கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோணேஸ்வரா இந்துக்கல்லூரி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைந்துள்ள ஓர் ஆண்கள் பாடசாலையாகும். இது 1897 ல் திருகோணமலையில் இருந்த சில பெரியார்களால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இக்கல்லூரி 2,100 மாணவர்களையும் 90 ஆசிரியர்களையும் 15 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு மாவட்டத்தின் ஒரு பெரும் கல்வி வழங்கும் களமாக விளங்குகின்றது. விளையாட்டு, சாரணியம், கலை, இலக்கியம் கலாசாரம் போன்ற பல்வேறு இணைக் கல்வி முயற்சிகளிலும் மாவட்ட மாகாண தேசிய மட்டங்களில் வெற்றிகள் பலவற்றை இக்கல்லூரி பெற்றுக் கொண்டிருக்கின்றது.[1]
Remove ads
வரலாறு
திருக்கோணமலை நகரிலே வாழ்ந்த சில இந்துப் பெரியார்களினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1922ம் ஆண்டில் ஓர் ஆரம்பப் பாடசாலையாக அரசாங்கத்தினால் அதிகார பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இப்பாடசாலை ஆரம்ப காலத்தில் இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை, இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை என இரு பிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.
1925ம் ஆண்டில் வல்லிபுரம்பிள்ளை முதலியார் தலைமையில் இருந்த முகாமையாளர் சபை பாடசாலையை இராமகிருஷ்ண மடத்திற்குக் கையளிப்பதற்கு முடிவு செய்ததையடுத்து சுவாமி விபுலாநந்தர் பாடசாலை நிர்வாகத்தைப் பொறுப்பேற்றார். சுவாமிகள் இப்பாடசாலையைக் கையேற்ற சூன் 1 ஆம் திகதியே கல்லூரித் தினமாக இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. சுவாமி விபுலாநந்தரின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையும், இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலையும் துரித வளர்ச்சியைக் கண்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றன. புதிய கட்டடங்களும் கட்டப்படலாயின.
பொதுமக்களின் நிதியைக் கொண்டு கட்டப்பட்ட காளியப்பு மண்டபம் 1927ம் ஆண்டில் அப்போதைய ஆளுநராக இருந்த சேர். என். ஹர்பட் ஸ்டான்லி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிக் காலமாகிய பி. கே. சம்பந்தரின் நினைவாக 1933ல் மண்டபம் கட்டப்பட்டது.
1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகப் பணியாற்றிய சுவாமி விபுலாநந்தர் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928 இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1930ம் ஆண்டு சூலை மாதம் வரையில் சுவாமிகள் அதிபராகக் கடமையாற்றி, பின்னர் இராமகிருஷ்ண மடத்தின் கீழள்ள சகல பாடசாலைகளையும் பொறுப்பேற்று அதிபர் பதவியை பி. இராமச்சந்திரா என்பவரிடம் கையளித்துச் சென்றார்.
சுவாமி விபுலாநந்தரது காலத்தில் கல்லூரி படிப்படியாக வளர்ச்சி கண்டது. அறிவியல் கல்வி மேம்படுத்தப்பட்டது. ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இலண்டன் கேம்பிரிட்ஜ் சீனியர் சோதனையை மாணவர்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
1932ம் ஆண்டில் கல்லூரி மேல் இடைநிலைத் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. இராமகிருஷ்ண மடத்தின் அரவணைப்புடன் வளர்ந்து வந்த கல்லூரியின் வளர்ச்சி இரண்டாம் உலகப் போரின் போது 1940ல் இருந்து 1945 வரை தடைப்பட நேர்ந்தது. போர்க் காலத்தின்போது பாடசாலைக் கட்டடங்கள் இராணுவத்தினதால் பொறுப்பேற்கப்பட்டன. இக்காலத்தில் கல்லூரி தற்காலிகமாக வேறு இடங்களில் இயங்கிக்கொண்டிருந்தன. 1945ல் மீண்டும் கல்லூரி தனது சொந்தக் கட்டடங்களில் இயங்கத் தொடங்கியது.
எல். எச். ஹரதாச தனது காலஞ்சென்ற தந்தையார் நொரிஸ் டி சில்வா அவர்களின் நினைவாக அமைத்துக் கொடுத்த நூலகக் கட்டடம் 1947ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.
கால ஓட்டத்தில் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை இந்துக் கல்லூரி என்ற பெயரோடு மாவட்டத்தின் முன்னணிக் கல்லூரியாக வளர்ச்சி பெற்று வர இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை கோணேஸ்வர வித்தியாலயம் என்ற பெயரோடு ஆரம்ப இடைநிலைக் கல்விக்கு மாவட்டத்தின் சிறந்த பாடசாலையாக உருவாகி வந்தது.
1952ம் ஆண்டில் இந்துக்கல்லூரி முதலாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. தற்போது அம்பலவாணர் அகம் என அழைக்கப்படும் கல்லூரியின் முதலாவது மாடிக்கட்டடம் 1955ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1958ல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்துக்கல்லூரியும், கோணேஸ்வரா வித்தியாலயமும் இராமகிருஷ்ண சங்கத்தின் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் 1961ம் ஆண்டில் மிசனரிப் பாடசாலைகளை அரசாங்கம் கையகப்படுத்திய போது இந்தப் பாடசாலைகளைத் தனித் தனியான இரு பாடசாலைகளாகவே இராமகிருஷ்ண மிஷன் அரசாங்கத்திற்கு கையளித்தது.
இவ்விரு பாடசாலைகளும் 1993ம் ஆண்டில் ஒரே பாடசாலையாக இராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தையும் பெற்று இணைந்து கொண்டன. திருக்கோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை முதலாவதாகவும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இரண்டாவதாகவும் தேசிய பாடசாலையாகிய பெருமை இக் கல்லூரிக்கு உண்டு.
Remove ads
பழைய மாணவர் சங்கங்கள்

2013ம் ஆண்டு திருமலை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் தனது 75ம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது. இதன் தொடர்ச்சியாக கொழும்பு, ஐக்கிய இராச்சியம் போன்ற இடங்களில் பழைய மாணவர் சங்கத்தின் கிளைகள் அமைக்கப்பட்டன.
கல்லூரிப்பண்
கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் கல்லூரிப்பண், பண்டிதர் இ. வடிவேல் அவர்களால் ஆக்கப்பட்டது. கோணேஸ்வரா வித்தியாலயம், இந்துக்கல்லூரி ஆகிய இருபாடசாலைகளிலும் சிறு சிறு மாற்றங்களுடன் இப்பண்ணே பாடப்பட்டுவந்தது. பாடசாலைகள் இணைக்கப்பட்ட பின்னர் இரு பாடசாலைகளின் பண்களும் ஒன்றாக்கப்பட்டு சிறு மாற்றங்களுடன் தற்போது பாடப்பட்டு வருகிறது.

வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி வாழ்கவே
ஆதி அந்தம் இல்லாத ஆண்டவன் தெய்வம்
அன்னையும் பிதாவும் எங்கள் முன்னறி தெய்வம்
எண்ணோடு எழுத்தத்தனை ஈந்தவர் தெய்வம் -இனி
என்றும் அவரையே பணிந்து இனிது வாழுவோம்
நல்ல உள்ளம் வளர்ப்போம் உடல் உறுதி வளர்ப்போம்
கலை கல்வி வளர்ப்போம் தூய செல்வம் வளர்ப்போம்
நல்லவரை நாடி நிதம் நல்வழி நிற்போம் - எங்கள்
நாட்டினிற்கே சேவை செய்து நாமும் வாழுவோம்
முத்தமிழும் கற்று மேலை வித்தையும் கற்போம் - உயர்
சத்தியமும் ஐக்கியமும் வாழ்வில் வளர்ப்போம்
வித்தை தரும் கோணேஸ்வரா இந்து கல்லூரியின்
உத்தமராம் ஆசிரியர் தமை மதிப்போம்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads