அம்பேத்கர்
இந்திய சட்ட அறிஞர், முற்போக்குவாதி, இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
பம்பாய் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற பிறகு, இலண்டன் பொருளாதாரப் பள்ளி, கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பொருளாதாரம் பயின்று, முறையே 1923, 1927 இல் முனைவர் பட்டங்களைப் பெற்றார். ஆரம்ப வாழ்க்கையில், ஒரு பொருளாதார நிபுணராகவும், பிறகு பேராசிரியராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். பிற்கால வாழ்க்கையில் இவரது அரசியல் செயல்பாடுகளால் பரவலாக அறியப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளராக சில பத்திரிகைகளை வெளியிட்டார் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடினார். 1956 ஆம் ஆண்டு இவர் இந்து சமயத்திலிருந்து விலகி பௌத்த சமயத்தைத் தழுவினார். 'நவ புத்தம்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பட்டியல் இன மக்களையும் புத்தசமயத்தைத் தழுவச்செய்தார்.[1]
இவர் பாபா சாகேப் ("மதிப்பிற்குரிய தந்தை") என்ற புனைப்பெயரால் அடைமொழி இட்டு அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது, இவரது மறைவுக்கு பிறகு 1990 இல் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
இளமை
அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது) 14 ஏப்ரல் 1891 இல் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.[2][3] அம்பேத்கர், தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இராம்ஜி சக்பால் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.

மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.[5] பள்ளியில் படித்தபோது, அம்பேத்கரும் மற்ற பட்டியலினக் குழந்தைகளும் தனியாக அமரவைக்கப்பட்டனர். இவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும் போது, தண்ணீர் பாத்திரத்தைத் தொட அனுமதிக்கபடாததால், உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் அந்தத் தண்ணீரை எடுத்து ஊற்ற வேண்டிய நிலையிருந்தது.[6] பொதுவாக இம்மாணவர்கள் அமருவதற்கு ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டியிருந்தது.[7]
ராம்ஜி சக்பால் 1894 இல் ஓய்வு பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பம் பம்பாய் மாகாணத்திலுள்ள சதாராவிற்குக் குடிபெயர்ந்தது. அதன் பின் சிறிது காலத்தில் அம்பேத்கரின் தாயார் இறந்தார். பின்னர் குழந்தைகள் தங்கள் தந்தைவழி அத்தையால் பராமரிக்கப்பட்டு கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தனர். குடும்பத்தில் அம்பேத்கர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். இவரது குடும்பப் பெயரான "சக்பால்" என்பதை மாற்றி, இவரது தந்தை "அம்பேவாதேகர்" என்று பள்ளியில் பதிவு செய்தார். இந்தப் பெயர் இவர் பிறந்த அம்பேவாதே கிராமத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது.[8][9] இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட மராத்தியப் பிராமண ஆசிரியரான கிருஷ்ணாசி கேசவ் அம்பேத்கர், பள்ளிப் பதிவேடுகளில் "அம்பேவாதேகர்" என்ற பெயரை "அம்பேத்கர்" என்று தனது சொந்தப் பெயரைப் பின்பற்றி மாற்றினார்.[10]
கல்வி


1897 ஆம் ஆண்டில், அம்பேத்கரின் குடும்பம் பம்பாய்க்குக் குடிபெயர்ந்தது. அங்கு அம்பேத்கர் எல்பின்சுடோன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1907 இல், இவர் தனது பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றபின், அடுத்த ஆண்டு பம்பாய் பல்கலைக்கழகத்தின், எல்பின்சுடோன் கல்லூரியில் சேர்ந்தார்.[11] 1912 ஆம் ஆண்டு, இவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். பரோடா மன்னரின் உதவியால், அம்மாநில அரசாங்கத்தில் வேலை செய்யத் தயாராக இருந்தார். பிப்ரவரி 1913 இல் இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்ததால், மீண்டும் இவர் பம்பாய்க்குத் திரும்ப வேண்டியிருந்தது.[12]
1913 ஆம் ஆண்டு, தனது 22ஆவது வயதில், பரோடா மன்னர் சயாசிராவ் கெய்க்வாட் நிறுவிய திட்டத்தின் கீழ், அம்பேத்கருக்கு ஒரு மாதத்திற்கு £11.50 உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் இவருக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழத்தில், முதுகலை கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இவர் அமெரிக்காவில் லிவிங்சுடன் அரங்கில் பாரசீகரான நவல் பத்தேனாவுடன் தங்கினார். இவர் சூன் 1915 இல் பொருளாதாரம் மற்றும் சமூகவியல், வரலாறு, தத்துவம் மற்றும் மானுடவியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றார். பண்டைய இந்திய வர்த்தகம் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.[13]
1916 இல், இவர் இந்தியாவின் தேசிய ஈவுத்தொகை - ஒரு வரலாற்று மற்றும் பகுப்பாய்வு என்ற தலைப்பில் தனது இரண்டாவது முதுகலை ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.[14] மே 9 அன்று, மானுடவியலாளர் அலெக்சாண்டர் கோல்டன்வீசர் நடத்திய கருத்தரங்கில், இந்தியாவில் சாதிகள்: அவற்றின் வழிமுறை, தோற்றம் மற்றும் வளர்ச்சி என்ற கட்டுரையை சமர்ப்பித்தார்.
அக்டோபர் 1916 இல், இவர் சட்ட படிப்பில் சேர்ந்தார். அதே நேரத்தில் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் முனைவர் பட்டம் பெற ஆய்வு பணியாற்றத் தொடங்கினார். சூன் 1917 இல் இவரது உதவித்தொகை நிறுத்தப்பட்டதனால் இந்தியா திரும்பினார்.[12] நான்கு ஆண்டுகளுக்குள் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க லண்டனுக்குத் திரும்ப அனுமதி பெற்றார். பின் 1921 இல் ரூபாய் பிரச்சனை: அதன் தோற்றமும் தீர்வும் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து முதுகலைப் பட்டத்தை முடித்தார்.[15] 1923 இல், பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அம்பேத்கர், அதே ஆண்டு சட்ட அமைப்பால் வழக்குரைஞராக ஏற்கப்பட்டார். 1927 இல் கொலம்பியாவில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[16]
Remove ads
வாழ்க்கை வரலாறு

அம்பேத்கர் பரோடா மன்னரின் உதவியின் பேரில் கல்வி கற்றதால், பரோடா மாநிலத்திற்காக வேலை செய்யக் கட்டுப்பட்டார். இவர் கெய்க்வாட் அரசரின் இராணுவ செயலாளராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே பதவி விலக வேண்டியிருந்தது.[17] அதன் பிறகு, வளர்ந்து வரும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற வழி தேடினார். ஒரு தனியார் பள்ளி ஆசிரியராகவும், கணக்காளராகவும் பணியாற்றினார். ஒரு முதலீட்டு ஆலோசனை வணிக நிறுவனத்தையும் நிறுவினார். ஆனால் இவர் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என அறிந்தவுடன் இவரது வாடிக்கையாளர்கள் இவரை ஆதரிப்பதை நிறுத்திக்கொண்டதால், இந்த முயற்சி தோல்வியடைந்தது.[18] 1918 இல், மும்பையில் உள்ள சிடென்காம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியரானார். இவர் மாணவர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றாலும், இவரின் சாதி காரணமாக மற்ற பேராசிரியர்கள் இவருடன் பழகுவதை எதிர்த்தனர்.[19]
சமூகப்பணிகள்
1919 ஆம் ஆண்டு புதிய அரசு சட்டத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசின் சவுத்பரோ குழுவின் முன் சாட்சியமளிக்க அம்பேத்கர் அழைக்கப்பட்டார். இந்த குழுவின் முன் அம்பேத்கர், பட்டியலின மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்குத் தனி தேர்தல் தொகுதிகள் மற்றும் இடஒதுக்கீடுகளை உருவாக்க வேண்டும் என்று வாதிட்டார்.[20] 1920 இல், பம்பாயில் மூக்நாயக் (மௌனத்தின் தலைவர்) என்ற வார இதழை வெளியிடத் தொடங்கினார்.[21]
சட்ட வல்லுநராகப் பணியாற்றிய அம்பேத்கர், 1926 ஆம் ஆண்டில் மூன்று பிராமணரல்லாத தலைவர்களுக்காக இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வாதாடினார்.[22] பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிந்த போது, பட்டியலின மக்களின் கல்வியை மேம்படுத்தி, இவர்களை உயர்த்த முயன்றார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் '"பகிச்கிருதக் கிதகாரிணி சபா" என்ற பெயரில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பை தொடங்கினார்.[23][24] இவர் 1925 இல் சைமன் குழுவுடன் பணிபுரிய அமைக்கப்பட்ட பம்பாய் மாகாணத்தின் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[25] இந்த ஆணையம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது. அதன் அறிக்கை பெரும்பாலான இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அம்பேத்கர் எதிர்கால இந்திய அரசியலமைப்பிற்கான சில பரிந்துரைகளை அப்பொழுது எழுதினார்.[26]
1927 இல் தீண்டாமைக்கு எதிராக தீவிர இயக்கங்களைத் தொடங்க அம்பேத்கர் முடிவு செய்தார். பல பொது இயக்கங்கள் மற்றும் பொது குடிநீர் ஆதாரங்களைத் திறக்க பேரணிகள் ஆகியவற்றை நடத்தினார். இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் நுழைகின்ற உரிமைக்கான போராட்டத்தையும் தொடங்கினார். தீண்டத்தகாத சமூகத்தினருக்கு நகரின் பிரதான நீர்த் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான உரிமைக்காகப் போராடுவதற்காக மகத் நகரத்தில் ஒரு சத்தியாகிரக போராட்டம் நடத்தினார்.[27] 1927 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ஒரு மாநாட்டில், சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை ஆகியவற்றை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்துவதற்காகப் பாரம்பரிய இந்து நூலான மனுதரும சாத்திரத்தைப் பகிரங்கமாக கண்டனம் செய்தார். இந்தப் பண்டைய நூலின் பிரதிகளை சடங்கு ரீதியாக எரித்ததை தொடர்ந்து 1927 திசம்பர் 25 இல், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அதன் பிரதிகளை எரிக்க முற்பட்டனர்.[28][29]
1930 இல், அம்பேத்கர் களாராம் கோயில் இயக்கத்தைத் தொடங்கினார். ஏறத்தாழ 15,000 தன்னார்வலர்கள் கூடி நாசிக் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இசைக்குழு அணிவகுப்புடன் ஊர்வலமாகச் சென்ற இவர்களைக் கடவுளை தரிசனம் செய்ய விடாமல் பிராமண அதிகாரிகள் தடுத்தனர். இவர்கள் கோயிலின் வாயில்களை அடைந்ததும், கதவுகள் மூடப்பட்டன.[30]
புனே உடன்படிக்கை

1930-இல் இலண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன், அதே சமயத்தில் சுயாட்சி கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் "இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி இந்த இரட்டை தேர்தல் முறையைக் கடுமையாக எதிர்த்தார், அத்தகைய ஏற்பாடு இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் என்று அஞ்சுவதாகக் கூறினார்.[31][32][33] பூனேவில் உள்ள சிறையில் இதை எதிர்த்து காந்தி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். இதை தொடர்ந்து அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.[34]
இதன் விளைவாக 1932 செப்டம்பர் 25 இல், பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்துக்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சார்பாக அம்பேத்கரும், மற்ற இந்துக்கள் சார்பாக மதன் மோகன் மாளவியாவும் அதில் கையெழுத்திட்டனர். இதன்படி தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் செய்ய ஒத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சட்டமன்றங்களில் 148 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்துக்களிடையே தீண்டத்தகாதவர்களைக் குறிக்க "தாழ்த்தப்பட்ட வகுப்புகள்" என்ற வார்த்தை அப்பொழுது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு பட்டியல் இனத்தவர் என்று அழைக்கப்பட்டனர்.[35][36]
அரசியல் வாழ்க்கை
1935 ஆம் ஆண்டில், அம்பேத்கர் பம்பாய் அரசு சட்டக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார், அந்தப் பதவியில் இவர் இரண்டு ஆண்டுகள் இருந்தார்.[37] அக்டோபர் 13 அன்று நாசிக்கில் நடந்த யோலா மாநாட்டில், அம்பேத்கர் வேறு மதத்திற்கு மாறுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார். அவரைப் பின்பற்றுபவர்களை இந்து சமயத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.[37] 1936 இல், அம்பேத்கர் சுதந்திர தொழிலாளர் கட்சியை நிறுவினார். இந்தக் கட்சியானது 1937 ஆம் ஆண்டு பம்பாய் சட்டமன்ற தேர்தலில் 14 இடங்களைப் பெற்றது.[38]
அம்பேத்கர் சாதி ஒழிப்பு என்ற நூலை 1936 மே 15 அன்று வெளியிட்டார்.[39] இது இந்து மரபுவழி மதத் தலைவர்கள் மற்றும் இந்து சமயத்தின் சாதி அமைப்பைக் கடுமையாக விமர்சித்தது. இந்த விசயத்தில் காந்தியின் கருத்துக்களுக்கு எதிரான கண்டனத்தையும் உள்ளடக்கியது.[40] குஜராத்தி மொழி நாளிதழ்களில் காந்தி சாதி அமைப்புக்கு ஆதரவாக எழுதியதாகக் குற்றம் சாட்டினார்.[41] அம்பேத்கர் தனது எழுத்துகளில், சவகர்லால் நேரு பிராமணராக இருந்ததால் இதை எதிர்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.[42]
இந்த நேரத்தில், அம்பேத்கர் கொங்கன் பகுதியில் நிலவிய "கோட்டி" முறைக்கு எதிராகப் போராடினார். அங்கு "கோட்டுகள்" என்றழைக்கப்பட்ட அரசாங்க வருவாய் சேகரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களை சுரண்டிப் பணம் பறித்து வந்தனர். 1937 ஆம் ஆண்டில், அம்பேத்கர் பம்பாய் சட்டமன்றத்தில், ஒரு மசோதாவை தாக்கல் செய்தார், இது அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே நேரடி உறவை உருவாக்குவதன் மூலம் இந்த கோட்டி முறையை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது.[43]
ஜின்னாவும் அம்பேத்கரும் பம்பாயில் நடைபெற்ற விடுதலை நாள் நிகழ்வில் கூட்டாக உரையாற்றினர், அங்கு இருவரும் காங்கிரசுக் கட்சியின் மீது தீவிரமான விமர்சனங்களை வெளிப்படுத்தினர்.[44][45] பாகித்தானைக் கோரும் முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம் 1940இல் நிறைவேற்றப்பட்ட பிறகு, அம்பேத்கர் பாகித்தான் பற்றிய சிந்தனைகள் என்ற தலைப்பில் 400 பக்க கட்டுரையை எழுதினார். இதில் இசுலாமியர்களுக்குப் பாக்கித்தானை உருவாக்கித் தர இந்துக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.[46][47]
இந்திய அரசியலமைப்பில் பங்கு

1947 ஆகத்து 15 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு அம்பேத்கரை இந்திய மேலாட்சி அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சராகப் பணியாற்ற அழைத்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, எதிர்காலத்திற்கான இந்தியக் குடியரசின் அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.[48][49]

மதச் சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குதல் உட்பட தனிப்பட்ட குடிமக்களுக்கான பரந்த அளவிலான உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான விரிவான பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக வாதிட்ட அமைச்சர்களில் அம்பேத்கரும் ஒருவர். பள்ளி, கல்லூரிகளில் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்த அரசியல் நிர்ணய சபையின் ஆதரவைப் பெற்றார்.[50] இந்திய அரசியலமைப்பின் வரைவு 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[51] இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும், இந்திய அரசியலமைப்பை அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.[52]
இந்து நெறியியல் சட்டத்தைக் கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951 ஆம் ஆண்டு இவர் தன் அமைச்சர் பதவியை துறந்தார்.[53] அம்பேத்கர் 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது அரசியலமைப்பிற்கு எதிரான தனது மறுப்பை வெளிப்படுத்தினார். "மக்கள் எப்போதும் என்னிடம் நீங்கள் தான் அரசியலமைப்பை உருவாக்கியவர் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதில் என் விருப்பத்திற்கு மாறாக நிறைய செய்தேன். வாய்ப்பு கிடைத்தால் அதை எரிக்கும் முதல் நபர் நானாக இருப்பேன் என்று கூற நான் தயாராக இருக்கிறேன். எனக்கு அது வேண்டாம். அது யாருக்கும் பொருந்தாது." எனக் கூறினார்.[54][55]
பொருளாதாரம்
தொழில்மயமாக்கல் மற்றும் விவசாய வளர்ச்சியால் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அம்பேத்கர் வாதிட்டார்.[56][57] இவர் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, கல்வி, பொது சுகாதாரம், சமூக சுகாதாரம், குடியிருப்பு வசதிகளை அடிப்படை வசதிகளாக வலியுறுத்தினார்.[56] இவர் ரூபாய் நாணயம் அச்சிடுவதை நிறுத்துவதையும், தங்க நாணயத்தை அச்சிடுவதையும் விரும்பினார். இது சரியான விலைகளை நிர்ணயிக்கும் என்று நம்பினார்.[58][59] அரசாங்கங்கள் முடிந்தவரை அசல் நோக்கங்களுக்குப் பணத்தைச் செலவிட வேண்டும் என்றும், அவை பொது நலனுக்காக முடிந்தவரை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்.[60] அம்பேத்கர் விவசாயம் அல்லாத மற்ற தொழில்களுக்கு உழைப்பை செலவிட வேண்டுமென்றும் கருதினார்.[61]
அம்பேத்கர் 1921 ஆம் ஆண்டு வரை தொழில்முறைப் பொருளாதார அறிஞராக பணியாற்றிய போது பொருளாதாரம் குறித்து மூன்று துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.
- கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
- 1921-பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
- 1923-ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்[62][63]
கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.[62][63][64][65]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை

1906 ஆம் ஆண்டில், இவரது 15 ஆவது வயதில், ஒன்பது வயது சிறுமியான இரமாபாய் என்பவரை மணந்தார். அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த வழக்கத்தின்படி, தம்பதியரின் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டுத் திருமணம் நடைபெற்றது.[66] அவரது மனைவி இராமாபாய் 1935 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
1940 ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்திய அரசியலமைப்பின் வரைவை முடித்த பிறகு, அம்பேத்கர் கால்களில் வலி மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டார். நீரிழிவு நோயிற்காக இன்சுலின் மற்றும் ஓமியோபதி மருந்துகளை உட்கொண்டார். சிகிச்சைக்காக பம்பாய்க்குச் சென்ற போது, அங்கு இவர் சாரதா கபீர் என்பவரைச் சந்தித்தார். நல்ல சமையல் மற்றும் மருத்துவ அறிவு கொண்டிருந்த அவரை 1948 ஏப்ரல் 15 அன்று புது தில்லியில் உள்ள இவரது வீட்டில் திருமணம் செய்து கொண்டார்.[67] இவர் சவிதா என்ற பெயரை ஏற்றுக்கொண்டு அவரது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கரை கவனித்துக் கொண்டார்.[68] 'மாய்' என்றும் அழைக்கப்பட்ட சவிதா 2003 மே 29 அன்று தனது 93ஆவது வயதில் மும்பையில் காலமானார்.[69]
மதமாற்றம்

அம்பேத்கர் சீக்கிய சமயத்திற்கு மாறுவதைக் கருத்தில் கொண்டார். ஆனால் சீக்கிய தலைவர்களைச் சந்தித்த பிறகு, இவர் "இரண்டாம் தர" சீக்கியராக தான் நடத்தப்படுவார் என்று முடிவு செய்து அந்த முயற்சியை கைவிட்டார்.[70] 1950 ஆம் ஆண்டில், இவர் பௌத்த மதத்தில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கினார். பௌத்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள இலங்கை சென்றார்.[71] புனே அருகே புதிய பௌத்த விகாரம் ஒன்றை அர்ப்பணித்த போது அம்பேத்கர் பௌத்தம் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதுவதாகவும், அது முடிந்ததும் முறையாக பௌத்த மதத்திற்கு மாறுவதாகவும் அறிவித்தார்.[72] இவர் 1954 இல் இரண்டு முறை பௌத்தர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள பர்மாவுக்குச் சென்றார்.[73] 1955 இல், இவர் பாரதிய பௌத்த மகாசபையை நிறுவினார்.[74] அம்பேத்கர் 1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் ஒரு பொது விழாவை ஏற்பாடு செய்தார். ஒரு பௌத்த துறவியின் முன்னிலையில் பாரம்பரிய முறையில், அம்பேத்கர் தனது மனைவியுடன் மதம் மாறினார். பின்னர் தன்னைச் சுற்றி திரண்டிருந்த ஆதரவாளர்களில் பலரை மதம் மாற்றினார்.[72][75]
மரணம்

1948-இல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும், கண்பார்வை குறைந்ததாலும் 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது.[72] 1955ம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய மூன்று நாட்களுக்குப் பிறகு 1956 திசம்பர் 6இல் தில்லியிலுள்ள இவரது வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.[76] இவரின் உடல் பௌத்த சமய முறைப்படி தாதர் சௌபதி கடற்கரையில் திசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.[77] 1956 திசம்பர் 16 அன்று ஒரு மதமாற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.[78] அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் இவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே இவரது உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர்.[78]
Remove ads
மரபு மற்றும் பண்பாட்டில்

ஒரு சமூக-அரசியல் சீர்திருத்தவாதியாக நவீன இந்தியாவில் அம்பேத்கரின் வாழ்க்கை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.[79][80] சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், இவரது சமூக-அரசியல் சிந்தனை அனைவராலும் மதிக்கப்படுகிறது. இவரது முயற்சியால் சமூக-பொருளாதார கொள்கைகள் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தனிமனித சுதந்திரத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இவர் சாதிய சமூகத்தை விமர்சித்தார். இந்து மதம் சாதி அமைப்பின் அடித்தளம் என இவர் கூறிய குற்றச்சாட்டுகள் சர்ச்சைக்குரியதாகவும், சில இந்துக்கள் மத்தியில் இவரை செல்வாக்கற்றவராகவும் ஆக்கியது.[81] அம்பேத்கரின் தேசியவாத இயக்கத்தின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக சாதிப் பிரச்சினையில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என விமர்சிக்கப்பட்டார்.[82][83] இவர் பௌத்த மதத்திற்கு மாறியது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பௌத்த தத்துவத்தின் மீதான ஆர்வத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது.[84]
இவரது நினைவாக பல பொது நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.[85] 2 ஏப்ரல் 1967 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் 12 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.[86][87][88] 12 ஏப்ரல் 1990 அன்று, அம்பேத்கரின் உருவப்படம் பாராளுமன்ற மாளிகையின் மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[89][90][91][92][93]
Remove ads
கெளரவிப்புகள்
இவர் பாபா சாகேப் ("மதிப்பிற்குரிய தந்தை") என்ற புனைப்பெயரால் குறிப்பிடப்படுகிறார். இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.[94] 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[95] அம்பேத்கரின் 124-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, மன்மத வருடம், சித்திரை 1-ஆம் நாள் (ஏப்ரல், 14, 2015), கூகிள் தன் டூடில் தளத்தில் அம்பேத்கரின் படத்தை வெளியிட்டு கெளரவப்படுத்தியது.[96] மகாராட்டிர அரசின் கல்வித்துறை, அம்பேத்கரின் உரையாடல்களையும், உரைகளையும் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளன.[97]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads