கொந்தர்

From Wikipedia, the free encyclopedia

கொந்தர்
Remove ads

கொந்துதல் செய்பவர் கொந்தர் அல்லது குறும்பர் (Hacker) என அழைக்கப்படுவார்.[1] கொந்துதல் என்பது கணினியொன்றின் பலவீனங்களை அறிந்து அதனைத் தன்வசப்படுத்துதல் ஆகும்.[2] கணினிக் கொந்தர் எனப்படுபவர் கணினியொன்றிலுள்ள பலவீனங்களை அறிந்து அதனைத் தன்வசப்படுத்துபவர் ஆவார்.[3] கொந்தர்கள் தமது ஆதாயத்துக்காகவும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் சவாலுக்காகவும் கொந்துதல் செய்கிறார்கள்.

Thumb
வன்பொருளை அடிப்படையாகக் கொண்ட விசைப் பதிவுக் கருவி
Remove ads

வகைகள்

வெண்டலைப்பாக் கொந்தர்

வெண்டலைப்பாக் கொந்தர் என்பவர் தீய செயல்கள் புரிவதை நோக்கமாகக் கொள்ளாது கொந்துதல் செய்பவர் ஆவார்.[4] தமது சொந்தக் கணினி பாதுகாப்பானதா எனக் கொந்துதல் செய்து சரிபார்ப்பவரே வெண்டலைப்பாக் கொந்தர் ஆவார்.

கருந்தலைப்பாக் கொந்தர்

கருந்தலைப்பாக் கொந்தர் என்பவர் தனிப்பட்ட ஆதாயத்துக்காகக் கொந்துதல் செய்பவர் ஆவார்.[5]

சாம்பற் தலைப்பாக் கொந்தர்

சாம்பற் தலைப்பாக் கொந்தர் என்பவர் குறும்பர், கருந்தலைப்பாக் கொந்தர் ஆகியோரின் சேர்க்கை ஆவார். சாம்பற் தலைப்பாக் கொந்தர் ஒரு கணினியைக் கொந்துதல் செய்வதன் மூலம் அதன் நிருவாகிக்கு அக்கணினியின் பாதுகாப்பற்ற தன்மையை எடுத்துரைப்பார்.[6] அதே நேரம் அந்தக் கணினியைச் சீர் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட தொகையையும் பெற்றுக் கொள்வார்.

திறக்கொந்தர்

திறக்கொந்தர் என்பவர் கொந்துதலில் திறமையானவர் ஆவார்.[7]

பழகு கொந்தர்

பழகு கொந்தர் என்பவர் ஏனைய கொந்தர்களால் எழுதப்பட்ட மென்பொருட்களைக் கொண்டு கொந்துதல் செய்யும் திறமை குறைந்த கொந்தர் ஆவார்.[8]

புதிய கொந்தர்

புதிய கொந்தர் என்பவர் கொந்துதலுக்குப் புதியவரும் ஏறத்தாழக் கொந்துதல் பற்றிய அறிவும் அநுபவமும் இல்லாதவர் ஆவார்.[9]

நீலத் தலைப்பாக் கொந்தர்

நீலத் தலைப்பாக் கொந்தர் என்பவர் மென்பொருளில் உள்ள வழுக்களைக் கொந்துதல் மூலம் கண்டறிபவர் ஆவார். இதன் மூலம் மென்பொருளில் உள்ள பலவீனங்களைச் சரிப்படுத்த முடியும். மைக்ரோசாப்ட் நிறுவனம் நீலத் தலைப்பாக் கொந்தர்களைப் பயன்படுத்துகின்றது.[10]

வீறு கொந்தர்

வீறு கொந்தர் என்பவர் சமூக ரீதியான, சமய ரீதியான அல்லது அரசியற் செய்தி ஒன்றைத் தெரியப்படுத்தக் கொந்துதலைப் பயன்படுத்துபவர் ஆவார்.[11]

Remove ads

தாக்குகைகள்

தாக்குகைகள் பெரும்பாலும் மூன்று படிமுறைகளில் கொந்தர்களால் செய்யப்படும்.

  1. இலக்கைப் பற்றிய விபரங்களை அறிதல்
  2. தாக்குகைக்கான வழிகளை இனங்கண்டு கொள்தல்
  3. தன்வசப்படுத்தல்

தாக்குகைக்குப் பல்வேறு விதமான நுட்பங்கள் கையாளப்படுகின்றன.

நுட்பங்கள்

வழுத் தேடுநர்

வழுத் தேடுநர் எனப்படுவது ஒரு வலையமைப்பிலுள்ள கணினிகளிலுள்ள பலவீனங்களை உடனடியாக அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும்.[12]

கடவுச் சொல் உடைத்தல்

கடவுச் சொல் உடைத்தல் என்பது ஒரு கணினியில் சேமிக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட தரவுகளின் மூலம் கடவுச் சொற்களை மீட்டெடுத்தலைக் குறிக்கும்.[13] கடவுச் சொற்களுக்கான அநுமானங்களை முயற்சிப்பதன் மூலம் கடவுச் சொல்லைக் கண்டுபிடிப்பதும் இவ்வகைக்குள் அடங்கும்.[14]

பொதி முகர்வர்

பொதி முகர்வர் என்பது பரிமாறப்படும் தரவுப் பொட்டலங்களைக் கைப்பற்றும் கருவி ஆகும்.[15] இதன் மூலம் பரிமாறப்படும் கடவுச் சொற்களையும் தகவல்களையும் திருட முடியும்.[16]

ஏமாற்றுப் பரப்புகை

ஏமாற்றுப் பரப்புகை என்பது ஒரு மென்பொருள் போலவோ அல்லது ஓர் இணையத்தளம் போலவோ இன்னுமொரு போலி மென்பொருளை அல்லது இணையத்தளத்தை உருவாக்கி அதன் மூலம் பயனரின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் என்பவற்றைத் திருடுதல் ஆகும்.[17]

தீவேர் நிரல்

தீவேர் நிரல் என்பது தம்மை மறைத்துக் கொண்டு செயலாற்றும் நச்சுநிரலாகும்.[18] சில தீவேர் நிரல்களை நிறுவல் நீக்கம் செய்ய முடியாது. இதன் மூலம் தீவேர் நிரல் மென்பொருளை அனுப்பியவர் தாக்கப்பட்ட கணினியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.[19]

நயத் திருட்டு

நயத் திருட்டு என்பது பெரும்பாலும் கருந்தலைப்பாக் கொந்தர்களால் செய்யப்படுவது. ஒரு நிறுவனத்தின் பயனர்களைப் பயன்படுத்தி இத்திருட்டு நடைபெறும்.[20]

பொய்க் குதிரை

பொய்க் குதிரை என்பது பயனுள்ள மென்பொருள் போலத் தோற்றமளிக்கும் தீய மென்பொருள் ஆகும்.[21] பொய்க் குதிரையைப் பரப்பியவரால் பொய்க் குதிரை உள்ள கணினியைக் கட்டுப்படுத்துவதற்கான வழியை உருவாக்க முடியும்.[22]

நச்சு நிரல்

நச்சு நிரல் என்பது செயலிகள், ஆவணங்கள் என்பனவற்றுள் நுழைந்து தானாகவே பெருகும் நிரல் ஆகும்.[23] இது தீ நுண்மத்தின் செயற்பாட்டை ஒத்தது. தீ நுண்மமானது உயிருள்ள கலங்களுள் நுழைந்து பெருகும்.[24] அது போன்றதே நச்சு நிரல் ஆகும்.

புழு

நச்சு நிரலைப் போலவே, புழுவும் தானாகவே பெருகும்.[25] இது பயனரின் தலையீடு இன்றியே கணினி வலையமைப்பினூடாகச் செல்லும்.[26] ஒரு மென்பொருளினுள் நுழைந்து செயலாற்ற வேண்டிய தேவை புழுவுக்கு இல்லை.

விசைப் பதிவுக் கருவி

விசைப் பதிவுக் கருவி என்பது ஒரு கணினியில் அழுத்தப்படும் சாவிகளைப் பதிவு செய்யும் கருவி ஆகும்.[27] இதன் மூலம் பயனரின் கடவுச் சொல் மற்றும் ஏனைய இரகசிய விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.[28] சில விசைப் பதிவுக் கருவிகள் நச்சுநிரல்கள், பொய்க் குதிரைகள், தீவேர் நிரல்கள் என்பனவற்றின் துணையுடன் மறைந்து இயங்குநிலையில் இருக்கும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் விசைப் பதிவுக் கருவிகள் பாதுகாப்பை மேம்படுத்தவும் திருட்டைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads