செனோவாக் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிகவும் அமைதிமிக்க செனோவாக் குடியரசு (இத்தாலியம்: Repubblica di Genova, இலிகுரியன்: Repúbrica de Zêna) வடமேற்கு இத்தாலியக் கடலோரத்தில் இலிகுரியாவில் 1005 முதல் 1797 வரை இறையாண்மையுடன் இருந்த நாடாகும்; 1347 முதல் 1768 வரை கோர்சிகா இதன் அங்கமாக இருந்தது. நடுநிலக்கடல் பகுதியில் பல்வேறு நிலப்பகுதிகள் இதன் கட்டுப்பாட்டில் இருந்தன.
இத்தாலிய இராச்சியத்தின் கீழ் செனோவா தன்னாட்சி பெற்றிருந்ததிலிருந்து துவங்கிய இவ்வரசு பிரான்சின் முதலாம் நெப்போலியன் கீழான முதல் பிரெஞ்சுக் குடியரசு கையகப்படுத்தியபோது முடிவுக்கு வந்தது. இதற்கு மாற்றாக இலிகுரியக் குடியரசு நிறுவப்பட்டது. 1768ஆம் ஆண்டு வெர்சாய் உடன்பாட்டுடன் கோர்சிகா பிரிந்தது. இலிகுரியன் குடியரசை 1805இல் முதலாம் பிரஞ்சு பேரரசு கைப்பற்றியது; 1814இல் நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு சிறிது காலத்திற்கு மீளவும் நிறுவப்பட்டது. ஆனால் 1815இல் சார்தீனியா இராச்சியம் இதனைக் கைப்பற்றியது.
1100க்கு முன்னதாக செனோவா தன்னாட்சி பெற்ற நகர அரசு நிலை பெற்றிருந்தது. புனித உரோமைப் பேரரசு மேற்பார்வையில் செனோவாவின் பேராயர் நகரத்தலைவராக விளங்கினார். இருப்பினும் உண்மையான அதிகாரம் நகர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கான்சுல்களின் வசம் இருந்தது. வெனிசு, பீசா, அமால்பி போன்று செனோவாவும் "கடல்சார் குடியரசுகள்" (Repubbliche Marinare) என்றழைக்கப்பட்டது; வணிகம், கப்பல் கட்டுதல் மற்றும் வங்கித்தொழில் இவற்றின் ஆதரவினால் நடுநிலக் கடல் பகுதியில் மிகுந்த வலிமையான கடற்படையை வைத்திருந்தது. செனோவாக் குடியரசில் தற்கால இலிகுரியா, பியத்மாந்து, சார்தீனியா, கோர்சிகா, நீசு நிலப்பகுதிகளும் திர்ரேனியக் கடலின் முழுக்கட்டுப்பாடும் இருந்தது. சிலுவைப் போர்களில் கலந்து கொண்டதால் மத்திய கிழக்கு நாடுகளிலும், ஏஜியன் கடற்பகுதியிலும் சிசிலியிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் செனோவாவின் குடிமைப்பகுதிகள் நிறுவப்பட்டன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads