வாஞ்சிநாதன்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

வாஞ்சிநாதன்
Remove ads

வாஞ்சிநாதன் (1886 - 17 சூன் 1911) என்பவர் வாஞ்சி என்று பிரபலமாக அறியப்பட்டவர்; இவர் இந்திய சுதந்திர போராட்ட ஆர்வலர்களில் ஒருவர் ஆவார். 1911 சூன் 17 அன்று மணியாச்சி தொடருந்து நிலையத்தில் அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் ஆஷ் என்பவரை சுட்டுப் படுகொலை செய்தார். ஆஷ் இந்திய சுதந்திர இயக்கத்தை நசுக்கியதாகவும், இந்தியர்களுக்கெதிராக வன்முறையைப் பயன்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதாலும், அதற்கு பழி வாங்கவே இதை செய்தார் என ஆவணங்கள் கூறுகின்றன. வாஞ்சிநாதன் பின்னர் தான் கைது செய்வதைத் தவிர்க்க தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவமானது தென்னிந்தியாவில் இந்திய சுதந்திர இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் வாஞ்சிநாதன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

வாஞ்சிநாதன் 1886 ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் செங்கோட்டையில் (தற்போது தென்காசி மாவட்டம் தமிழ்நாடு) ஒரு ஏழை இந்துக் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவரது பெற்றோர் ரகுபதி ஐயரும் ருக்மணியும் இவருக்கு சங்கரன் என்று பெயரிட்டனர்.[2] செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை பயின்ற இவர், பின்னர் திருவனந்தபுரத்திலுள்ள கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் கோவில் கணக்காளராக வாழ்க்கையை தொடங்கிய வாஞ்சிநாதன், பின்னர் திருவிதாங்கூர் வனத்துறையில் அரசு வேலையில் சேர்ந்தார்.[3][4] சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, சிறிது காலத்தில் இறந்தது.[5][6]

Remove ads

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் வாஞ்சிநாதன் பங்கேற்றார். ஆங்கிலேயர்களைத் தோற்கடிக்க வன்முறை வழிகளை நாடிய மற்றொரு ஆர்வலரான வேங்கடேச சுப்ரமணிய ஐயரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார்.[3][7] நீலகண்ட பிரம்மச்சாரி பாரதியாருடன் "இந்தியா" செய்தித்தாளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.[8] 1908 தின்னவேலி கலவரத்திற்குப் பிறகு, பிரம்மச்சாரி தனது "பாரத மாதா சங்கம்" என்ற அமைப்பில் இளைஞர்களை சேர்த்துக்கொண்டு, பிரித்தானிய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு முறைகளில் பணியாற்றினார்.[3] பிரம்மச்சாரி தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்த வாஞ்சிநாதனின் மைத்துனர் சங்கர கிருசுண ஐயர் வாஞ்சிநாதனை இவரிடம் அறிமுகப்படுத்தினார்.[4]

ஆஷ் படுகொலை

ராபர்ட் ஆஷ் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்தார். வ. உ. சிதம்பரனாரால் நிறுவப்பட்ட "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனம் பெரும்பாலான இந்திய வணிகர்களால் ஆதரிக்கப்பட்டது மற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தது. இதனை ஒடுக்க ஆஷ் பல நடவடிக்கைகளை எடுத்தார்.[2][5] இவர் சிதம்பரனார் மற்றும் சக செயற்பாட்டாளர் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டி சிறையிலடைத்தார்.[9] 1908 ஆம் ஆண்டு தின்னவேலி எழுச்சியின் போது, ​​வன்முறை மூலம் கலவரத்தை அடக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். குற்றாலத்தில் இந்தியர்கள் குளிக்கத் தடை செய்தார்.[10] அவரது செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, புரட்சிகர பிரிவு அவரை படுகொலை செய்ய முடிவு செய்தது. இதற்கு 25 வயதான வாஞ்சிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] வாஞ்சிநாதன் ஆஷின் நடவடிக்கைகளை நெருக்கமாகப் பின்பற்றத் தொடங்கினார். ஆஷ் 1911 சூன் 17 அன்று மணியாச்சி தொடருந்து நிலையம் வழியாக சென்னை செல்வார் என்பதை அறிந்தார்.[1]

1911 சூன் 17 அன்று, ஆஷ் மற்றும் அவரது மனைவி திருநெல்வேலிலியிருந்து மணியாச்சிக்கு தொடருந்து வழியாக பயணம் செய்தனர். காலை 9:30 மணிக்கு புறப்பட்ட தொடருந்தில் வாஞ்சிநாதனும், சக ஆர்வலர் மாடசாமியும் பயணம் செய்தனர். தொடருந்து மணியாச்சியை 10:35க்கு வந்தடைந்ததும், ஆஷ் அமர்ந்திருந்த முதல் வகுப்பு பெட்டியை நோக்கி நகர்ந்தனர்.[11][12] வாஞ்சிநாதன் தனது மேலாடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆஷை சுட்டுக் கொன்றார்.[2][4] பின்னர் தொடருந்தின் கழிவறைக்குள் ஒளிந்துகொண்டு,தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையின் அறிக்கையில், இவர் பிரவுனிங் சிறு கைத்துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும், இந்தத்துப்பாக்கி பாரிசு நகரிலிருந்து பிகாஜி காமாவால் வாங்கப்பட்டு வெங்கடேச ஐயர் மூலம் வாஞ்சிநாதனை வந்தடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவருடன் வந்த சகா கூட்டாளி சம்பவத்தைத் தொடர்ந்து தப்பிச் சென்றார்.[13][14] வாஞ்சிநாதனின் தந்தை அவரது செயல் பிரமாணர்களுக்கு எதிரானது எனக் கருதி உடலை வாங்க மறுத்துவிட்டார்.[15] இவரின் உடல் பின்னர் பாளையங்கோட்டை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.[16] இவரது சட்டைப் பையில் ஒரு கடிதம் காணப்பட்டது, அதில் அவர் ஆங்கிலேயர்கள் சனாதன தர்மத்தை அழிக்க முற்பட்டதாகவும், ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க தனது பங்கைச் செய்ததாகவும் கூறினார்.[5][12][17]

இந்தப் படுகொலையானது தென்னிந்தியாவில் இந்திய சுதந்திர இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும். மகாத்மா காந்தியால் பரப்பப்பட்ட மிதவாத இயக்கத்திற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஆதரித்த புரட்சிகர இயக்கத்தின் எழுச்சியை இது ஆதரித்தது.[18] ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது தென்னிந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட முதல் மற்றும் கடைசி பிரித்தானிய உயர் அதிகாரி ஆஷ் ஆவார்.[5]

Remove ads

கௌரவிப்பு

Thumb
மணியாச்சி தொடருந்து நிலையப் பெயர்ப்பலகை

வாஞ்சிநாதன் ஆஷை சுட்டுக் கொன்ற தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் இவரது நினைவாக வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டது.[2] 2010 ஆம் ஆண்டு, தமிழக அரசு செங்கோட்டையில் இவரின் பிறந்த இடத்தில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது.[19] இந்த நினைவிடம் 2013 இல் திறக்கப்பட்டது.[20] பல தெருக்களும், உள்ளாட்சிகளும் இவரது பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.[21][22]

சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் திரைப்படமான கப்பலோட்டிய தமிழன் (1961) இல், வாஞ்சிநாதனின் வாழ்க்கைச் சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.[23]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads