சொல்லாகவே இது பயன்பட்டு வருகிறது. எனவே "வல்லரசு" என்னும் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியை அதற்கு இணையான ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவின் வளர்ச்சியூடாகக் காண்பது பொருத்தமானது.
1944 ஆம் ஆண்டிலேயே ஆற்றல் வாய்ந்த நாடுகளிலும் கூடிய ஆற்றல் வாய்ந்த நாடுகளைக் குறிக்கும் ஒரு சொல்லாக "வல்லரசு" என்பதற்கு இணையான "சூப்பர் பவர்" என்னும் ஆங்கிலச்சொல் பயன்பட்டது. எனினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே பிரித்தானியப் பேரரசு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றைக் குறிப்பாக விளக்கும் ஒரு சொல்லாக வழங்கத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலக அரசியலில் செல்வாக்குச் செலுத்தவல்ல நிலையில் இருந்ததனாலேயே இந்நாடுகளும் வல்லரசு என்னும் வரையறைக்குள் வந்தன. அக் காலத்துக்கு முந்திய பேரரசுகளையும் உள்ளடக்கும் வகையில் பண்டைய எகிப்து, பண்டைய கிரீசு, பண்டைய சீனா, பண்டைய இந்தியா, பாரசீகப் பேரரசு, ஓட்டோமான் பேரரசு, மங்கோலியப் பேரரசு, போத்துக்கீசப் பேரரசு, எசுப்பானியப் பேரரசு, பிரான்சு, ஒல்லாந்துக் குடியரசு என்பவற்றையும் வல்லரசு என்னும் சொல்லால் குறிக்கச் சிலர் முற்பட்டனர். வரலாற்றில் இவையும் சில தனித்துவமான பெருமைகளைக் கொண்டிருந்ததே வரலாற்றாளர்கள் இவற்றுக்கும் வல்லரசு நிலை கொடுக்க முற்பட்டதற்கான காரணங்கள் எனலாம்.
தோற்றம்
இன்றைய பொருளில் இச் சொல்லை (ஆங்கிலம்) முதலில் பயன்படுத்தியவர் ஒல்லாந்த-அமெரிக்க புவிசார் அரசியல் தந்திரியான நிக்கோலாசு இசுப்பைக்மான் (Nicholas Spykman) என்பவர் ஆவார். போருக்குப் பிறகு புதிய உலக ஒழுங்கு எவ்வாறு அமையக் கூடும் என்பது குறித்து 1943 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலேயே இச் சொல்லை அவர் பயன்படுத்தினார். இவ்விரிவுரைகள் பின்னர் அவர் எழுதிய அமைதியின் புவியியல் (The Geography of the Peace) என்னும் நூலுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக அமைதிக்கும், செழிப்புக்கும் அவசியம் என அவர் கருதிய ஐக்கிய அமெரிக்காவினதும், ஐக்கிய இராச்சியத்தினதும் ஒப்பார் இல்லாத உலகளாவிய கடல்சார் வல்லாண்மை பற்றியே இந்நூல் முதன்மையாகக் குறிப்பிடுகிறது.
ஓராண்டுக்குப் பின்னர், வில்லியம் டி. ஆர். ஃபாக்சு என்னும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைப் பேராசிரியர், தான் எழுதிய வல்லரசுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் என்பனவும் அமைதிக்கான அவற்றின் பொறுப்பும் (The Superpowers: The United States, Britain and the Soviet Union and Their Responsibility for Peace) (1944) என்னும் நூலில் நிக்கோலாசு இசுப்பைக்மானின் கருத்துருவை மேலும் விரிவாக்கினார். இந்நூலில், அவர் மிகப்பெரிய அதிகாரம் பெற்ற நாடுகளின் உலகளாவிய அதிகார வீச்சுப் பற்றிப் பேசுகிறார். நிகழ்ந்த போர் எடுத்துக் காட்டியபடி, உலக அளவில் ஒன்றுடன் ஒன்று போரிடக்கூடிய புதிய வகையைச் சேர்ந்த நாடுகளைக் குறிக்கவே "வல்லரசு" என்பதற்கு இணையான "சூப்பர் பவர்" என்னும் சொல்லை ஃபாக்சு பயன்படுத்தினார்.
ஃபாக்சைப் பொறுத்தவரை, அக்காலத்தில், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய மூன்று வல்லரசுகள் இருந்தன. பிரித்தானியப் பேரரசே உலக வரலாற்றில் மிகவும் விரிந்த பேரரசு. 1921 ஆம் ஆண்டளவில் இதுவே முன்னணியில் இருந்த பெரும் ஆற்றல் வாய்ந்த நாடாக இருந்தது. இது உலகின் மக்கள்தொகையின் 25% ஐத் தன்னுள் அடக்கியிருந்தது. அத்துடன் புவி நிலப்பரப்பின் 25% ஐயும் கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் வலிமை பெற்ற நாடுகள்.
Remove ads
இயல்புகள்

வல்லரசு என்பதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லை. அதனால், இதற்குப் வேறுபாடான விளக்கங்கள் தரப்படுகின்றன. லைமன் மில்லரின் கருத்துப்படி, வல்லரசுத் தகுதிக்கான அடிப்படைக் கூறுகளை; படைத்துறை, பொருளாதாரம், அரசியல், பண்பாடு என்னும் என்னும் நான்கு அதிகார அச்சுக்கள் மூலம் அளவிட முடியும்.

குயீன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் ரிச்சார்ட் நோசல் (Kim Richard Nossal) என்பவரது கருத்துப்படி, இந்தச் சொல்லானது, கண்டம் அளவுக்குப் பெரிதான நிலப் பகுதியொன்றில் இருப்பதும், பிற பெரிய அதிகாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரிய மக்கள்தொகை கொண்டதாகவும், உயரளவுப் பொருளாதாரத் திறன் கொண்டதாகவும், உள்ளூரிலேயே பெருமளவிலான உணவுப் பொருட்களும் இயற்கை வளங்களும் கொண்டதாகவும், உயரளவுக்குப் பன்னாட்டுத் தொடர்புகளில் தங்கியிராத தன்மை உள்ளதாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் வளர்ச்சியடைந்த அணுவாற்றல் திறன் கொண்டதாகவும் உள்ள ஒரு சமுதாயத்தைக் குறிக்கும்.
பேராசிரியல் பால் டியூக் என்பவர், "வல்லரசு என்பது, உலகை அழிக்கக்கூடிய சாத்தியம் உட்பட உலகம் தழுவிய உத்திகளை நடைமுறைப்படுத்தும் வல்லமை கொண்டிருப்பதுடன், பெருமளவு பொருளாதாரத் திறனும் செல்வாக்கும் கொண்டிருப்பதாகவும், உலகம் தழுவிய கருத்தியலை முன்வைக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்" என்றார். எனினும் இந்த அடிப்படை வரைவிலக்கணத்துக்குப் பல மாற்றங்கள் செய்யமுடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
Remove ads
வல்லரசுகளும் பனிப்போரும்
1956 ஆம் ஆண்டின் சூயெசு நெருக்கடி, பிரித்தானியா இரண்டு உலகப் போர்களின் காரணமாக நிதி அடிப்படையில் வலிமை குன்றி விட்டதையும், அதன் வெளிநாட்டுக் கொள்கை இலக்குகளைப் பிற வல்லரசுகளுக்குச் சமமான நிலையிலிருந்து எய்தமுடியாமல் இருந்ததையும் எடுத்துக் காட்டியது. இரண்டாம் உலகப் போரின் பெரும்பகுதி ஐக்கிய அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பால் நெடுந் தொலைவில் இடம்பெற்றதால், ஐரோப்பிய ஆசிய நாடுகளில் நடந்ததுபோல் தொழில்துறை அழிவுகளோ, பாரிய குடிமக்கள் இழப்புக்களோ ஏற்படவில்லை. நீண்ட காலமாக உலகுக்குக் கடன் வழங்கும் ஒரு நாடாகவும், பொருட்களை வழங்கும் முதன்மை நாடாகவும், ஐக்கிய அமெரிக்காவின் நிலையைப் போர் வலுப்படுத்தியது. அத்தோடு அமெரிக்கா, அதன் படைத்துறை வலிமையை உலக அளவில் பெருமளவுக்கு முன்னேற்றி உலக அரங்கில் அதை முதல் நிலைக்குக் கொண்டு வருவதற்குக் காரணமாக விளங்கிய தொழில்துறை, தொழினுட்பம் என்பன சார்ந்த கட்டமைப்புக்களையும் உருவாக்கியது.

பன்னாட்டுக் கூட்டமைப்புக்களையும், சட்டவாக்க அமைப்புக்களையும் முயற்சிகள் இடம்பெற்று வந்தாலும், உலகப்போருக்குப் பிந்திய உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் வல்லரசுகள் வேறு நோக்கங்களைக் கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. அத்துடன், 1947ல் கிரீசுக்கான நிதியுதவியை பிரித்தானியா விலக்கிக்கொண்ட பின்னர், பனிப்போரில் சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்கா தலைமை நாடானது.
ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும், கருத்தியல், அரசியல், படைத்துறை, பொருளாதாரம் ஆகிய எல்லாத்துறைகளிலும் ஒன்றையொன்று எதிர்த்தன. சோவியத் ஒன்றியம் பொதுவுடைமைக் கருத்தியலை முன்னெடுத்தது. அதே வேளை ஐக்கிய அமெரிக்கா தாராண்மையியக் குடியாட்சியையும், கட்டற்ற சந்தை முறையையும் முன்னெடுத்துச் சென்றது. இது, வார்சோ உடன்படிக்கையிலும், நேட்டோ கூட்டமைப்பிலும் வெளிப்பட்டது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவுடன் அல்லது சோவியத் ஒன்றியத்துடன் அணிசேர்ந்தன. இந்த இணைப்புகள், இவ்விரு நாடுகளும் இரு முனையங்களாகப் பிரிந்து வந்த உலகின் பகுதிகள் என்பது உட்கிடையாக விளங்கியது.
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads