டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dr. Babasaheb Ambedkar International Airport, (ஐஏடிஏ: NAG, ஐசிஏஓ: VANP)) மகாராட்டிரத்தின் நாக்பூர் நகருக்கு சேவை வழங்கும் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த நிலையம் நாக்பூரின் தென்மேற்கில் 8 கி.மீ. (5 மை) தொலைவில் சோனேகாவ்னில் அமைந்துள்ளது. 1355 ஏக்கர்கள் (548 எக்டேர்) பரப்பளவு கொண்ட இந்த வானூர்தி நிலையம் 2005இல் இந்திய அரசியலமைப்பை வடித்தச் சிந்தனையாளர் அம்பேத்கர் நினைவாகப் பெயரிடப்பட்டது.[4] நாளுக்கு 4,000 பயணிகளைக் கையாளும் இந்த நிலையம் ஐந்து உள்நாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் இரண்டு பன்னாட்டு வான்சேவை நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. சார்ஜா, தோகா மற்றும் 12 உள்நாட்டுச் சேரிடங்களுக்கு இவை நாக்பூரை இணைக்கின்றன. இங்கு இந்திய வான்படையின் வான்தளமும் அமைந்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பெரிதும் 700 கி.மீ. (378 மை) தொலைவிலுள்ள மாநிலத் தலைநகர் மும்பைக்கே உள்ளது.
Remove ads
வரலாறு
இந்த வானூர்தி நிலையம் 1917-18இல் முதல் உலகப் போரின்போது அரச வான்படைக்காக பயன்பாட்டிற்காக துவங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு விலகியபோது இது இந்திய அரசிற்கு மாற்றப்பட்டது. 1953இல் உணவகங்கள், ஓய்வறைகள், ஒப்பனையறைகள், நூலங்காடிகள், பார்வையாளர் அரங்கங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.[5]
சோனேகான் வானூர்தி நிலையம் அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட தனித்துவமான "இரவு வான்வழி அஞ்சல் சேவையின்" மைய அச்சாக விளங்கியது; இத்திட்டத்தில் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையிலிருந்து நான்கு வானூர்திகள் ஒவ்வொரு இரவும் அஞ்சல்பைகளுடன் இங்கு வந்து சேர்ந்து மற்ற நகரங்களுடன் அஞ்சல்களைப் பிரித்துக் கொண்டு தத்தம் இடம் திரும்பின. இந்த சேவை சனவரி 1949 முதல் அக்டோபர் 1973 வரை இயக்கத்தில் இருந்தது.[6] இங்கு குடிசார் வான்போக்குவரத்தே முதன்மையானதாக இருந்தது; 2003இல் மீண்டும் இந்திய வான்படை இங்கு தனது 44ஆம் அலகை நிறுவி படைத்துறையின் சரக்கு வானூர்தி ஐஎல்-76ஐ இங்கு இருத்தியுள்ளது.[7]
Remove ads
விரிவாக்கம்
இந்தியாவின் நடுமத்தியில் அமைந்துள்ளதால் பன்முகட்டு பன்னாட்டு சரக்கு மைய அச்சு மற்றும் நாக்பூர் வானூர்தி நிலையம் என்ற திட்டம் (ஆங்கிலச் சுருக்கம்:MIHAN) முன்மொழியப்பட்டு இதற்கான மேம்பாட்டுப் பணிகள் 2005ஆம் ஆண்டு துவங்கின. இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் ஓடுபாதை, புதிய முனையக் கட்டிடம், மற்றும் சரக்கு வளாகத்தை கட்டு-பராமரி-மாற்று அடிப்படையில் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக இந்திய வான்படைக்கு மகாராட்டிர அரசு 400 எக்டேர் நிலத்தை மாற்றாக வழங்கியது.[8][9]
புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் ஏப்ரல் 14, 2008இல் திறக்கப்பட்டது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் பழைய கட்டிடத்தையும் ₹790 மில்லியன் (ஐஅ$9.2 மில்லியன்) செலவில் மேம்படுத்தியது. இந்த வானூர்தி நிலையம் 17,500 சதுர மீட்டர் பரப்பளவில் மணிக்கு 550 பயணிகளை கையாளும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் 20 உள்பதிகை முகப்புகளும் 20 குடிபுகல் முகப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த முனையத்தில் கட்புல இணைப்பு வழிகாட்டுதலுடன் கூடிய பயணியர் வானூர்தி பாலங்களும் சரக்குப் பெட்டிகளுக்கான சுமைச்சுழலிகளும் அமைந்துள்ளன. 600 தானுந்துகளை நிறுத்தற்கூடிய தானுந்து நிறுத்தற்பூங்காவும் உள்ளது. இதில் 18 நி்றுத்தற் தடவழிகள் உள்ளன. வானூர்தி நிலையத்தை முதன்மை நெடுஞ்சாலையுடன் இணைக்கும் அணுக்கச்சாலை புதியதாக கட்டப்பட்டது. வானூர்தி நிலையத்தின் வான்பயண வழிகாட்டுதலை மேம்படுத்த புதிய கட்டுப்பாட்டு அறையும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்நுட்பக் கட்டிடமும் திட்டமிடப்பட்டுள்ளன.[10]
Remove ads
ஏர் இந்தியாவின் பராமரிப்பு மையம்
இந்த வானூர்தி நிலையத்தில் 50 ஏக்கர் பரப்பில் அமெரிக்க வானூர்தித் தயாரிப்பு நிறுவனமான போயிங் பராமரிப்பு- செப்பனிடுதல்-பழுதுபார்வை (MRO) வசதியை சனவரி 2011இல் கட்டமைத்துள்ளது.[11] இந்த வசதியை ஏர் இந்தியாவின் பராமரிப்புத் துறை, ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் பிரிவு, 2013இல் ஏற்றுக்கொண்டது; சூன் 2015 முதல் இயக்கி வருகின்றது.[12] இந்த $100 மில்லியன் பெறுமான திட்டத்தில் இரண்டு 100 x 100 மீட்டர் வானூர்திக் கூடாரங்களை லார்சன் அன்ட் டூப்ரோ கட்டியுள்ளது. இவை போயிங் 777 & 787-8 போன்ற அகல உடல் வானூர்திகளை நிறுத்தமளவிற்கு உள்ளன. மேலும் வேலைசெய்ய ஏதுவாக கூடுதலாக 24,000 ச மீட்டர்கள் பகுதியை வழங்குகின்றன. நாக்பூர் நாட்டின் மையமாக இருப்பதாலும் வெப்பநிலை மிக்கதாகவும் கடல்நீர் தூய்மைக்கேடும் அரித்தலும் இல்லாததாலும் இந்த வானூர்தி நிலையத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. உலகில் இத்தகைய வசதியை போயிங் நிறுவனம் இரண்டாவது முறையாக கட்டமைத்துள்ளது; முதலில் சீனாவின் சாங்காயில் நிறுவியுள்ளது.[13]
வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads