கிரிமிய கானரசு
ஏப்ரல் 1783 வரை கிரிமிய மூலந்தீவில் நீடித்த முன்னாள் அரசு From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரிமிய கானரசு என்பது 1441 இல் இருந்து 1783 வரை இருந்த ஒரு துருக்கிய கானரசு ஆகும். தங்க நாடோடிக் கூட்டப் பேரரசில் இருந்து தோன்றிய துருக்கிய கானரசுகளிலேயே இது தான் நீண்ட காலத்துக்கு நீடித்தது. இது 1441 இல் ஹசி முதலாம் கிரேயால் நிறுவப்பட்டது. கிரிமிய கான்கள் தோகா தெமூரின் வழித்தோன்றல்கள் ஆவர். தோகா தெமூர் செங்கிஸ்கானின் பேரனும் சூச்சியின் பதிமூன்றாவது மகனும் ஆவார். அவர் செங்கிஸ்கானின் பேத்திகள் ஒருவரை மணமுடித்தார். இந்தக் கானரசு தற்கால உருசியா, உக்ரைன், உரோமானியா மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளில் அமைந்திருந்தது.
கெடிக் அஹமத் பாஷா தலைமையிலான உதுமானியப் படைகள் அனைத்து கிரிமிய தீபகற்பத்தையும் வென்று 1475 இல் அப்பகுதிகளை கானரசில் இணைத்தன. உருசிய-துருக்கி குகுக் கய்னர்கா ஒப்பந்தத்திற்கு பிறகு 1774 இல் இது ஒரு இறையாண்மை கொண்ட அரசியல் அமைப்பாக மாறியது. 1783 இல் இந்த கானரசு உருசிய பேரரசால் இணைத்துக் கொள்ளப்பட்டது. உருசியப் பேரரசின் இது டவுரிடா ஆளுநரகம் ஆனது. எனினும் பிரபலமான உருசிய வரலாற்றாளர் ஜைட்சேவ் இல்யா விலாடிமிரோவிச்சின் கூற்றுப்படி கிரிமிய கானரசானது அதன் வரலாறு முழுவதுமே சுதந்திரமான அரசாக இருந்தது.[1]
Remove ads
வரலாறு
நிறுவுதல்
தங்க நாடோடிக் கூட்ட பேரரசின் குறிப்பிட்ட சில இனங்கள் டெஷ்ட்-இ-கிப்சக்கில் (தற்கால உக்ரைன் மற்றும் தெற்கு உருசியாவின் கிப்சக் புல்வெளிகள்) தங்களது நாடோடி வாழ்க்கையில் இருந்து விலகி கிரிமியாவை தங்களது தாயகமாக ஏற்றுக் கொண்டபோது 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிரிமிய கானரசானது உருவானது. அந்த நேரத்தில் மங்கோலியப் பேரரசின் தங்க நாடோடிக் கூட்டமானது கிரிமிய மூலந்தீவை ஒரு உளூஸாக 1239 முதல் நிர்வகித்து வந்தது. அதன் தலைநகரம் கிரிம் (ஸ்டர்யி க்ரிம்) ஆகும். உள்ளூர் பிரிவினைவாதிகள் ஹசி முதலாம் கிரே என்கிற ஒரு செங்கிஸ்கானின் வழித்தோன்றலை தங்க நாடோடிக் கூட்ட அரியணைக்கு போட்டியாளராக வருமாறும் தங்களுக்கு கானாக இருக்குமாறும் அழைத்தனர். அவர்களது அழைப்பை ஹசி கிரே ஏற்றுக்கொண்டார். லித்துவேனியாவில் தஞ்சமடைந்திருந்த அவர் பயணம் மேற்கொண்டார். 1420 முதல் 1441 வரை அவர் நாடோடி கூட்டத்திற்கு எதிராக சுதந்திரத்திற்காக போர் புரிந்தார். ஆனால் 1449 இல் கானரசின் அரியணையை வெல்லும் முன்னர் அவர் பல உள்ளூர் எதிரிகளை வெல்ல வேண்டி இருந்தது. பிறகு அவர் தலைநகரத்தை கிர்க் எர் (தற்பொழுது பஹ்செசேராயின் பகுதியாக உள்ளது) நகரத்திற்கு மாற்றினார்.[2] இந்தக் கானரசானது கிரிமிய மூவலந்தீவு (தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை மற்றும் துறைமுகங்கள் ஜெனோவா குடியரசால் கட்டுப்படுத்தப்பட்டது தவிர மற்ற பகுதிகள்) மற்றும் அதை ஒட்டி இருந்த புல்வெளி பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
உதுமானியப் பாதுகாப்பு
ஹஸி முதலாம் கிரே இறந்த பிறகு அவரது பதவிக்கு வர அவரது மகன்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. அச்சமயத்தில் உதுமானியர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு ஹஸி முதலாம் கிரேயின் மகன்களில் ஒருவரான மென்லி முதலாம் கிரேயை அரியணையில் அமர வைத்தனர். மென்லி முதலாம் கிரே ஏகாதிபத்திய பட்டமான "இரண்டு கண்டங்களின் அரசன் மற்றும் இரண்டு கடல்களின் கான்களுக்கெல்லாம் கான்" என்பதை சூட்டிக்கொண்டார்.[3]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads