காரைக்கால்

இது புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்ட தலைநகரும் மற்றும் தேர்வு நிலை நகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காரைக்கால் (ஆங்கிலம்:Karaikal), இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட தலைநகர் ஆகும். இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர். காரைக்கால், ஏனாம், மாகி ஆகியவை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்கள். புதுச்சேரி மாவட்டம் மட்டும் பொருளாதாரத்தில் உயர்த்தவை.

விரைவான உண்மைகள்

காரைக்கால், சென்னை மாநகரில் இருந்து 310 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதி ஆகும். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் கடலூரின் அருகாமையிலுள்ள புதுச்சேரி நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன் தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

Remove ads

வரலாறு

காரைக்கால் மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த தூப்ளே, காரைக்காலைச் சுற்றியுள்ள சில ஊர்களை விலைக்கு வாங்கி இவ்வூரை விரிவாக்கம் செய்தார். இதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் (இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்). இவருடைய புத்திக்கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.

Remove ads

நிலவியல்

இருப்பிடம்

காரைக்கால் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும், இது முன்னர் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியாக இருந்தது. புதுச்சேரி, யானம் மற்றும் மாஹே போன்ற பிற முன்னாள் பிரஞ்சு பிரதேசங்களுடன் சேர்ந்து புதுச்சேரி ஒன்றியத்தை உருவாக்குகிறது.

பிரிவுகள்

காரைக்கால் நகரம் நாகப்பட்டினத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) வடக்கிலும் மற்றும் தரங்கம்பாடியிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்கள்) தெற்கேவும் அமைந்துள்ளது. இது காரைக்கால் மாவட்ட தலைமையகம் ஆகும்.

காரைக்கால் மண்டலம் காரைக்கால் நகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களால் உருவாக்கப்பட்டது.

அவை:

  • நெடுங்காடு
  • கோட்டுச்சேரி
  • நிரவி
  • திருநள்ளாறு
  • திருமலைராயன் பட்டினம்
  • பூவம்
  • வரிச்சிக்குடி

நதிகள்

குடமுருட்டி, அரசலாறு, திருமலைராயன் ஆறு, வீரசோழனார் மற்றும் விக்ரமனார் ஆகியவை காவேரி ஆற்றின் முக்கிய கிளை நதிகள் ஆகும். காரைக்கால் பகுதி வழியாக அரசலாறும் அதன் கிளைகளும் பரவியிருந்தாலும், குடமுருட்டி மற்றும் வீரசோழனார் ஆகியவற்றின் நீர்த்தேக்கங்களும் அப்பகுதியின் பாசன தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

Remove ads

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர் ஒரு நாள், கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட, அந்த மாம்பழத்தினை மீண்டும் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.இவருக்கென காரைக்கால் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.

மாங்கனித் திருவிழா

காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் அம்மையார் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2009 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 227589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். காரைக்கால் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்கால் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக‌ குடிமக்களில் சில‌ ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.

Remove ads

நகரமைப்பு

காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஒரு சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். துறைமுக நகரான‌ காரைக்கால் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், நூற்பாலைகள், டைல்ஸ், பாலிதீன் மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் நிறைந்த நகரம். பக்தர்கள் குவியும் திருநள்ளாறு காரைக்காலை ஒட்டிய திருத்தலம்.

Remove ads

காரைக்கால் துறைமுகம்

நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது. தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுகமாகும்.

காரைக்கால் விமான நிலையம்

காரைக்காலில் கட்டமைக்கப்பட்டு 2014இல் நிறைவேற்றப்பட உள்ள இந்த விமான‌ நிலையம், இந்தியாவில் முற்றிலுமாகத் தனியார் முதலீட்டில் கட்டமைக்கப்படும் முதல் விமான‌ நிலையமாகத் திகழும். பொதுப் பயன்பாட்டிற்கான தனியார் துறை கட்டமைப்பாக இதனை நிறைவேற்றிட குடியியல் பறப்பு அமைச்சகம் பெப்ரவரி 2011இல் ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தால் இயக்கப்பட உள்ளது. இந்த விமான‌ நிலையம் காரைக்காலுக்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள பல சமயத் திருத்தலங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

Remove ads

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டில், காரைக்காலில் 227,589 மக்கள் இருந்தனர், இதில் ஆண் மற்றும் பெண் முறையே 111,492 மற்றும் 116,097 பேர் இருந்தனர். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்கால் மக்கள் தொகை 170,791 ஆக இருந்தது, இதில் ஆண்களின் எண்ணிக்கை 84,487 மற்றும் பெண்கள் 86,304 பேர். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் வெளியிடப்பட்ட முதல் தற்காலிக புள்ளிவிவரங்கள், காரைக்கால் மாவட்டத்தின் அடர்த்தி சதுர கிலோ மீட்டர்க்கு 1,275 பேர் எனக் காட்டுகிறது. 2011 ஆம் ஆண்டில் காரைக்காலின் சராசரி கல்வியறிவு 81.94 ஆக இருந்தது.

காரைக்கால் யூனியன் பிரதேசமாக கோரிக்கை

காரைக்கால் யூனியன் பிரதேசப் போராட்டம் குழு 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது காரைக்காலுக்கு தனி யூனியன் நிலைப்பாட்டைக் கோருகிறது. குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அரசியலை வழங்கும் சமயத்தில் யூனியன் நிலைப்பாட்டைக் காரைக்காலுக்கு கொடுக்க கோருகிறது. காரைக்காலின் பொருளாதார பின்தங்கிய நிலை, புதுச்சேரி மீது மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவாக இருந்து வருகிறது.

சுற்றுலாத் தகவல்கள்

காரைக்காலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள்:

  1. காரைக்கால் அம்மையார் கோவில்
  2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்(சனீஸ்வர ஸ்தலம்),காரைக்கால்
  3. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை - காரைக்காலிலிருந்‌து 14 கி.மீ
  4. நாகூர் தர்கா - காரைக்காலிலிருந்‌து 15 கி.மீ
  5. வேளாங்கண்ணி மாதா திருத்தலம் - காரைக்காலிலிருந்‌து 28 கி.மீ
  6. சிக்கல் சிங்கார வேலவர் ஆலயம் - காரைக்காலிலிருந்‌து 25 கி.மீ
  7. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் - காரைக்காலிருந்து 20 கி.மீ
Remove ads

கல்வி நிறுவனங்கள்

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்கால் மக்களின் கல்வியறிவு 83% ஆகும். காரைக்கால் பிராந்தியத்தில் ஆரம்ப நிலை முதல் கல்லூரி நிலை வரை கல்வி நிறுவனங்களின் பரந்த நெட்வொர்க் உள்ளது.

ஜிப்மர் வளாகம் காரைக்காலில் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மாணவர்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரி 2010 இல் காரைக்காலில் நிறுவப்பட்டது. மாணவர்கள் JEE MAIN நுழைவு தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு தேர்வுசெய்யப்படுவர். அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரி, பாரதியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி போன்றவை காரைக்காலில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள். பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே வேளாண் நிறுவனம் ஆகும்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads