அலையாத்தித் தாவரங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்கள் (mangrove) எனப்படுபவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (Mangrove forest) எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்பதுடன், இவை ஆக்சிசன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப்பதாகவும், நிலநடுக் கோட்டுக்கு அண்மையாக இருக்கும், வெப்ப மண்டலம் (tropics), அயன அயல் மண்டலம் (subtropics) பகுதிகளிலேயே வளரும் என்றும் அறியப்படுகின்றது[1][2]. மிகவும் கடினமான, சூழலைத் தாங்கும் தன்மை கொண்ட ஒரு சில இனங்கள் மட்டுமே மிதவெப்ப மண்டலத்தில் வாழும் தன்மை கொண்டிருக்கின்றன[1]. இவற்றில் சிறிய செடி வகைகள் முதல், கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்களான 60 மீற்றர் உயரம்வரை வளரும் மரங்கள் வரை அடங்கும்[1]. இத் தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடலலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது[2].
Remove ads
தாவரங்கள் வளரும் இடத்தின் பெயர்கள்
ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.[3]
இத் தாவரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் இடத்தில் நீரானது மரங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், அதாவது வெள்ளம் நிறைந்திருக்கும் இடம்போன்று தோற்றம் தருவதனால், வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.
முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.[3]
இவை பொதுவாக கடலோரப் பகுதிகளில் காணப்படுவதுடன், இவை இருக்கும் இடங்களில், அலை அதிகமான கடல்நீரானது மரங்களினிடையே சென்று, அலைகள் குறையப்பெற்று, மிக மெதுவாக நகரும் ஆறுகள் போன்ற நீர்நிலையாக இருப்பதனால் இவை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கப்படும்[4].
Remove ads
இந்தியாவில் அலையாத்திக் காடுகள்
கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடாகும்.[5] தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும்.[சான்று தேவை] கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் காரங்குடி சதுப்பு நிலம் உள்ளது.
மேலும் குசராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.
Remove ads
இலங்கையில் அலையாத்திக் காடுகள்
இலங்கையின் கரையோரப் பகுதியில் கிட்டத்தட்ட 6000 – 7000 ஹெக்டயர் பரப்பு அலையாத்திக் காடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது. இவற்றில் மிகப் பெரிய அலையாத்திக் காடு, புத்தளத்தில் உள்ள குடாப்பகுதியைச் சார்ந்து அமைந்துள்ளது. இது 3385 ஹெக்டயர் பரப்பை உள்ளடக்கியுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, மாவட்டங்களிலும் இவ்வகையான அலையாத்திக் காடுகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. காலி மாவட்டம் பெந்தோட்ட பகுதியிலும் அலையாத்திக் காடு உள்ளது. இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள, இந்தியப் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள பலபிட்டிய என்னும் இடத்தில், மதுகங்கா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இவ்வகையான அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன[6]
படங்களின் தொகுப்பு
- இலங்கையில் மதுகங்கா ஆற்றோரமான அலையாத்திக் காடுகள்
- அலையாத்திக் காட்டு மரங்களின் உள்பகுதி
- அலையாத்திக் காடுகளை அண்டி வாழும் மனிதன்
- மதுகங்கா ஆற்றில் அலையாத்திக் காடுகளைக் கொண்ட தீவுத் திடல்கள்
- அலையாத்திக் காடுகளை அண்டி வாழும் மனிதன்
- அலையாத்திக் காட்டு மரம் செடிகளால் அமைக்கப்பட்டுள்ள குகை போன்ற அமைப்பு
- அலையாத்திக் காட்டு குகைபோன்ற அமைப்பு ஆற்றில் திறக்கும் இடம்
- அலையாத்திக் காட்டு குகை போன்ற அமைப்பின் வாசல்
- அலையாத்தித் தாவரத்தின் வேர்கள் நீருக்கு மேலேயும், கீழேயும் தெரிவதைக் காட்டும் படம்
- அலையாத்தித் தாவரத்தில் வித்துக்கள், தாய்மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே முளைத்தலைக் காட்டும் படம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads