சக்கரவர்த்தி (நடிகர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்கரவர்த்தி அல்லது சக்கரவர்த்தி வேலுச்சாமி (மறைவு 23, ஏப்ரல், 2022[1]) என்பவர், இந்திய தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணி குரல் கலைஞர் ஆவார். இவர் கதாநாயகன் குணச்சித்திர நடிகர் என 86 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]
பிறப்பும் கல்வியும்
சக்கரவர்த்தி தமிழ்நாட்டின், மதுரை பெரியகுளத்தில் பிறந்து வளர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பட்டம் பெற்றார். கல்லூரிகளுக்கு இடையில் நடந்த நாடகப் போட்டியில் கலந்து கொண்ட சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதி வேடமிட்டு நடித்து முதல் பரிசைப் பெற்றார். இவரின் நடிப்பையும், வசன உச்சரிப்பையும் அக்கலூரியில் இவருக்கு தமிழ் பேராசிரியராக இருந்த சாலமன் பாப்பையா திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பைக் கற்று திரைப்படங்களில் நடிக்குமாறு அறிவுருத்தினார்.[2] இதனால் கல்லூரி படிப்பை முடித்தபின்னர் சக்கரவர்த்தி 1977இல் சென்னை பிலிம் சேம்பர் நடிப்புப் பள்ளியில் இணைந்தார். அந்த ஆண்டு இவருடன் வாகை சந்திரசேகர், சுதாகர், திலீப் போன்றோர் பயின்றனர்.[2]
Remove ads
திரை வாழ்க்கை
நடிப்புப் பள்ளியில் பயின்ற பிறகு 1979 இல் ஒரு கோயில் இரு தீபங்கள் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் எஸ். பி. முத்துராமன் அறிமுகப்படுத்தினார். தனது அடுத்தடுத்த மூன்று படங்களில் வாய்ப்பளித்தார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாகவும், ரிஷிமூலம் படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக நடித்ததன் மூலம் இவர் மீது புகழ்வெளிச்சம் பட்டது. 1980 ஆண்டு வெளியான தைப்பொங்கல் படத்தில் நாயகனாக அறிமுகமானார். இவருக்கு இணையாக இராதிகா நடித்தார். அடுத்து மு. கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான தூக்குமேடை படத்தில் வாகை சந்திர சேகருடன் இவரும் என இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். கொட்டு முரசே என்ற படத்தில் சுப்பிரமணிய பாரதி வேடத்தில் நடித்தார். முள்ளில்லாத ரோஜா படத்தில் வாய் பேசமுடியாதவராக நடித்தார். தமிழ் திரையுலகில் பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் பெப்சி அமைப்பு நடத்திய வேலை நிறுத்தம் ஓராண்டு நீடித்தது. இதனால் குடும்பத் தேவைக்காக பம்பாய்க்கு இடம்பெயர்ந்தார். அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தியில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர்களை இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யத் துவங்கியது. அந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு தமிழில் பின்னணிக் குரல் கொடுக்கும் பணியை மேற்கொண்டார். மேலும் இந்தி மொழிமாற்று படங்களுக்கு தமிழில் குரல் கலைஞராகப் பணியாற்றினார்.[3] சோனி ஸ்டார் ஸ்போர்ஸ் தொலைக்காட்சிக்கு பின்னணி குரல் கொடுக்கும் பணியையும் செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல் விளம்பரப் படங்களுக்கும் குரல் கொடுக்கத் தொடங்கினார் அவ்வாறு சுமார் 1500 விளம்பரப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். ராடன் டெலிவிசன் நிறுவனம் தயாரித்த காவேரி தொலைக்காட்சித் தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.
Remove ads
திரைப்படவியல்
(இது முழுமையான பட்டியல் அல்ல.)
- ஒரு கோயில் இரு தீபங்கள் (1979)
- ஆறிலிருந்து அறுபது வரை (1979)
- தர்மயுத்தம் (1979)
- ரிஷிமூலம் (1980)
- தைப்பொங்கல் (1980)
- நூலறுந்த பட்டம் (1981)
- தூக்குமேடை (1982)
- முள் இல்லாத ரோஜா (1982)
- உதயகீதம் (1985)
- கொட்டு முரசே
குடும்பம்
சக்கரவர்த்தி லலிதா என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சக்கரவர்த்தி மும்பையில் தன் 62வது வயதில் 2022, ஏப்ரல், 23 அன்று தூக்கத்திலேயே மாரடைப்பால் இறந்தார்.[4]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads