அறந்தாங்கித் தொண்டைமான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறந்தாங்கித் தொண்டைமான்கள் என்பவர்கள் புதுக்கோட்டை பகுதியில் தனியரசராக ஆவுடையார் கோவில், அறந்தாங்கி, ஆலங்குடி தென்பகுதி, திருமயம் கீழ்ப்பகுதி வட்டங்களில் ஆட்சி செலுத்தும் அரசர்களாக விளங்கிவந்துள்ளனர். இவர்கள் கள்ளர் மரபைச் சேர்ந்தவர்கள்.[1] தமிழக அரச மரபினர் பலருக்கு நட்பாகவும், மேலாதிக்கத்தை ஏற்றும் ஆட்சி செய்தனர். அந்த வகையில் பாண்டியர் தொடர்பான சில தொண்டைமான்கள் உள்ளனர். இவர்களை பற்றிய 13 ஆம் நூற்றாண்டில் இருந்து அறியமுடிகிறது. புதுக்கோட்டை பகுதியில், விசங்க நாட்டில் இருந்த வளத்து வாழவிட்ட பெருமாள் தொண்டைமான் என்பவன் கி.பி. 1201 இல் இருந்தான் என்று தெரிகிறது. இவனே, அறந்தாங்கித் தொண்டைமான்களுள் மிகத் தொன்மை வாய்ந்தவன்.[2] குலசேகர தொண்டைமான் 1426 இல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார், அதில் பாலையூர் மக்களுக்கு புதிய வரிகளை விதிக்கமாட்டோம் என்று அறிவித்தார். 1453 இல் அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான் தனது மகனுக்கு வரிவிலக்கு இல்லாத நிலங்களை வழங்கினார்.[3] முதலில் தன்னை "அரசு" அல்லது "அறந்தாங்கியின் ஆட்சியாளர்" என்று அழைத்துக்கொண்டவர் ஏகப் பெருமாள் தொண்டைமான் ஆவார். இவருடைய மகன்கள் சிதம்பரநாதன், தீராவினை தீர்த்தான், ஆவுடைநாயனார் ஆவார்கள். இவர்களில் சிதம்பரநாதன் என்ற பொன்னம்பல நாத தொண்டைமான் (பொ.ஆ. 1514—1569) மிகவும் சக்திவாய்ந்தவராக விளங்கியவர். ஏழு நாளில் இலங்கையில் உள்ள சிங்களவர்களை வென்று அவர்களிடம் வரி வாங்கி வந்தார்.[3]
தஞ்சை நாயக்கர்கள் மேலாதிக்கத்தை ஏற்று இரகுநாத நாயக்கத் தொண்டைமான், அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான் என இருவர் இருந்தனர். இவர்கள் இருவரும் அறந்தாங்கி அரசுக்கு உரிமை வேண்டி தங்களுக்குள் போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.[4]
ஆண்டவராயா வணங்காமுடி தொண்டைமான் மகன் விசய அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான், தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களை ராயப்பத்தேவர் மகன் அந்தோணி முத்து தேவர் என்பவருக்கு 27.10.1759 இல் தன் நிலத்தை விற்பனை செய்துள்ளார். இவரே அறந்தாங்கி தொண்டைமான்களில் இறுதியாக அறியக்கூடியவர்.[4] இவர்களின் நேரடி வழிவந்தவர்கள் பாலைவனம் ஜமீன்கள் ஆவார்கள்.[5]
அறந்தாங்கி அரசு தொண்டைமானார் பெயர் பொறித்த 50 கல்வெட்டுகளில் பன்னிரண்டு கல்வெட்டுகளில் மட்டும் பாண்டியர், நாயக்கர் மேலாண்மையை குறிப்பிட்டுள்ளனர். ஏனைய கல்வெட்டுகள் "அறந்தாங்கி அரசு" என்ற பெயரிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. 17-ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களும், இவர்களின் கால்வழி வந்தவர்களே.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads