கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில்

From Wikipedia, the free encyclopedia

கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில்map
Remove ads

கப்பித்தாவத்தை கைலாசநாதர் சுவாமி கோயில் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான மருதானையில் கப்பித்தாவத்தையில் அமைந்திருக்கிறது.

விரைவான உண்மைகள் கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில், ஆள்கூறுகள்: ...

இவ்வாலயம் வரலாற்றுப் பழமை வாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து வசித்து வணிகத்தில் ஈடுபட்ட திருவிளங்க நகரத்தார் என்ற அழைக்கப்படும் வணிக வைசியச் செட்டியார்களால் இவ்வாலயம் கட்டப்பட்டது. அக்காலத்தில் இக்கோயில் முற்றிலும் நீரினால் சூழப்பட்டு இயற்கைச் சூழலில் இந்திய ஆலயங்களை ஒத்ததாகவும் அமையப் பெற்றிருந்தது.[1] புராதன சிவன் கோயிலின் சிவ சின்னங்களையும் சிவனின் சந்நிதி, அம்மன் சந்நிதி ஆகியவற்றின் அடித்தளத்தில் பழைமை வாய்ந்த கருங்கற்களையும் இங்கு காணக் கூடியதாக உள்ளது. அம்மன் சந்நிதியில் உள்ள கோமுகியும் பழைய ஆலயத்தின் சின்னமாகத் தெரிகிறது.[1]

Remove ads

ஆலய வரலாறு

இலங்கையில் ஒல்லாந்தர்களுடைய ஆட்சியில் அந்நிய வாணிய செட்டியார் இங்கு வந்த சேர்ந்தனர். டச்சுக்காரர்கள் கரையோரப் பிரதேசங்களில் காலூன்றிக்கொண்டு தமது வணிகத்தைக் கவனித்து வந்தனர். கொழும்பு கப்பித்தாவத்தையிலுள்ள “கில்மபூதத்தை” அல்லது “கதுறுகாவத்தை” என்ற இடத்தில் வந்திறங்கிய வணிகர்கள் அதனைத் தங்கள் வணிக மையமாகக் கொண்டார்கள். இங்கு தான் கருவாப்பட்டை, மிளகு, கொப்பரா, தேங்காய், எண்ணெய், கயிறு முதலியவைகளின் பண்டகசாலைகள் இருந்தன. ஓல்லாந்த வியாபாரிகள் கருவாப்பட்டையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். அவ்விடம் இருந்த பண்டகசாலைகள் ஒல்லாந்தரால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியால் பார்வையிடப்பட்டன. திருவிளங்க நகரத்தார் என்ற வாணிய செட்டிமார் இங்கு வியாபாரம் செய்யத் தொடங்கிய காலத்தில் இவ்விடத்தில் மேற்பார்வையாளராக இருந்த ஒல்லாந்த அதிகாரியைக் “கப்டன்” என்ற அழைத்தார்கள். அவரின் நிர்வாகத்தில் இருந்த இடம் முழுவதையும் “கேப்டன் கார்டன்ஸ்” (Captain Gardens) என்ற பெயரிட்டார்கள். அதுவே இன்று கப்பித்தாவத்தை எனப்படுகிறது.

உள்நாட்டு விளை பொருள்களெல்லாம் பாதைகள் மூலம் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு முதலிய இடங்களிலிருந்து கப்பித்தாவத்தைக்கே வந்து சேரும். இவ்விடம் ஓர் உள்நாட்டு துறைமுகம் போன்றது. திருவனந்தபுரம், நாகப்பட்டினம், காரைக்கால், கோவா முதலிய இடங்களுக்கு இங்கிருந்து தான் மேற்படிப் பொருட்களை ஏற்றுமதி செய்யப்படும். இங்கு வணிகம் செய்துவந்த வணிக வைசியச் செட்டியார்கள். அவர்களிருந்த தோட்டத்தில் மாலை வேளைகளில் ஒன்று சேர்ந்து ஒரு மரத்தின் கீழ் பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை வணங்கி வந்தனர். கொழும்பு மாநகரில் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செட்டியார்களிடமிருந்து கோயிலுக்காக நன்கொடை பெற்று 1783 ஆம் ஆண்டில் வீரபத்திரன் செட்டியாருக்குச் சொந்தமான இடத்தில் சிவன் கோயிலைக் கட்ட அத்திவாரமிடப்பட்டது. வீரப்பத்திரன் செட்டியாரே சிவாலயம் கட்ட நிதி திரட்டும் பொறுப்பும் ஏற்று அக்கோயிலைக் கட்டும் திருப்பணியையும் ஏற்றுக்கொண்டார். அச்சிவன் கோயிலே இன்று ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோவில் என அழைக்கப்படுகிறது. சைவ விதிப்படி குடமுழுக்கு முதலியன செய்யப்பட்டது.

1828ல் வீரபத்திரன் செட்டியார் காலமானார். அவர் சகோதரனின் மகன் சிதம்பரம் ராமையா செட்டியார் ஆலய நிருவாகத்தை நடத்தி வந்தார். வைசியச் செட்டியார்களிடம் நன்கொடை பெற்று அப்பணத்தைக்கொண்டு ஆலயத்துக்கு பக்கத்து நிலங்களையும் வேறு இடங்களில் தென்னந் தோட்டம் முதலியவற்றையும் வாங்கினார். அங்கே முன் இருந்த மலையாள மொழிபெயர்ப்பாளரின் வம்சாவழியினரின் காணிக்களையும் ஆலயத்துக்காக பொருள் கொடுத்து வாங்கினார்.

Remove ads

அறங்காவலர்

1851 ஆம் ஆண்டில் திருவிளங்க நகரத்தார் ஒன்று சேர்ந்து கோயிலின் நித்திய நைவேத்திய பூசைகளை நிறைவேற்ற அறங்காவலரைத் தெரிவு செய்தனர். முத்தையா குமாரசாமி செட்டியார், முத்துவீரன் தூண்டி செட்டியார், கல்யாண குப்பமுத்து செட்டியார், சிதம்பர காளியப்பா செட்டியார், சுப்பன் கோவிந்தன் செட்டியார் ஆகியோர் முதல் நியமனம் பெற்ற அறங்காவலர் ஆவர்.

இவர்களுக்குப் திருவிளங்க நகரத்தார் (வாணிய செட்டியார்) சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்து அறங்காவல சபையினர் கோவிலைப் பொறுப்பேற்று நடத்தி வந்தனர். 1938-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நிர்வாகம் தடைப்பெற்றிருந்தது.

Remove ads

குடமுழுக்குகள்

இதன் பின் பி.சி. கதிர்வேல் செட்டியார் தலைமையில் 1949-ம் ஆண்டு கைலாசநாதப் பெருமானுக்கும் கருணாகடாட்சி அம்மனுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் சூலை 15, 1983 இல் குடமுழுக்கு எஸ். இராஐரட்ணம் செட்டியார் தலைமையிலும், 1994 ஆகத்து 24 இல் நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலும், 2010 சூன் 4 இல் நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலும் குடமுழுக்குகள் நடைபெற்றன.

இறைவன்

  • சிவன் நாமம் - கைலாசநாதர்
  • இறைவி நாமம் - கருணாகடாட்சி
  • தலவிருட்சம் - வில்வம்
  • தீர்த்தம் - கருணாகடாட்சம்

திருவிழாக்கள்

  • சிவன் திருவிழா ஆவணி மாதத்தில் 21 நாட்கள் இடம்பெறுகின்றது.
  • அம்மன் திருவிழா மாசி மாதத்தில் 10 நாட்கள் இடம்பெறுகின்றது.
  • கண்ணகி அம்மன் திருவிழா வைகாசி மாதத்தில் 10 நாட்கள் இடம்பெறுகின்றது.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads