போசளர் கட்டிடக்கலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
போசளர் கட்டிடக்கலை கட்டிடக்கலை போசளர்களின் கற்கோவில் கட்டிடக்கலையாகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டுக்கும், பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய போசளப் பேரரசுக் காலத்தில் வளர்ச்சியடைந்தது. இப்பாணியைச் சேர்ந்த கோவில்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுக்கு ஏற்ற மிக மென்மையான சோப்புக்கற்களால் கட்டப்பட்டுள்ளன. போசளர் கட்டிடக்கலையின் மாட்சியை பேலூர், ஹளபீடு, மற்றும் சோமநாதபுரம் ஆகிய ஊர்களில் காணலாம். இப்பாணியைச் சார்ந்த கட்டிடங்களுள் பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், ஹளபீட்டில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோயில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவர் கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றைவிட போசளர் கட்டிடக்கலையின் பிற எடுத்துக்காட்டுகளை பேளவாடி, அம்ருதபுரம், ஹோசஹோளலு, நுக்கஹள்ளி ஆகிய இடங்களிலுள்ள கோயில்களிற் காணலாம். ஹோய்சாலக் கட்டிடக்கலையில், இந்திய-ஆரியக் கட்டிடக்கலையின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. எனினும் திராவிடக் கட்டிடக்கலையின் தாக்கம் இதில் குறிப்பிடத் தக்க அளவில் உள்ளது.

போசளப் பேரரசுக் காலத்திய சமூக, பண்பாடு மற்றும் அரசியல் நிகழ்வுகள், தீவிரமான கோவிற் கட்டிடப் பணிகளுக்குக் காரணமாக அமைந்தன. கர்நாடகக் கோயிற் கட்டிடக்கலை மரபில் ஏற்பட்ட மாற்றங்கள் அக்காலத்தில் வைணவ மற்றும் வீரசைவத் தத்துவங்களைச் சார்ந்த சமயங்களின் வளர்ச்சியைப் பிரதிபலித்தன எனலாம். அதே நேரத்தில் ஹோய்சாலப் பேரசின் படை பலத்தின் வெளிப்பாடாகவும் இது அமைந்தது. அவர்களை முன்னர் அடக்கி வைத்திருந்த மேலைச் சாளுக்கியரைக் கலைத்துறையிலும் வெல்லவேண்டும் என்ற விருப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஹோய்சாலர் மேலைச் சாளுக்கியரின் பிடியிலிருந்து விடுபடமுன்னர், அப்பகுதியின் கட்டிடக்கலையில் மேலைச் சாளுக்கியக் கட்டிடக்கலையின் தாக்கம் பெருமளவில் காணப்பட்டது. பிற்காலக் கோயில்களில், சாளுக்கியக் கலையின் சில அம்சங்கள் தொடர்ந்து இருந்தாலும், போசள மரபுக்குச் சிறப்பியல்பான பல அலங்காரங்களும், கூறுகளும் காணப்படுகின்றன. இன்றைய கர்நாடகத்தில் இக்காலத்தைச் சேர்ந்த ஹோய்சாலப் பாணிக் கோயில்கள் நூற்றுக்கும் மேல் காணப்படுகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை போசள மன்னர்களின் தாயகமான மலைநாடு பகுதியிலேயே உள்ளன.[1][2][3]
Remove ads
பிற இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads