எ. சா. ராஜசேகர்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எடுகூரி சந்தின்டி ராஜசேகர ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందింటి రాజశేఖరరెడ్డి, ஜூலை 8, 1949 - செப்டம்பர் 2, 2009) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்திய அரசியல்வாதியாகவும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்திய மக்களவைக்கு நான்கு முறையும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நான்கு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009, செப்டம்பர் 2 இல் உலங்கு வானூர்தி ஒன்றில் செல்கையில் நல்லமாலா என்ற காட்டுப் பகுதியில் இவரது வானூர்தி காணாமல் போனது. பலத்த தேடுதலின் பின்னர் செப்டம்பர் 3 காலையில் கர்னூலில் இருந்து 40 கடல் மைல் தூரத்தில் ருத்திரகொண்டா மலை உச்சியில் வானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது[1][2][3].
Remove ads
பிறப்பும் இளமையும்
இராஜசேகர ரெட்டி, ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த புலிவெந்துலா மாவட்டத்தில் 1949ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையார் ஒய்.எஸ்.ராஜா ரெட்டி, தாயார் ஜெயம்மா. 1958-இல் ராஜா ரெட்டி ஒப்பந்தத் தொழில் நிமித்தமாக கர்நாடகா மாநிலம் பெல்லாரி செல்ல, ராஜசேகர ரெட்டி, அங்கே செயிண்ட் ஜான் பள்ளியில் உயர்கல்வியை முடித்தார். அதன் பிறகு விஜயவாடா லயோலா கல்லூரியில் இளங்கலை முதலாண்டில் சேர்ந்தார். பிறகு குல்பர்கா பல்கலைக்கழகத்தில் எம். ஆர். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை (1966 – 1972) மேற்கொண்டார். மருத்துவப் படிப்பினை முடித்த இவர் திருப்பதி எஸ். வி. மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றினார். எம். ஆர். கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராகவும், எஸ். வி. கல்லூரியின் பயிற்சி மருத்துவர்கள் சங்கத் தலைவராகவும் இருந்தார்.
Remove ads
கல்விப் பணி
கடப்பா மாவட்டத்தில் தன்னுடைய மருத்துவப் பணியைத் தொடங்கிய இராஜசேகர ரெட்டி சில ஆண்டுகள் அங்கே இருந்தார். இவருடைய பிறந்த ஊராகிய புலிவெந்துலாவில் இவருக்காக இவருடைய தந்தையார் கட்டிய மருத்துவமனை இன்னும் உள்ளது. கல்விப்பணிக்காக இவருடைய குடும்பம் புலிவெந்துலாவில் தொடங்கி நடத்தி வந்த தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் கலைக்கல்லூரி இரண்டும் பின்னாளில் லயோலா கல்விக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்றும் புலிவெந்துலா அருகில் சிம்மாத்ரிபுரம் என்கிற ஊரில் ஓர் இளநிலைக் கல்லூரி (JUNIOR COLLEGE) இவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
Remove ads
அரசியல் வளர்ச்சி
1978-ல் இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடத் தொடங்கினார். புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக ஆறு முறை தேர்தல்களில் வென்றார். 1980 ஆம் ஆண்டுமுதல் 1983 வரை மாநில நல்வாழ்வு மற்றும் கல்வி அமைச்சகப் பொறுப்புகளை வகித்தார். 1983 முதல் 1985 வரையிலும் மாநில காங்கிரஸின் தலைவராக இருந்தார். அதன் பின் மத்திய அரசியலுக்குச் சென்ற இவர், கடப்பா பாராளுமன்றத் தொகுதியில் நான்கு முறை (1989, 1991, 1996, 1998) தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி மாநில காங்கிரஸ் தலைவராக 1998-ல் பொறுப்பேற்றார். (2000 வரையிலும் இந்தப் பதவியை வகித்தார்). 1999 முதல் 2004 வரை மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அந்த காலகட்டத்தில் இவர் மேற்கொண்ட 1400 கிலோமீட்டர் நடைப்பயணம் இவருடைய அரசியல் செல்வாக்கினைப் பெருமளவுக்கு உயர்த்தியது. மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகள் அனைத்துக்கும் சென்று, அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் காங்கிரசை வெற்றி பெறச் செய்து முதல்வராகப் பொறுப்பேற்றார். 2009 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இவருடைய தலைமையில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற இரண்டாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
சாதனைகள்
- எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போதே துங்கபத்ரா ஆற்றின் கிளைக்கால்வாய்த் திட்டத்தில் தன் புலிவெந்துலா பகுதி நலம் பெறப் போராடி வென்றார். இராயலசீமா அனல்மின்நிலையம், முத்தனூரில் அமைவதற்கான போராட்டங்களில் பங்கு வகித்தார். புரோடத்தூரின் பால்வளத் தொழில் முன்னேற்றத்தில் இவருக்குப் பெரும்பங்கு உள்ளது.
- தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த முதல் தலைவர் என்கிற சாதனை இவருடையது.
- முதல்வராக இவர் செய்த பல்வேறு சாதனைகளில் முதன்மையாக மதிக்கப்படும் மூன்று சாதனைகள்: இரண்டு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசித் திட்டம், ‘ஆரோக்கியஸ்ரீ’ எனப்படும் ஏழை எளியோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உழவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் ஆகியவை. இவை தவிர, ‘இந்திரம்மா இல்லு’ (ஏழைகளுக்கு குறைந்த முதலீட்டில் வீடு கட்டிக் கொள்ள உதவும் திட்டம்), ‘ஜலயக்ஞம்’ (மாநிலம் தழுவிய நீர்ப்பாசனத் திட்டம்), ‘பவள வட்டி’ (சிறு தொழில் முனைவோர்க்கான 3% வட்டியில் கடன்), நெசவாளர்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி, பிற்படுத்தப்பட்டோருக்கான இலவச கல்லூரிக் கல்வி என்பன போன்ற எண்ணற்ற பொதுநலத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்தார்.
Remove ads
குற்றச்சாட்டுகள்
செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்தாலும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலும் இவருடைய பெயர் அடிபட்ட வண்ணம் இருந்ததும் குறிப்பிடத் தக்கது. சந்தூர் மின் நிறுவனம், ஜகாத்தி பதிப்பகம், பாரதி சிமிண்ட் கார்ப்பரேசன் போன்ற நிறுவனங்கள் மூலம் இவருடைய குடும்பம் வரம்புமீறி சொத்துக்கள் சேர்த்ததாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டார். வர்த்தக உலகத்தை உலுக்கிய சத்யம் கணினி நிறுவன ஊழலிலும் இவருக்குத் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு நிலவியது. ரகுராம் சிமிண்ட் நிறுவனத்துக்காக (அதில் இராஜசேகர ரெட்டியின் மகன் ஓர் இயக்குநர்) 487 ஏக்கர் நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் இவர் மீது அரசியல் குற்றச்சாட்டு இருந்தது. 2007ஆம் ஆண்டு கம்மம் காவலர் துப்பாக்கி சூட்டில் எட்டுபேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று இவர் பதவி விலக வேண்டும் என்கிற குற்றச்சாட்டு வலுப்பெற்றிருந்தது.
Remove ads
குடும்ப வாழ்க்கை
இவருடைய மனைவி பெயர் விஜய லட்சுமி. இவருடைய மகன் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி ஓர் அரசியல்வாதி. இவருடைய மகள் சர்மிளா.
இறப்பு
இராஜசேகர ரெட்டி, 2009, செப்டம்பர் 2 ஆம் நாள் சித்தூர் சென்று அங்கு பின் தங்கிய நிலையில் உள்ள மக்களைச் சந்தித்துக் குறைகள் கேட்டறியும் திட்டத்துடன் காலை 8 மணி அளவில் உலங்கு வானூர்தியில் கிளம்பினார். அந்த வானூர்தி சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு இழக்க, காலை ஒன்பதரை மணி முதலாகவே அதனைத் தேடும் பணி தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டை 24 மணிநேரம் தொடர்ந்தது. மாநில அரசின் காவல் துறை, புலனாய்வுத் துறை, இராணுவத்தின் அதிநவீன வானூர்திகள், தொழில்நுட்பங்கள், கடற்படை, இஸ்ரோ ஆகிய அனைத்தின் ஒத்துழைப்புடனும் கடும் மழை, அடர்ந்த காடு ஆகிய இடர்களையும் மீறித் தொடர்ந்த வேட்டையின் இறுதியில் இராஜசேகர ரெட்டி பயணித்த உலங்கு வானூர்தி செப்டம்பர் 3 ஆம் நாள் காலை எட்டரை மணிக்கு உடைந்த நிலையில் கர்நூல் மாவட்ட நல்லமலா காட்டின் ருத்ரகொண்டா குன்றின் மீது கண்டறியப்பட்டது. இராஜசேகர ரெட்டி, அவருடன் பயணம் செய்த இரண்டு விமான ஓட்டிகள் (எஸ். கே. பாட்டியா, எம். எஸ். ரெட்டி), அவருடைய தனிச் செயலாளர் (பி. சுப்பிரமணியன்), பாதுகாப்பு உயர் அதிகாரி (ஆ. எஸ். சி. வெஸ்லி) ஆகிய ஐவரின் உயிரற்ற உடல்கள் கருகிய நிலையில் கண்டறியப்பட்டு ஹைதராபாத் கொண்டுவரப்பட்டன. இராஜசெகர ரெட்டியின் உடல், அரசு மரியாதையுடன் செப்டம்பர் 4 ஆம் நாள் இறுதிச் சடங்குகளுக்குப் பின் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
