கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருநல்லம் - கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 34ஆவது சிவத்தலமாகும்.[1] கும்பகோணம்-காரைக்கால் சாலையில் எஸ்.புதூரை அடைந்து அங்கிருந்து வலப்புறமாகத்திரும்பி சென்று கூட்டு ரோட்டை அடைந்து பின்னர் இடப்புறமாக 1 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருநல்லம் உமாமகேசுவரர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. கண்டராதித்த சோழனின் மனைவியாரான செம்பியன் மாதேவியார் இக்கோயிலைக் கற்றளியாக்கினார். இவர் திருக்கோடிக்காவல், செம்பியன்மாதேவி, குத்தாலம், விருத்தாசலம், திருவக்கரை போன்ற கோயில்களை கற்கோயிலாக மாற்றிய பெருமையுடையவர் ஆவார்.[2] இக்கோயிலின் தென்புறச் சுவரில் ஒரு சிற்பத்தொகுதியும், கல்வெட்டும் உள்ளன. சிற்பத்தில் ஒரு லிங்கத்திருமேனிக்கு பட்டர் ஒருவர் ஆடை சுற்றிக்கொண்டிருக்க எதிரே கால்களை மடித்து அமர்ந்த நிலையில் வணங்கும் கோலத்தில் கண்டராதித்தர் உள்ளார்.[3]

Remove ads

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் உமாமகேஸ்வரர், பூமிசுவரர், பூமிநாதன் என்றழைக்கப்படுகிறார். இறைவி தேகசௌந்தரி, அங்களநாயகி என்றழைக்கப்படுகிறார். அரச மரம் இக்கோயிலின் மரமாகவும், பிரம்ம தீர்த்தம் இக்கோயிலின் தீர்த்தமாகவும் உள்ளன.[2] இறைவ, இறைவியர் செப்புச் சிலைகள் 9 அடி உயரமுடையவையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைப்பு

Thumb
Thumb
ஓவியங்கள் உள்ள முன் மண்டபமும், சிற்பங்கள் உள்ள மூலவர் கருவறையும்

வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் ஷண்முகர் சன்னதியும், இடப்புறம் கணபதி சன்னதியும் உள்ளன. முன் மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. ராஜகோபுரத்தின் வலப்புறம் மூத்த விநாயகர் உள்ளார். கோயிலின் அம்மன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. மண்டபத்தில் வலப்புறம் பிரம்மலிங்கம், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி உள்ளனர். இடப்புறம் நவக்கிரக சன்னதி உள்ளது. அருகே நவக்கிரகம் பூசித்த லிங்கம் உள்ளது. மண்டபத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. அடுத்து பைரவர், துர்க்கை, சூரியன் உள்ளனர். அடுத்து காணப்படும் மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. வெளியே இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையின் இடப்புறத்தில் விநாயகர் உள்ளார். கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, பிரம்மா விஷ்ணுவுடன் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மூன்று லிங்கங்கள், பைரவர், அக்னீஸ்வரர், சனத்குமாரலிங்கம், சம்பகாரண்யேஸ்வரர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். கருவறைக்கு மேலுள்ள விமானம் சற்றே பெரிய அளவில் அமைந்துள்ளது.

ஓவியங்கள்

முகப்பு மண்டபத்தின் விதானத்தில் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. சென்ற நூற்றாண்டு கால ஓவியமாக இருந்தபோதிலும் கோயிலின் அமைப்பு, புராண வரலாறு, இங்கு நடைபெற்ற விழாக்களின்போது இறைவன் வீதி உலா வரும் காட்சி போன்றவை வண்ண ஓவியங்களாக உள்ளன. இவை புராண வரலாற்றுச் சிறப்பினையும், வழிபாட்டுச் சிறப்பினையும் எடுத்துக்கூறுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மக்களின் சமகால வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் சான்றாகவும் அவை உள்ளன. இவை சுவரொட்டி வண்ணப்பூச்சு முறை எனப்படுகின்ற டெம்பரா என்ற ஓவியப்பூச்சு வகையில் உள்ளதால் இவற்றில் பெரும்பாலானவை அழியும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.[2]

சிற்பங்கள்

கருவறையைச் சுற்றி வரும்போது உள் சுற்றில், கருவறைக்கு வெளிப்புறம் மிகச்சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆனையுரித்தேவர், லிங்கத்திற்கு பூசை செய்தல், இறைவன் தேவியரோடு இருத்தல் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.

தல வரலாறு

Thumb
கொடி மரம்,பலிபீடம்

முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக்கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட, உலகைக்காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள். பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரசமரம் இருந்தது. புள்ளினங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்மதீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வ்ணங்கவேண்டிய தலம் இதுவென உணர்ந்த்தாள் பூமாதேவி. தேவசிற்பியான விஸ்வகர்மா அங்கே ஆலயம் அமைத்தார். வைகாசி மாதத்தில், குருவாரத்தில் ரோகிணியும், பஞ்சமியும் கூடிய சுப நாளில் தேவகுருவான பிரகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி, நாள்தோறும் தொழுது வரலானாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்தார். பூமாதேவியே இந்த உலக உயிர்களின் சகல பாவங்கலையும் போக்கும் தீர்த்தம் ஒன்றை உருவாக்கு என்று பணிக்க அதன்படி உருவானதே இங்குள்ள பூமிதீர்த்தம்.

உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் மாலை மாற்றிக் கொள்ளும் பாவனையில் அருள்பாளிப்பதால் திருமணத்தடை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது. திருமண தடைகள் நீங்க இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்குள்ள இறைவனை வணங்கினால் பொல்லாத் துயரும் பொடிப்பொடி ஆகும் என்று திருநாவுக்கரசர் அருளி இருக்கிறார். அதற்கேற்ப புரூவர மன்னனின் குஷ்ட நோயைப் போக்கிய ஸ்ரீவைத்தியநாதர் தனி சந்நிதி கொண்டு காணப்படுகிறார். இங்குள்ள நடராஜர் சன்னிதி பெருமைவாய்ந்த ஒன்று. ஆறடி உயரத்தில் கம்பீரமாக காணப்படும் இந்த மூர்த்தம் அந்தக்கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது.

Remove ads

வழிபட்டோர்

பூமாதேவி பூஜித்து பேறு பெற்ற தலம்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

ஓவியங்களும், சிற்பங்களும் புகைப்படத்தொகுப்பு

ஓவியங்கள்

சிற்பங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads