கட்டுச்சோறு

பயணங்களின்போது எடுத்துச் செல்லும் உணவு From Wikipedia, the free encyclopedia

Remove ads

கட்டுச்சோறு என்பது பயணத்தின் போது வழியில் உண்ண கொண்டு செல்லப்படும் உணவாகும். இது விரைவில் கெடாத தன்மைக் கொண்டதாக இருக்கும். கட்டுச்சோறுக்கு கட்டமுது, கட்டுச்சாதம், வழிநடை உணவு, வழிச்சோறு, பொதிச்சோறு போன்ற பெயர்களும் உண்டு.[1] பயணத்தின்போது வழியில் நீர்நிலையுள்ள பகுதியில் மரநிழலுள்ள குளிர்ச்சியான இடத்தில் இளைப்பாறி கட்டுச்சோற்றை பிரித்து உண்பர்.

வரலாறு

கட்டுச்சோறு என்பது தமிழர் வாழ்வில் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிந்தாமணி நிகண்டில் தோட்கோப்பு என்ற சொல் கட்டுச்சோறு என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.[1] திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயிலுக்கு பயணம் மேற்கொண்ட திருநாவுக்கரசு நாயனாருக்கு அந்தணர் வடிவில் வந்த சிவன் அவருக்கு கட்டுச்சோறை அளித்ததாக ஒரு கதை உள்ளது.[2] அரிசி பயன்பாடு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவலான பயன்பாட்டுக்கு வரும் முன்பு கட்டுச்சோறில் சிறுதானியங்கள் முதன்மை இடத்தை வகித்தன.[1] சிறுதானித்தை உணவாக பக்குவப்படுத்தி துணியில் மூட்டை கட்டி பயணத்தின்போது கொண்டு செல்லபட்டது (வட இந்தியர்கள் பயணத்தின்போது சப்பாத்தியை துணியில் கட்டி எடுத்துச் செல்லும் பழக்கம் தற்போதும் உள்ளது). அரிசி பயன்பாடு பரவலான பிற்காலத்தில் கட்டுச்சாதமாக புளியோதரையை எளிதில் கெடாதவாறு தயாரித்து எடுத்துச் சென்றனர். குடும்பத்தில் அனைவருக்கும் சேர்த்து இவற்றை துணியிலேயே கட்டி எடுத்துச் சென்றனர். பிற்காலத்தில் நாகரீகம் கருதி தனித்தனியக உணவு கட்டும் பழகத்தினால் வாழை இலை, தையல் இலை போன்றவற்றில் வைத்து கட்டி எடுத்துச் செல்லும் பழக்கமும் உருவானது. அதுவே பின்னர் தூக்குச்சட்டியில் கொண்டு செல்லும் பழக்கமுமாக வந்தது.

Remove ads

கட்டுச்சோறு தயாரிக்கும் முறை

கட்டுச்சோறு தயாரிக்கும் முறை ஒவ்வொரு பகுதியிலும் சில மாறுபாடுகளுடன் இருந்தது. பயணம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு கட்டுச்சோறு தயார் செய்யப்படும். பொதுவாக சம்பா அரிசி தண்ணீரை நன்கு உறிந்து விடும் என்பதால் அதைக் கட்டுச்சோறுக்கு பயன்படுத்துவது உண்டு. சோற்றில் ஊற்றும் குழம்புக்கு புளிக்காய்ச்சல், புளித்தண்ணி, புளியானம் என்ற பெயர்கள் வழங்கப்பட்டன. மிளகாய் வற்றலை வறுத்து, அதைப் புளித்தண்ணீரில் பிசைந்து, கறிவேப்பிலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைத் தட்டிப்போட்டு, கொதி வந்தும் வராத சமயத்தில் இறக்கி புளித்தண்ணீர் தயாரிக்கப்படும். இந்த புளித்தண்ணீரில் சோற்றை இட்டு கிளறி புளிச்சோறு தயாரிக்கப்படும். கூடுதல் நேரம் கெடாமல் இருக்க எண்ணையை கூடுதலாக சேர்ப்பது உண்டு.[3] கட்டுச்சோற்றை காடு, மலை போன்றவற்றின் வழியாக கொண்டு செல்லும்போது தீய ஆவிகள் போன்றவை அண்டாமல் இருக்க கட்டுச்சோற்றுடன் அடுப்புக்கரியை வைப்பர்.[1] சில பகுதிகளில் அடுப்புக் கரியுடன் காய்ந்த மிளகாய், எருக்கு கொழுந்து, துடைப்பக் குச்சி, உப்பு போன்றவற்றை வைக்கும் பழக்கமும் உண்டு.

Remove ads

பரவலர் பண்பாட்டில்

தாகத்துடனும், பசியாலும் வந்த சுந்தரருக்கும், அவருடன் வந்த அடியார்களுக்கும் சிவபெருமான், வேதியர் வடிவில் தோன்றி, பெரிய பந்தல் ஏற்பாடு செய்து அவர்களை களைப்பாறச் செய்ததோடு, குளிர்ந்த நீரையும், பசி தீர பொதி சோற்றினையும் தந்தருளினார். இதனை நினைவுகூரும் வகையில் இக்கோயிலில் சுந்தரருக்கு பொதிசோறு (கட்டுச்சோறு) வழங்கும் விழா ஒவ்வோராண்டும் நடைபெறுகிறது. [4]

பிராமணர் போன்ற சில சாதியினரின் திருமணங்களில் திருமணத்துக்கு வந்து நிகழ்வுகளை முடித்துக் கொண்டு செல்லும் உறவினர்களுக்கு திருமண வீட்டார் கட்டுச்சாதத்தை கட்டிக் கொடுத்து அனுப்பும் வழக்கம் தற்போதும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads